பாகிஸ்தானில் அரசியல் மாற்றம்?
பொ. லாசரஸ் சாம்ராஜ்
பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முதலாக அந்நாட்டின் தலைமை நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி அதிபர் முஷாரபின் அதிரடி உத்தரவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் அரசியலில் இந்த நடவடிக்கை பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகமும்தான் அவரின் பதவியைப் பறிக்க முக்கிய காரணங்கள் என்கிறார் அதிபர் முஷாரப்.
தலைமை நீதிபதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுக்களை அதிபர் நியமித்துள்ளார். இதில் மூவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் நீதிபதி அப்துல் ஹமீது டோகர் மீது நில மோசடி ஊழல் குறித்தும்; ஹுசைன் சௌத்ரி மீது அவர் மகளுக்கு மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பிற்கு சிபாரிசின் பேரில் இடம் வாங்கியது குறித்தும்; ஷாலத்தி மீது பல்கலைக்கழக நிதி மோசடி குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் தவிர லாகூர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹுசைன் சௌத்ரிக்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியிடம் பல மனக்கசப்புகள் உள்ளன என்பது வெளிப்படை.
இப்படிப்பட்ட நீதிபதிகள் கொண்ட உயர்நிலைக் குழு விசாரணை செய்து கொடுக்கும் தீர்ப்பை தான் ஏற்பதாக முஷாரப் மார்தட்டி அறிவித்துள்ளது வேடிக்கையிலும் வேடிக்கை.
உண்மையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் வேறு பல உள்ளன. நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன நீதிபதி இப்திகார் 2005 ஜூன் 30-ல் பணி மூப்பு அடிப்படையில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் அளித்த சில தீர்ப்புகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. இதனால் இவர் “மக்கள் நீதிபதி’ என்று புகழப்பட்டார்.
பொதுவாக, சர்வாதிகாரிகளும், புகழுக்கு அடிமையான அரசியல் தலைவர்களும், அதிகாரத்தையும், புகழையும் தான் விரும்புகிறவர்களுக்கு மட்டும் பிச்சையிட்டுத்தான் பழக்கப்பட்டவர்களேதவிர, பகிர்ந்தளிப்பவர்களல்ல. இத்துடன் தங்களை எவரும் கேள்வி கேட்பதையோ விமர்சிப்பதையோ இவர்கள் பொறுப்பவர்களல்ல. இதற்கு முஷாரபும் விதிவிலக்கல்ல.
நீதிபதி இப்திகார் மீது முஷாரபுக்கு தீராத வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில முக்கிய வழக்குகள் இன்னும் சில நாள்களில் இப்திகார் முன்பு விசாரணைக்கு வரவிருந்தன.
முதலாவது, இரட்டை குடியுரிமை பெற்றவரான பிரதமர் செüகத் அஜீஸ் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த வழக்காகும். இரண்டாவது வழக்கு அதிபர் முஷாரப் இன்னொரு முறை தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்த வழக்கு.
இவ்விரண்டு வழக்குகளையும் நேர்மையான நீதிபதி விசாரித்து சட்டப்படி தீர்ப்பளித்தால் அதிபர் மற்றும் பிரதமரின் பதவிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த முஷாரப் முந்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.
இந்தப் பிரச்சினை முதன்முறையாக பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளையும், பெரும்பாலான வழக்கறிஞர்களையும், பொது மக்களையும், மக்கள் தொடர்பு சாதனங்களையும், மாணவர்களையும், ஓரணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், இந்தப் போராட்டம் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. முதலாவது, பாகிஸ்தான் வரலாற்றில் அமைதியாக எந்த பெரிய அரசியல் மாற்றமும் ஏற்பட்டதில்லை. இரண்டாவது, மக்கள் ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தாலும், ராணுவ ஆட்சிக்குப் பழக்கப்பட்டு போனவர்கள். மூன்றாவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும், தனிநபர், பிராந்தியம், மதத்தை மையமாகக் கொண்டும் பிரிந்து கிடக்கின்றன.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்னால்டு டாயன்பி ஓர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டார். அதில் பிரதானமானது நீதித்துறையில் வளரும் ஊழல்.
