Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘K Anbazhakan’ Category

Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007


கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை


சென்னை, நவ.28-

1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நினைவுபடுத்தி கொள்கிறேன்

பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

மட்டிலா மகிழ்ச்சி

“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.

சரண்புக மாட்டோம்

தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.

செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஐநூறு கிளைகள்

ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.

நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.

இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.

நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.

மகத்தான இயக்கம்

ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.

நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.

அர்ப்பணிக்க வேண்டும்

நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.

ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.

சமூகநீதி தேவை என்றால்…

1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.

இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அடுத்த திட்டம்

நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.

அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.

கோரப்பசி

ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.

பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.

அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!

வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”

இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in 1950, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anna, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, DMK, Dravidian, dynasty, EVR, Heritage, History, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Ponmudi, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Koilpatti, Kovilpatti, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MK Stalin, Monarchy, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Periyaar, Periyar, Stalin | Leave a Comment »

Madurai CM Mu Ka Alagiri & Mathurai West By-polls – Kalki Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மதுரையில் ஒரு சி.எம். :: இடைத்தேர்தல் ட்ரெயிலர் (கல்கி)
Kalki 24.06.2007

– ப்ரியன்

வேண்டுமென்பதை மாநில அரசு கட்டாயமாக்கியது. சென்னையிலும், திருச்சியிலும் போலீஸ் மிகவும் தீவிரமாக இதை அமல்படுத்துவதைப் பார்த்த நிருபர், மதுரையில் ஜங்ஷனுக்கு எதிரே, ஹெல்மெட் இல்லாமல் சென்ற ஒருவரிடம் “இங்க ஹெல்மெட் கட்டாயம் இல்லையா?” என்று அப்பாவித்தனமாக கேட்க, வாகனத்தில் இருந்தவர் சொன்னார்: “எங்க சி.எம். இதைப் பற்றி ஒண்ணும் சொல்லல.”

நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. “சி.எம்மா” என்று இழுக்க, “அட
புரியலையா? அழகிரி அண்ணன்தான் எங்க சி.எம்.” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்திருக்கிறார் அந்த நண்பர்.

மதுரையில் மட்டுமல்ல, மதுரையை ஒட்டிய சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தேனி மாவட்டங்களின் ஆளுங்கட்சி வட்டாரங்களிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும், உச்சநிலை அதிகார மையமாகத் தெரிபவர் மு.க.அழகிரிதான். டிரான்ஸ்· பர், போஸ்டிங், காண்ட்ராக்ட் என்று எதையெடுத்தாலும், ‘அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்’ என்று நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள் கேட்பது சகஜம். இதுபோன்ற பேச்சுக்கள் கீழ்மட்ட அளவில் பரவ, பாமரர்கள் மத்தியிலும் ஒரு சி.எம்.முக்குரிய இமேஜுடன் வலம் வருகிறார்
அழகிரி.

அழகிரியின் இருபது வருட மதுரை வாசம், அவரை பல விதங்களில் மாற்றியிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார மையமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்படும் சசிகலாவுக்கும்,
அழகிரிக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. இருவரும் வீடியோ கேஸட் கடை வைத்திருந்தவர்கள்தான்.

“1985 – 86 காலகட்டத்தில் முரசொலி மதுரை பதிப்பை பார்த்துக்கொள்வதற்காக வந்தவர். ஒரு ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருப்பார். பின்னர் முரசொலி நின்று போனது. அப்போதுதான் வீடியோ கடை துவங்கினார்” என்று சொல்கிறார் அவருடன் அந்த நாளில் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர்.

கிட்டத்தட்ட 1992 வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் அழகிரி. வைகோ பிரிந்தபோது பொன். முத்து ராமலிங்கம் உடன் சென்று விட, மதுரையில் கட்சி கலகலத்தது. களத்தில் குதித்த அழகிரி, வீடு வீடாகச் சென்று கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து
கட்சியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். 1996-ல் கலைஞர் அரசு வந்தது அவருக்குச் சரியான ஏற்றத்தைக் கொடுத்தது. அதன்பின் மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அழகிரிக்கு என்று கட்சி ¡£தியாக ஒரு பின்பலம் உருவாயிற்று.

கலைஞர் ஆட்சி நடந்த 1996 – 2001-ல் தாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஓர் அதிகார மையமாக இருப்பதை உணர்த்தியவர் அழகிரி.

