“பஞ்சமி நிலம்’-தேடலும் தீர்வும்!
செ.கு.தமிழரசன்
பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்…, பஞ்சமி நிலம் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை…, பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை தலித் இயக்கங்களின் போராட்டங்களில் அதிகமாகக் கேட்கலாம். கழகங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் பஞ்சமி நிலத்தைப் பற்றி பேசத்தான் செய்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளிலும் பஞ்சமி நிலம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பஞ்சமி நிலத்தின் பின்னணியைப் பார்ப்பது அவசியம்
“இந்தியா’-என்றொரு நாடு இல்லாமலிருந்த காலகட்டம் அது. புரோகிதத் தொழில் புரியும் பிராமணர்களுக்கு கையடக்க நிலம் கொடுத்த நிலை வளர்ந்து, கிராமத்தையே தானமாகக் கொடுக்கும் நிலை வந்தது. இதற்கு “சதுர்வேதி மங்கலம்’ என்னும் நாமகர்ணம் சூட்டப்பட்டது. இது பின்னர் மதியூகி மந்திரிகளுக்கும் மண்ணுரிமை என்று விரிந்து, இறுதியில் அரசனுக்குப் பிடித்த புலவனுக்கும் போய்ச் சேர்ந்து. இதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் உள்ளன.
1600-ல் தான் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. 1611-ல் மசூலிப்பட்டணத்தில் தனது வணிகக் கிளையைத் தொடங்கிய கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிலங்களை- ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்கிச் சேர்த்த தொடர்பணியில் 1641-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையை கட்டியது. வியாபாரக் கம்பெனி வாங்கிப்போட்ட ராஜ்ஜியத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்ட நிலவரியை வசூல் செய்து, அதற்கு நிர்வாக ரீதியான சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டது. அதற்கான ஆட்களையும் நியமித்தது. அந்த வகையில் “ஜாகிர்தாரி முறை’ அமலுக்கு வந்தது.
இந்நிலையில், கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் பேரரசு தனது நேரடி அதிகாரித்துக்கு 2.8.1858-ல் மாற்றிக்கொண்டது. அதன் பின்னர் ஏற்பட்ட நிர்வாகச் சீர்திருத்தத்தில் நிலச்சீரமைப்பும் மாற்றம் பெற்றது.
சதுர்வர்ண சாதிய அமைப்புக்கு அப்பாற்பட்ட “அவர்ணா’ என்ற மக்கள் திரள் எவ்வித மனித உரிமையுமின்றி, ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எண்ணற்றத் தடைகளைப் போட்டு, கொத்தடிமைகளை விடக் கேவலமாக தீண்டாமைக் கொடுமைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் தமிழ்நாட்டில் பள்ளு-பறை பதினெட்டு சாதி என்று குறிப்பிடப்பட்டாலும் “பஞ்சமர்’ என்ற ஒரு பெயருக்குரியவர்களானார்கள். இவர்களுக்கான மனித உரிமை வேண்டி, பண்டிதர் அயோத்திதாசர் முதல் எண்ணற்ற தலைவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் இரக்கம் காட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர், அன்றைய செங்கல்பட்டு ஜில்லா கலெக்டராக இருந்த “ட்ரிமென்கிரி’ என்பவர். இவர் இம் மக்களின் அன்றாடத் துயரங்களை ஆராய்ந்து, அதற்கு வடிகாலாக இவர்களுக்கு நிலமான்யம் வழங்க வேண்டிய அவசியத்தை மேலிடத்தில் வலியுறுத்தினார்.
அதன் விளைவாக 1891-ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கும் பிரச்னைக்கு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசாணை எண்.1010, 30-9-1892-ல் வெளியானது. இதனடிப்படையில் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு, பஞ்சமர்களுக்கு டி.சி.லேண்ட் என்ற பெயரில் நிலங்களைப் பகிர்ந்தளித்தது. இதுவே “பஞ்சமி நிலம்’ என்று பெயர் பெற்றது. இந்நிலங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டன.
நிலம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் அதை எவருக்கும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அது செல்லுபடியாகாது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்நிலத்தை பஞ்சமர்களுக்குள்ளே மட்டும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ செய்யலாம்.
இத்தகைய கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில், என்னதான் நிலமிருந்தாலும் அதில் பயிர் விளைவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் அந்நியரையே சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இம்மக்களின் வாழ்நிலை அமையப்பட்டிருந்தால் சுலபமாக வஞ்சிக்கப்பட்டனர். அதனால் இவர்களின் நிலங்களை அந்நியர்கள் கைப்பற்றினர். சிலர் வறுமையினால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாய் விற்றனர்.