இரண்டாவது, கல்வித்துறையில் உள்ள ஊழல். இவை இரண்டும் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியாவிலும் நச்சு விதைகளைப் பரப்பும் பெரும் மரங்களாய் பல்கிப் பெருகி வருகிறது.
பிறர் தவறிலிருந்து பாடம் படிப்பவன்தான் சிறந்த மாணவன். அதுபோல, பிற நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இல்லையென்றால், எதிர்கால இந்தியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவை சுயபரிசோதனை.
(கட்டுரையாளர்: பேராசிரியர், அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறை, புதுவை பல்கலைக்கழகம்).
பாகிஸ்தானில் 7 நீதிபதிகள் பதவி விலகல்
 |
 |
இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி |
பாகிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகர் முகமது சௌத்திரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஏழு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.
கடந்த வாரம் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக் கூறி தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இது வரை எட்டு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பல வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தலைமை நீதிபதியின் பதிவி நீக்கம் நீதித் துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை தாம் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு கடுமையானது: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் விளக்கம்இஸ்லாமாபாத், மார்ச் 20: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள இஃப்திகார் செüத்ரி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்தார்.”தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலும் கிடையாது. பெஷாவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஃப்திகார் மீது சில குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மார்ச் 5-ம் தேதி எனக்கு அனுப்பியிருந்தார். நாட்டின் மிக உயரிய பதவியில் இருப்பவர் என்பதால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முதலில் இது குறித்து தெரிவித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் அதற்கு அளித்த பதில் திருப்தியைத் தரவில்லை.இந் நிலையில் தலைமை நீதிபதியே என்னைச் சந்தித்து நேரில் விளக்கம் அளித்தார். அப்போது நான் குற்றச்சாட்டையும், அதற்கு தரப்பட்ட ஆதாரத்தையும் அவரிடம் தெரிவித்தேன். அவரால் சரியான பதிலைத் தர முடியவில்லை.இந் நிலையில்தான் அவரைத் தாற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்குள் இந்த விஷயம் அரசியல் எதிரிகளால் திரித்து பிரசாரம் செய்யப்பட்டது. “”ராணுவ ஆட்சியாளர் நாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் காலில்போட்டு மிதிக்கப் பார்க்கிறார்” என்று ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தவறான பிரசாரம் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் சர்வதேச அரங்கிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதி பகவன்தாஸ் இப்போது இந்தியாவில் யாத்திரை சென்றிருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை நாடு திரும்புகிறார். இஃப்திகார் மீதான குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரங்களும் அவர் தலைமையிலான பெஞ்சிடம் அளிக்கப்படும். அதன் பிறகு அவர் முடிவெடுக்கட்டும். அதுவரை காத்திருக்கத் தயார்.
தன் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதைத் தடுக்கவும், தன்னைத் தியாகியாகச் சித்திரித்துக் கொள்ளவும் நீதிபதி இஃப்திகார் செüத்ரி முற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் நீதித்துறைக்கு நன்மை ஏதும் விளையாது’ என்றார் அதிபர் பர்வீஸ் முஷாரப். குவெட்டாவிலிருந்து வந்திருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களிடம் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.
அந்த குற்றச்சாட்டுகள்தான் என்ன என்று கேட்டபோது, விஷயம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை வெளியே தெரிவிப்பது முறையாகாது என்றார் முஷாரப்.