2000-ம் ஆண்டு நெருக்கத்தில் தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காவிரி மணியத்தை, தான் சிபாரிசு செய்ததாகவும், ஆனால், தி.மு.க. தலைமை கேட்கவில்லை என்றும் சொன்னார்
அழகிரி. இதன் விளைவாக மதுரையில் கலவரச் சூழல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. “அழகிரி கட்சி உறுப்பினரே இல்லை” என்று அறிக்கை விட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன். இந்தக் காலகட்டத்தில் மறைந்த பழனிவேல் ராஜனுக்கும்
அழகிரிக்கும் உரசல்கள் ஏற்பட, கசப்புணர்வு வளர்ந்தது. கடுப்பில் இருந்த அழகிரி, பழனிவேல்ராஜன் உட்பட மூன்று தி.மு.க. வினர் 2001 தேர்தலில் தோற்கக் காரணமாக இருந்தார்” என்கிறார் ஒரு மூத்த உடன் பிறப்பு.

ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம், கட்சி மட்டத்தில் அழகிரியின் இமேஜை உயர்த்திவிட்டது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மேயர் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க, துணை மேயரைத் தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி இல்லை. ஆனால் அழகிரி, எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் வளைத்துப் போட்டு, துணை மேயர் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார். அதே போல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பாக முழு மூச்சாக அச்சப்படாமல் பணியாற்றினார் அழகிரி.

இதற்கிடையே, அழகிரிக்கும் சிவகங்கை தா.கிருஷ்ணனுக்கும் இடையே மோதல் துவங்கியது. அழகிரி சிவகங்கை சிவராமனை உயர்த்தப் பார்த்தார். தா.கி.க்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், டெண்டர், வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள்… அதிகாலை வாக்கிங்கில் தா.கி. கொலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அழகிரி ஒரு மாதம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

2004-ல் தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் அழகிரியின் செல்வாக்கு உயர்ந்தது. 2006 தேர்தலில் தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும். அடித் தளத்தை நன்கு உருவாக்கியிருந்த அழகிரி வசம் சட்ட அங்கீகாரமில்லாத, அதிகார மையம் முழுமையாக வந்து சேர்ந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் என்று போஸ்டிங்கில் வர வேண்டுமென்றால், வந்து நீடிக்க வேண்டுமென்றால் அவரது தயவு தேவையாக இருந்தது.

திருச்சிக்கு அந்தப் பக்கம் உள்ள விவகாரம் என்றால் ‘அழகிரியை ஒரு வார்த்தை கேட்கவும்’ என்கிற எழுதப்படாத விதி உருவாயிற்று.

அழகிரி – ஸ்டாலின் மோதல் வரும் என்ற கிசுகிசுக்கள் உலவி வந்த சமயத்தில், தினகரன் விவகாரம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திவிட்டது. கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு ‘முழுப் பாதுகாப்புடன்’ அவர் வந்து சென்ற விதம், ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், கட்சியின் அரவணைப்பையும் உணர்த்தியிருக்கிறது.

தினகரன் விவகாரம் இல்லையென்றால் தி.மு.க.வே இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும். இப்போது காங்கிரஸ் நின்றாலும்
அழகிரிக்கு இது கௌரவப் பிரச்னை. பிரசாரத்தில் கதர் சட்டைகளைவிட தி.மு.க. படையே முக்கிய இடம் வகிக்கிறது.
அதிகார பலம், பணபலம், ப்ளஸ் ‘தொண்டர்’ பலம் ஆகியவற்றோடு இடைத்தேர்தல் களத்தில் சுற்றி வருகிறார் அழகிரி. காங்கிரசுக்கு
விழும் வோட்டுக்கள் உண்மையில் அழகிரிக்கு விழும் வோட்டுகளே!

– ப்ரியன்

இலவசங்கள் வேண்டாம்… விலைவாசியை குறைத்தால் போதும்!
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
இடைத்தேர்தலால் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகம் மறைவால் நடக்கும் இத்தேர்தலில், தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க.வும், இது அழகிரியின் மானப் பிரச்னை என காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க.வும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில்
குதித்திருக்கின்றன. யார் கை ஓங்கும்? மதுரையை ஒரு ரவுண்ட் வந்தோம்.

மதுரையில் நிஜமான போட்டி என்பது மூன்று வேட்பாளர்களுக்கு இடையே. தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், மு.க.அழகிரிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே. ராஜு மற்றும் தே.மு. தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன். இவர்கள் மூவருமே தொகுதிக்காரர்கள்.
தொகுதிக்குள் பெரும்பான்மையாக வசித்து வரும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.

