உ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்
புது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.
ராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.
ரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.
ரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.
சமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.