6 நீதிபதிகள் ராஜிநாமா முடிவு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்திகார் செüத்ரிக்கு ஆதரவாக, தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த 6 நீதிபதிகள் முன்வந்துள்ளனர். இவர்களில் ரமேஷ் சந்திர என்பவர், தாற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பகவன்தாஸின் மாப்பிள்ளை ஆவார். மற்ற நீதிபதிகளின் பெயர்கள் வருமாறு:
- அஷ்ரஃப் யார் கான்,
- முஸ்தஃபா சஃபி,
- ஈஷான் மாலிக்,
- அல்லா பச்சாயோ கபூல்,
- பிர் அசதுல்லா ஷா ரஷ்டி.
================================================================================
தலைமை நீதிபதி நீக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குவோம்: பாக். அரசு உறுதிமொழி
இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.
இஃப்திகார் முகமது மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறும் எண்ணமில்லை எனவும் அரசு மறுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், எதிர்ப்பின் வேகத்தைத் தணிப்பதற்காகவே பாகிஸ்தான் அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.
முஷாரப்பின் 8 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அதிபர், பிரதமர் மற்றும் எம்.பி.களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; முற்றிலும் அரசமைப்புச் சட்டம் தொடர்பான இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளை அனுமதிக்கக் முடியாது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. உச்ச நீதிமன்ற குழு வழங்கும் தீர்ப்பு எதுவாயினும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.
வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்கும் (எதிர்க்கட்சிகளின்) முயற்சிகளை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என முஷாரப் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஃப்திகார் முகமது செüத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி போராடி வரும் எதிர்க்கட்சிகள் ஜனநாயக மீட்புக் கூட்டணியை அமைத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் அரசு ஏராளமான எதிர்க்கட்சி தொண்டர்களை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது.
================================================================================
முஷாரப் திறமையான பொய்யர்: பாக். மனித உரிமைக் கமிஷன் தலைவர் தாக்கு
நியூயார்க், மார்ச் 27: “அதிபர் பர்வீஸ் முஷாரப் ஒரு திறமையான பொய்யர்’ என கூறியுள்ளார் பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர்.
“ஆனால் முஷராபின் பிடி நழுவி வருகிறது; எல்லா இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது’ என கூறியுள்ளார் அவர்.
தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரியை, முஷாரப் பதவி நீக்கம் செய்துள்ள விவகாரம் குறித்து குறிப்பிட்ட அஸ்மா, முஷாரப் மீண்டும் ஒரு முறை பொய் சொல்வதுடன், அனைவரையும் திசை திருப்புகிறார். அவரது இந்த நடவடிக்கை, அவரே கூறியுள்ளது போல இயல்பானதோ அல்லது வழக்கமானதோ அல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நீதித்துறையை முஷாரப் சீர்குலைப்பது இது முதல்முறை அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனே, அதிபருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வலியுறுத்தியவர் அவர்.
அதிபராகவும், ராணுவத் தலைமைத் தளபதியாகவும் முஷாரப் இரட்டைப் பதவி வகிப்பதற்கு எதிராக இப்திகார் உத்தரவிடலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை ஏற்க முடியாது. இப்திகார் உள்ளிட்ட எந்த நீதிபதிக்கும் அத்தகைய துணிச்சல் கிடையாது.
நீதிபதி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் மாதக் கணக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், வேலைநிறுத்தத்திலும் ஈடுபட முடியாது. எனவே அவர்களது போராட்டம் விரைவிலேயே உருக்குலைந்து போகும்.
பாகிஸ்தானில் காணாமல் போனவர்கள் பற்றி கவலை தெரிவித்து, அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் முஷாரப். காணாமல் போனவர்கள் தீவிரவாதிகள் என உலகை நம்ப வைக்க முயற்சிக்கிறார் அவர். ஆனால் அது உண்மை அல்ல. காணாமல் போன 141 பேரில் 60 -70 சதவீதம் பேர், சிந்தி மற்றும் பலூச் தேசியவாதிகள். அவர்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள். சிலர் நாடு முழுவதும் நன்கறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்களுக்கும் தலிபான், அல்-காய்தா போன்ற அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்த விஷயத்தில் முஷாரப் புளுகுகிறார்.