இந்த இழிநிலையைக் கண்ணுற்ற சமுதாயத் தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், சிவராஜ், எம்.சி.ராஜா போன்றவர்கள் மீண்டும் உரிமை மீட்க வாதாடியதால், 1933-ல் பஞ்சமி நிலங்களுக்கான பட்டாக்களை புதுப்பித்து வழங்கியது பிரிட்டிஷ் அரசு. மேலும் விதிமுறையை வலியுறுத்தி நிலையான அரசாணை 1.10.1941-ல் வெளியிட்டது.
ஆனாலும் பஞ்சமி நிலங்கள் அப்பாவி மக்களிடமிருந்து பறிமுதலாவதை முற்றிலுமாய் நிறுத்த முடியவில்லை. செங்கை மாவட்டத்தில் காரணை, கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை 10-101994-ல் சந்திக்க வந்த தலித் மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால், இரு இளைஞர்கள் பலியானார்கள். இதையொட்டி கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்று தலித் இயக்கங்களால் தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.
இன்றைய நிலையில் “பஞ்சமி நிலம்’ பல கை மாறியிருக்கும். ஆனாலும் மூலப் பத்திரத்தை பார்ப்பது என்பது கடினமல்ல. ஏனெனில், நிலங்களைப் பற்றிய நிலையான பதிவேடுகள் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஓட்டு மொத்த பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை 1832-லிருந்தே திரட்டிக் கொள்ளலாம்.
ஆனால், இதற்கு அரசு நிர்வாகம் வேகமாக முடுக்கிவிடப்படவேண்டும். தன்னலமர்ற அர்ப்பணிப்பு மனோநிலை கொண்ட ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பஞ்சமி நில மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அது யாரிடம் உள்ளது, என்ன நிலை, மீட்பது எப்படி என்பது ஒரு கேள்விக்குறி. அடுத்தது அந்த நில உரிமையாளர்களைக் கண்டறிந்து பணத்தை யாரிடம் திருவது என்பதும் மற்றொரு கேள்வி.
பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் எப்படிச் செயலாக்கப் போகிறது என்பதை இதுவரை எடுத்துரைக்கவில்லை. ஆனால், ஏழை விவாசயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலமென்று யார் யாருக்கோ, எங்கெங்கோ பூதானம் செய்து கொண்டிருக்கிறது.
“”ஆண்டுக்கு ஏழாயிரம் தலித் குடும்பங்களுக்கு நிலம் வாங்க, தலா இரண்டு லட்சம் ரூபாய் அதிக பட்சக் கடனாக வழங்குவது, அதில் ஒரு லட்சம் ரூபாயை மானியமாக தருவது” என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள தலித் மக்களில் தொண்ணூறு சதவீதம் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள்தான். இவர்களைக் கணக்கெடுத்து ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிலம் வாங்க கடன் வழங்கத் தொடங்கினாலே, பத்தாண்டுக்குள் அப்பணி முழுமை பெற்றுவிடும். தமிழக அரசு இதை நிறைவேற்ற வேண்டும்.
காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க உரிமையில்லை. காஷ்மீர் நிலம் காஷ்மீரியர்களுக்கே என்பது சட்டமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு நிலம் வழங்க திட்டமிடுவதும் சாத்தியமே.
தமிழக அரசு, பஞ்சமி நிலத்தை மீட்க கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டப்படி தற்போது கிட்டத்தட்ட தொண்ணூறு ஆயிரம் பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பலனைப் பெற்றவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தானேயொழிய, தலித் மக்களல்ல. அதிலும் நிலம் பெற்ற குறைந்த அளவு தலித் மக்களும் தாங்கள் ஏற்கெனவே அனுபவ பாத்தியதையில் வைத்துள்ள சிறிதளவு புறம்போக்கு நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக புலம்புகிறார்கள். இவையெல்லாம் ஏழை தலித் மக்களை ஏமாற்றும் செயலாகவே தோன்றுகிறது.
தங்களுக்குரிய பஞ்சமி நிலம் மீட்கப்படும் வரை தலித் மக்களின் போராட்டம் தொடரும். அரசு என்ன செய்யப்போகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து, பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரப் போகிறதா ? அல்லது கனிவான நடவடிக்கை எடுத்து பஞ்சமர்களுக்கு நிலத்திற்காக ஈடுகட்டப்போகிறதா? தலித் மக்கள் தமது பஞ்சமி நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்- நாளை தலைமுறை அந்த வெற்றியில் திளைக்கும் என்ற நம்பிக்கையில்!
(கட்டுரையாளர்-தலைவர், தமிழ்நாடு இந்தியக் குடியரசுக் கட்சி.)