தவறான பாதை; தவறான பார்வை
பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.
மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.
9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.
இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.
இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.
அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!
இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.