காணாமல் போனவர்களை அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இப்திகார் முகமது உத்தரவிட்டது பற்றி அஸ்மாவிடம் கேட்கப்பட்டது.
இப்திகார் செüத்ரி காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் உத்தரவும் வழங்கவில்லை. மனித உரிமை ஆணையத்தின் புகாரை ஒன்றரை மாதங்கள் அவர் நிலுவையில் வைத்திருந்தார். வேறு வழியில்லாமல்தான் அந்த வழக்கை அவர் விசாரணைக்கு ஏற்றார்.
அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை. அவர் செய்ததெல்லாம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போகும்போது எந்த நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியும் என்றார் அஸ்மா ஜஹாங்கீர்.
================================================================================
பாக். தலைமை நீதிபதியான பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தை படித்து பதவியேற்பு
இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த ராணா பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தைப் படித்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பாகிஸ்தானில் 1985-ம் ஆண்டு ஜெனரல் ஜியா-உல் ஹக் சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டத்தை ஏற்படுத்தினார்.
அச்சட்டத்தின்படி நீதிபதிகள் பதவியேற்பு உரையில் “”அல்லாவே என்னை வழிநடத்து, எனக்கு உதவி செய்” என்ற குர்-ஆன் வாசகம் இடம் பெற்றது. அதுவே வழக்கமாக இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் தாற்காலிக தலைமை நீதிபதியாக இந்து மதத்தைச் சேர்ந்த பகவான்தாஸ் நியமிக்கப்பட்டதை உலகமே கவனித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் திரும்பிய அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
================================================================================
பஜூர் பழங்குடிகளுடன் பாக். சமரச உடன்பாடு
இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பஜூர் பழங்குடி இனத்தவருடன் சமரச உடன்பாட்டை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் பழங்குடி மக்களுடன் பாகிஸ்தான் அரசு (ராணுவம்) செய்துகொள்ளும் இரண்டாவது சமரச உடன்படிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
“வெளி நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவரையும் பழங்குடிகள் தங்கள் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்; எதற்காகவும் இரக்கப்பட்டு புகலிடமும் தர மாட்டார்கள். இதற்குப் பிரதிபலனாக, பழங்குடி பகுதிகளில் எந்தவித ராணுவ நடவடிக்கையாக இருந்தாலும் அதை பழங்குடிகளின் தலைவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துக்குப் பிறகே எடுக்கப்படும்.
“பழங்குடி மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் மதிக்கப்படும். அவர்களுடைய சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கிலும், நடவடிக்கைகளிலும் அரசோ, ராணுவமோ குறுக்கிடாது’ என்பதுதான் உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும்.
இதன் மூலம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பழங்குடி மக்களுக்குள்ள தனிச் சிறப்புகளும், சுயேச்சை உரிமைகளும் அரசால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பஜூர் பழங்குடிகளுக்கு முன்னதாக, மாமுண்ட் என்ற பழங்குடிகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்னால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பஜூர் பழங்குடிகள், தலிபான் பழங்குடிகளுக்கும் அவர்களின் தலைக்கட்டுகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்குடிப் பகுதிகளில் உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் நடந்த மோதலில் 100 பேருக்கும் மேல் இறந்தனர். சமீபத்தில் நடந்த இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசையே குற்றஞ்சாட்டியது அமெரிக்க அரசு.
வசீரிஸ்தான் பகுதியில் பழங்குடிகளுக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தித் தருகிறது இத்தகைய உடன்படிக்கைகள் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இத்தகைய அதிகாரத்தால் அவர்கள் தலிபான்கள், அல்-காய்தா போன்ற அமைப்புகளை ஆதரிப்பதற்கு ஊக்கம் பெறுகிறார்கள் என்று சாடியது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தான் இதற்கு நேர்மாறாக நினைக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பலப்பரீட்சையைத் தவிர்த்துவிட்டால், அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்கிறது பாகிஸ்தான்.
