சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்
புது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.
“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.
அவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.
அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.