முன்னாள் மத்திய அமைச்சர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கொச்சி, நவ. 1: முன்னாள் மத்திய அமைச்சரும் கேரளத்திலுள்ள மூவாட்டுப்புழா தொகுதி எம்.பி.யுமான பி.சி.தாமஸ் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு மே 10-ம் தேதி மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மூவாட்டுப்புழா தொகுதியில் இந்திய பெடரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எம்.இஸ்மாயில் போட்டியிட்டார்.
529 வாக்குகள் வித்தியாசத்தில் தாமஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு எம்.பி.யானார். இந்தத் தேர்தலில் முறைகேடு மூலம் தாமஸ் வெற்றி பெற்றதாகக் கூறி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இஸ்மாயில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் 81 பக்க தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
தேர்தலில் தாமஸ் முறைகேடு செய்தது உறுதியாகத் தெரியவந்துள்ளது. கத்தோலிக்க வாக்காளர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரி மூவாட்டுப்புழா தொகுதியில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை தாமஸ் விநியோகித்துள்ளார். மதத்தின் பெயரால் இவ்வாறு வாக்கு கோருவது மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தவறான செயலாகும்.
துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்க ஏற்பாடு செய்தது, அவற்றை அவர் விநியோகித்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இஸ்மாயில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர் தாமஸ். அண்மையில் கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இவர் இணைந்தார்.