கடந்த சில வாரங்களாகவே அன்னிய நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பழங்குடிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவே தங்களுடைய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறது பாகிஸ்தான் அரசு.
வசீரிஸ்தான் பிரதேசத்தில் பஜூர் பழங்குடிகள் பகுதியில் உள்ள மசூதியில் அல்-காய்தா தீவிரவாதிகளும் தலிபான்களும் பதுங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க வான்படையும் சில மாதங்களுக்கு முன்னால் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் இறங்கின.
இதில் 80-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முஸ்லிம் மதப்பள்ளிக்கூடம் ஒன்று தரைமட்டமானது. அதில் படித்த அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அரசு மனம் மாறியது. அமெரிக்காவின் ஆலோசனையை உதறித்தள்ளிவிட்டு, பழங்குடிகளுடன் சமாதான ஒப்பந்தங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.
===========================================================
பாக். உளவுத்துறை அதிகாரி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத், மார்ச் 29: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி மாஜ் ஹம்ஸôவும் அவருடன் காரில் வந்த மேலும் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாஜ் ஹம்ஸô உள்ளிட்ட 6 பேர் பெஷாவரில் இருந்து கர் என்ற பகுதிக்கு காரில் வந்துகொண்டு இருந்தனர். ராஷாகாய் என்ற பகுதியில் கார் வந்தபோது மறைந்திருந்த சிலர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மாஜ் ஹம்ஸô, பணியாளர் சுபேதார் சய்யீத், 2 மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டனர். கார் டிரைவர், மற்றொரு மலைவாசி ஆகியோர் காயங்களுடன் தப்பினர்.
வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் பழங்குடியினத் தலைவரின் அனுமதி பெற்றே எடுக்கும் என்று பஜூர் மற்றும் மாமுண்ட் இன மக்களிடம் பாகிஸ்தான் உடன்படிக்கை செய்து கொண்டது. இது பிடிக்காத சில தலிபான் ஆதரவு சக்திகள் அப்பகுதியில் அமைதியைக் கெடுக்கும் முயற்சியாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
தெற்கு வஜிரிஸ்தானில் பழங்குடியினர் வாழும் டேங்க் பகுதியில் நடந்த தீவைப்பு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 6 வங்கிகளைக் கொள்ளையடித்து அவற்றுக்கு தீ வைத்தனர் என போலீஸôர் தெரிவித்தனர். அப்பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
மற்றொரு சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் ஃபரீத் மெசூத் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய 12 தீவிரவாதிகள் அவரையும், அவருடைய சகோதரரையும் துப்பாக்கி முனையில் கடத்தினர்.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீதான விசாரணை இடை நிறுத்தம்
 |
 |
பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி |
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்திரி அவர்களுக்கு எதிரான, தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்கான நீதி விசாரணையை பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம் குறித்த சௌத்திரி அவர்களின் சாவலை கையாண்டு முடிக்கும் வரை இந்த விசாரணையை ஆரம்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சௌத்திரி அவர்கள் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதிபர் முஷாரப் அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் சௌத்திரியை பணி இடைநீக்கம் செய்தார்.
சௌத்திரி அவர்களின் நீக்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள், இராணுவ ஆட்சிக்கு எதிரான பரந்துபட்ட போராட்டமாக மாறியுள்ளதுடன், 7 வருடங்களுக்கு முன்னர் அதிபர் முஷாரப் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றியது முதல், இன்று வரையிலான காலப்பகுதியில் அவரது நிர்வாகத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�
உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!
உ .ரா. வரதராசன்
ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.
உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.
தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?
இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’
நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!
நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!
நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.
நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.
அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.
வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?
நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.
உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)
——————————————————————————————————-
மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?
வெ. ஜீவகுமார்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.
அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.
நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.
20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.
இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.
உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.
14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.
மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!
Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »