Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Judgement’ Category

Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�

உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!

உ .ரா. வரதராசன்

ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.

உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.

தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?

இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’

நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!

நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!

நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.

நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.

வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?

நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.

உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

 

——————————————————————————————————-

மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?

வெ. ஜீவகுமார்

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.

நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.

20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.

இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.

உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.

மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!

Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »

Irrespective of decree, govt can acquire private land: SC

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உரிமையாளருக்கு சாதகமாக ஆணை இருந்தாலும் பரவாயில்லை நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, பிப். 12: நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கை வெளியிட்டால் அதை தவறான நோக்கத்தில் வெளியிட்டதாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே.தாக்கர், லோகேஷ்வர் சிங் பென்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன தீர்ப்பை பிறப்பித்தது.

உரிமையாளருக்கு ஆதரவாக சிவில் கோர்ட் ஒன்று தீர்ப்பு பிறப்பித்த பிறகு அந்த நிலத்தை கையகம் செய்யலாம் என்று அறிவிக்கை பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று தனி நீதிபதியும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சும் தீர்ப்பு பிறப்பித்திருந்தன.

கர்நாடக மாநிலம் தொடர்பானது இந்த வழக்கு. அரசு நிறுவனமான எச்எம்டி, கடிகார தொழிற்சாலை அமைப்பதற்காக தேவராயபட்டினத்தில் பல்வேறு சர்வே எண்கள் கொண்ட 120 ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தியது.

இந்த 120 ஏக்கரில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முத்தப்பா குடும்பத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடர்பாக முத்தப்பா என்பவர் பிரச்சினை எழுப்பியிருந்தார்.

எமது குடும்பத்தைச் சேர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட படி விட்டுக் கொடுத்தோம். ஆனால் அதற்கு மேலாக சிறிது நிலத்தை எச்.எம்.டி ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து காலி செய்ய மாட்டோம் என்று முறையிட்டார் முத்தப்பா.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிவில் கோர்ட், எச்எம்டி ஆக்கிரமித்த நிலத்தை உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எச்எம்டி அப்பீல் செய்தபோதும் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எனினும் சிவில் கோர்ட் உத்தரவை எச்எம்டி ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசை அணுகி அந்த நிலம் தொடர்பாக புதிய அறிவிக்கையை பிறப்பிக்கும்படி கோரியது. இதனால் உயர்நீதிமன்றத்தை நில உரிமையாளர் அணுகினார். இதையடுத்து தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் நிலத்தை கையகப்படுத்தி அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்று தீர்ப்பு வெளியிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எச்எம்டி.

Posted in appellate authorities, authorities, CK Thakkar, CK Thakker, Courts, decree, encroachment, Government, High Court, HMT, Industrial Area Development Board, Judgement, Jury, Justice, Karnataka, Land Acquisition, Land Acquisition Act, Law, Logeshwar singh Benda, Lokeshwar Singh Penta, Muthappa, Order, private land, Property Ownership, Public Property, Supreme Court | Leave a Comment »

Libyan Court Sentences Health Workers to Death in AIDS Case

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

குற்றஞ்சாட்டப்பட்ட சிலர்
 

நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

இது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.

இவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in AIDS, Benghazi, Bulgaria, Capital punishment, Children, conviction, Death Sentence, HIV, Judgement, Jury, Law, Libya, Murder, Nurses, Order, Palestine, Poor, Tamil, Virus | Leave a Comment »

‘Pookkadai, Purasaiwakkam, Pondy Bazaar Shops should be removed by Pongal’

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பூக்கடை, புரசைவாக்கம், பாண்டி பஜார் நடைபாதை கடைகளை பொங்கலுக்குள் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு வற்புறுத்தல்

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் முக் கிய இடங்களில் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

இந்த குழு நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.அதில் பூக்கடை பகுதி என்.எல்.சி. போஸ் ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், பார்க் டவுன் ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி அல்லிகுளம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை போல புரசைவாக்கம் பகுதி கடைகளையும் அகற்றி அல்லிகுளத்திற்கு கொண்டு வர வேண்டும். பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளை அந்த பகுதியில் 4 மாடி கட்டி டம் ஒன்று கட்டி அங்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.

இந்த அறிக்கை அடிப்படை யில் இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்த அறிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அறிக்கையின் அடிப்படையில் பொங்கலுக்குள் கடைகளை அகற்ற வேண்டும். மாற்று இடங்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இது தொடர்பான முழு தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று கூறினார்கள்.

Posted in Allikulam, Association, Congestion, High Court, Judgement, Madras, Merchants, NSC Bose Road, Police, Pondy Bazaar, Pongal, Pookkadai, Purasaiwakkam, Ramasamy, Removal, Shops, Small Business, Street Vendors, Traffic | 2 Comments »

Catholic MP loses seat for ‘misusing’ Pope’s name

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கொச்சி, நவ. 1: முன்னாள் மத்திய அமைச்சரும் கேரளத்திலுள்ள மூவாட்டுப்புழா தொகுதி எம்.பி.யுமான பி.சி.தாமஸ் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே 10-ம் தேதி மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மூவாட்டுப்புழா தொகுதியில் இந்திய பெடரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எம்.இஸ்மாயில் போட்டியிட்டார்.

529 வாக்குகள் வித்தியாசத்தில் தாமஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு எம்.பி.யானார். இந்தத் தேர்தலில் முறைகேடு மூலம் தாமஸ் வெற்றி பெற்றதாகக் கூறி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இஸ்மாயில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் 81 பக்க தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தேர்தலில் தாமஸ் முறைகேடு செய்தது உறுதியாகத் தெரியவந்துள்ளது. கத்தோலிக்க வாக்காளர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரி மூவாட்டுப்புழா தொகுதியில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை தாமஸ் விநியோகித்துள்ளார். மதத்தின் பெயரால் இவ்வாறு வாக்கு கோருவது மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தவறான செயலாகும்.

துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்க ஏற்பாடு செய்தது, அவற்றை அவர் விநியோகித்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இஸ்மாயில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர் தாமஸ். அண்மையில் கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இவர் இணைந்தார்.

Posted in Campaign, catholicism, Christianity, CPI(M), Elections, Islam, John Paul II, Judge, Judgement, Kerala, Moovaattupuzha, MP, Muvattupuzha, PC Thomas, PM Ismail, Politics, Pope, Religion, voter | Leave a Comment »

‘SC Opinion on Creamy Layer is unfortunate’ – CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்

புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;

நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.

இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.

இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

Posted in Affluent, AP, Chandrababu Naidu, Communist, CPI(M), Creamy Layer, Judgement, Marxist, Oppression, Reservations, Rich, SC/ST, scheduled castes, scheduled tribes, Second generation, Supreme Court, Telugu, Telugu Desam | Leave a Comment »