மறைந்த ஜனாதிபதிக்கு மண்டேலா அஞ்சலி
செவ்வாய்க்கிழமையன்று, இறந்த, 90 வயதான முன்னாள் தென்னாப்ரிக்க அதிபர் பி.டபிள்யூ,போத்தாவிற்கு அஞ்சலி தெரிவித்து நெல்சன் மண்டேலா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
![]() |
![]() |
முன்னாள் அதிபர் போத்தா |
முன்னாள் அதிபர் போத்தா நிறவெறிக்கொள்கையின் ஒரு குறியீடாகவே விளங்கினார் என்றும், ஆனால், அவர் நாட்டில் ஒரு அமைதியான பேச்சுவார்த்தைமூலமான, தீர்வை நோக்கிய நடவடிக்கைகளை பின்னார் எடுத்தார் என்பதையும் நெல்சன் மண்டேலா நினைவு கூர்ந்தார்.
தேசத்தின் ஒரு முன்னாள் தலைவர் என்ற வகையில், போத்தாவுக்கு அரசரீதியான இறுதிச்சடங்குகள் பெறுவதற்கு உரிமை இருந்தது என்றாலும், அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
போத்தா, நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய மறுத்தற்காகவும், நிறவெறிக்கொள்கை அமைப்புக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை அடக்க செய்த முயற்சியில் தோல்விகண்டதற்காகவும், அவசர நிலைப் பிரகடனத்தைச் செய்து ஆட்சி செய்தற்காகவுமே நினைவு கூறப்படுவார் என்று பிபிசியின் தென்னாப்ரிக்கச் செய்தியாளர் கூறுகிறார்.