மேடை: கலாமைத் தலையாட்ட வைத்த இஞ்சிக்குடி!
பா. கிருஷ்ணன்
கடந்த ஏப்ரல் முதல் தேதி. தில்லியில் சார்க் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
தில்லி வந்திருந்த சார்க் தலைவர்கள் குடியரசுத் தலைவரையும் பிரதமர், அமைச்சர்களையும் மாறி மாறிச் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையும் பரபரப்பாக இருந்தது.
அவரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வந்த பலர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்களும் காத்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், தில்லி உத்தர சுவாமிமலை ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ஒட்டி மார்ச் 31-ம் தேதி இரவு முருகன் திருவீதியுலாவிலும், மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காலை அபிஷேகத்தின்போதும் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த இஞ்சிக்குடி இ.பி. கணேசனுக்கு ஓர் அதிர்ச்சி, அதே தினம் மாலையில் காத்திருந்தது.
பங்குனி உத்தரத் திருவிழாவின் நிறைவில் ஏப்ரல் 1-ம் தேதி மாலையில் அவரது கச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி சுவாமிநாதன் கச்சேரி முடிந்ததும் அவரிடம் கேட்டது, ஆயிரம் தவில்களை வாசிப்பது போன்ற இனிய அதிர்ச்சியை அளித்தது.
“”நீங்க நாளைக்கு குடியரசுத் தலைவர் முன்னால் நாகஸ்வரம் வாசிப்பீர்களா? அதற்கு ஏற்பாடு செய்கிறோம்” இதுதான் சுவாமிநாதன் கேட்ட கேள்வி.
மறுநாள் அவரது செல்போனில் அழைப்பு வந்தது, மாலை 6 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கச்சேரி நடத்தவேண்டும் என்று.
மாலை 5 மணிக்கே நாகஸ்வரம், தவில், சுருதிப் பெட்டி சகிதம் இ.பி. கணேசன் பார்ட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஜர் ஆனது.
அங்கு, மிக முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கு பெறும் சிறிய அரங்கு உள்ளது. அங்கே கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 5 மணியளவில் 60 பேர் அங்கே நிறைந்துவிட்டனர்.
ஐந்திலிருந்து ஆறுமணி வரை அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெலிதான இசை அரங்கில் தவழ்ந்து கொண்டிருந்தது.
அதேநேரத்தில் தனது அலுவலகத்தில் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டார்:
“”எங்கள் ஊரில் மங்கலமான நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் என்ற அற்புதமான கருவியை இசைப்பது உண்டு. அதன் இசையைக் கேட்க விருப்பமா?” என்றார்.
உற்சாகத்துடன் அவர்கள் தலையை அசைக்க, சரியாக மாலை 6 மணிக்கு விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் சகிதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரங்குக்குள் நுழைந்தார் கலாம்.
முதல் வரிசையில் விசேஷமாக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, கச்சேரியைத் தாளம் போட்டு, தலை அசைத்து ரசித்தார். நாகஸ்வர இசைக் கச்சேரிக்கு 20 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், கலாம் ரசித்ததோ சுமார் 50 நிமிஷம்.
முதலில் ஹம்சத்வனியில் “ரகுநாயகா’ என்ற தியாகையரின் கீர்த்தனை. அடுத்து, பஞ்சரத்தின கீர்த்தனையில் இடம்பெற்ற “எந்தரோமஹானுபாவுலு’; மூன்றாவதாக, பைரவி ஆலாபனையுடன் கூடிய ராகமாலிகை என்று முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசித்தார் கலாம்.
அத்துடன் நிற்கவில்லை. நிகழ்ச்சியை வழங்கிய இஞ்சிக்குடி கணேசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் மரியாதை செய்தபோது, “”மிகக் குறுகிய நேரத்தில் உங்களது இசைத் திறமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்களது தந்தை பிச்சக்கண்ணுப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். அதே கலை உங்களிடமும் உள்ளது, பாராட்டுகள்” என்றார் அப்துல் கலாம்.
ஓர் உண்மையான கலைஞரால்தானே இன்னொரு உண்மையான கலைஞரின் திறமையை முழுமையாகப் பாராட்டமுடியும்! அப்துல் கலாம் விஞ்ஞானி, கவிஞர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞரும் ஆவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!