Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Judgements’ Category

State of the Justice system & Judiciary process in Tamil Nadu – Law & Order perspectives

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஏன் இந்த பாரபட்சம்?

மற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.

அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

மற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி?

கடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.

மும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை!

———————————————————————————————————–

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி

கே.வீ. ராமராஜ்

குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.

நான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.

நமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.

குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.

காவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

தேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.

மேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.

Posted in Accused, Allegations, Allocations, Attorney, Bench, Budget, Cabinet, Center, Convicts, Courts, Criteria, Culprits, Economy, Funds, Govt, HC, HR, Judgements, Judges, Judgments, Judiciary, Jury, Justice, Law, Lawyers, Ministry, Numbers, Op-Ed, Order, Perspectives, quantity, rights, SC, selection, Sentence, Sentencing, Tamil Nadu, TamilNadu, Verdicts | Leave a Comment »

Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�

உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!

உ .ரா. வரதராசன்

ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.

உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.

தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?

இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’

நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!

நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!

நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.

நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.

வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?

நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.

உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

 

——————————————————————————————————-

மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?

வெ. ஜீவகுமார்

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.

நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.

20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.

இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.

உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.

மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!

Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »