தமிழகத்துக்கு எரிவாயு
தமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.
இந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
குடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.
ஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.
பெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.