“மதுரை மேற்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இத்தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் 24,000 வாக்குகள் பெற்றோம். அது போல இருமடங்குகளுக்கு மேலான வாக்குகளை இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பெற்றுவிட்டால், தே.மு.தி.க. வெற்றி பெற்றுவிடும். அதற்கு கேப்டனின் பத்து நாள் மதுரை கேம்ப், வாக்காளர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டு பண்ணிவிடும்!” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கும் 20 வார்டுகளில், கடந்த மாநகராட்சித் தேர்தலில் தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு கவுன்சிலர் தி.மு.க. பக்கம் போய்விட்டார். தற்போது நான்கு வார்டுகள் தே.மு.தி.க. வசம். “நாங்கள் வசிப்பது
22-வது வார்டில். தே.மு.தி.க. வெற்றி பெற்ற வார்டு இது. தி.மு.க.-அ.தி.மு.க. ரெண்டையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டோம். புதுசா ஒருத்தர் வந்து வித்தியாசமா நல்லபடியா ஆட்சி பண்ணட்டும்னு தான் விஜயகாந்த் கட்சிக்கு வோட்டு போட்டு வர்றோம் என்று ஆர்வமுடன் பேசுகிறார் பொன்னகரம் பிராட்வே பகுதியில் வசித்து வரும் லாரி மெக்கானிக் காமாட்சி.

“அம்மாவாகப் பார்த்து எனக்கு அளித்திருக்கும் நல்வாய்ப்பு இது. பொது மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு என்று செல்வாக்குள்ள தொகுதி. ஆளுங்கட்சி செயல்பாடுகள் மீதான அதிருப்தி, விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக வெற்றி உறுதி!” என்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு.

சுயராஜ்யாபுரம் பகுதியில் நெசவாளக் குடும்பங்களில் பலரையும்
சந்தித்தோம். “நெசவாளிகளுக்கென்று நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கறதாச் சொல்றாங்க. அறுவது வயசுக்கு மேற்பட்ட நெசவாளிகளுக்கு மாத பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துட்டா இன்னும் நல்லா இருக்கும். எங்க ஓட்டு தி.மு.க.வுக்கு தான் என்று இணைந்து குரல் தருகின்றனர் ஜானகி (58), ஞானசுந்தர் (32).

ஆனால், செல்லூர் நெசவுக் கூடமொன்றில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி ஒருவர், பட்டிமன்ற ரேஞ்சுக்குப் பொரிந்து
தள்ளிவிட்டார். “ரேஷன் அரிசி தவிர மத்த எல்லா சாமானும் விலை ஏறிப் போச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு கிலோ மிளகாய் முப்பது ரூபா. இப்போ ஒரு கிலோ ஐம்பத்தைஞ்சு ரூபாய் விக்குது. இலவசங்களை நிறுத்தி வைச்சுட்டு, எல்லாப் பொருள்களின்
விலையேற்றத்தையும் குறைச்சாலே போதும்” என்று ‘லெக்சர்’
அடிக்கிறார் சாதாரண கூலித் தொழிலாளியான அங்காள ஈஸ்வரி.

தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட சம்பவத்தை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த அ.தி.மு.க. முனையலாம். அதனை முறியடிக்க துருப்புச் சீட்டு ஒன்றினைத் தன் கைவசம் வைத்துள்ளது தி.மு.க. மூன்றரை வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. வட்டச் செயலாளர் பால்பாண்டி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செல்லூர் ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டது. தினகரன் சம்பவத்தை அ.தி.மு.க. பிரசாரத்துக்குப் பயன்படுத்தினால், அ.தி.மு.க. வட்டச் செயலாளர் கொலைக் குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் ஊதி விடலாம் என அழகிரி தரப்பு வியூகம் அமைத்திருக்கிறது!

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Posted in abuse, ADMK, Alagiri, Alakiri, Analysis, Azhagiri, Azhakiri, By-polls, CM, Congress, DMK, dynasty, Elections, Hegemony, Heritage, hierarchy, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Kalki, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madurai, Mathurai, Mu Ka Alagiri, MuKa Alagiri, Murasoli, Polls, Power, Stalin, support | 1 Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

‘I have no difference of opinion with writer Jeyaganthan’ – Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

ஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்

சென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:

எனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.

தற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

இதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.

“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.

நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.

Posted in Jeyagandhan, Jeyaganthan, Jeyakanthan, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, RM Veerappan, Silamboli Chellappan, Silamboli Sellappan | Leave a Comment »