உல்பா, விடுதலைப்புலி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாக்., வங்கதேச உளவு அமைப்புகள் சதி: அமெரிக்க உளவு செய்தி சேவை அமைப்பு தகவல்
நியூயார்க், ஏப். 24: இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தின் உளவு அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவில் உள்ள உளவு செய்தி சேவை அமைப்பான “ஸ்ட்ராட்பார்’ எச்சரித்துள்ளது.
“இந்தியா: இஸ்லாம் மயமாகிவரும் வடகிழக்கு’ என்ற தலைப்பில் அது வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் தற்போது இஸ்லாமிய மயமாகி வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒருபக்கம் உதவி வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் சாதகமாகிவிட்டது. வங்கதேச அரசியல் குழப்ப நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும் உலக அளவில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து விடக் கூடாது என்ற நோக்கில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்து தாம் சொல்லும்படி ஆட்டிப் படைக்கின்றன.
தற்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் வங்கதேச உளவு அமைப்பும் மிகவும் நெருக்கமாகிவிட்டன. இந்த இரு அமைப்புகளும் வங்கதேசத்தில் ரகசியமாக செயல்பட்டு வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் உல்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள், அல்-காய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவை தமக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட ஆதரவு அளித்து வருகின்றன.
வங்கதேச தீவிரவாத அமைப்புகள், ஜிகாதி அமைப்புகளுடன் உல்பா மிக நெருக்கமாகி உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அசாமுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்ய இருந்த நேரத்தில் ஏப்ரல் 9ம் தேதி அந்த மாநிலத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இந்தவித தாக்குதல் புலிகள் பயன்படுத்தி வருவதாகும். தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகளும் அடிக்கடி இந்த வகை தாக்குதலை பின்பற்றி வருகின்றனர்.
இந்த பாணி தாக்குலில் உல்பா இறங்கியுள்ளதற்கு உல்பா அமைப்பில் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினராகச் சேர்ந்து வருவதே காரணம். மேலும் உல்பா அமைப்புக்கு இந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அதிக ஆதரவு காட்டுகின்றன.
அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் ஐனுல் அலி என்ற பெயருடைய முஸ்லிம் என்று இந்திய பாதுகாப்புப்படை வட்டாரங்களே தெரிவித்துள்ளன. சில காலத்துக்கு முன் உல்பா அமைப்பில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றதில்லை. தற்போது வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் அகதிகள் உல்பா அமைப்பில் சேர்ந்து தற்கொலைப் படையினராக செயல்பட தயாராக உள்ளனர். இதற்கெல்லாம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தூண்டுதலே காரணம்.
வங்கதேசத்தில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை அங்குள்ள முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம், செல்வாக்கை அளித்து வருகிறது. மேலும் வங்கதேச ராணுவத்தின் கையும் ஓங்கி வருகிறது. தற்போது அங்கு காணப்படும் அரசியல் வெற்றிட நிலையை நிரப்பிக்கொள்ள இஸ்லாமிய கட்சிகள் மிகுந்த வெறியுடன் உள்ளன.
அப்படியொரு நிலை உருவாகும்போது பயங்கரவாத பிரச்சினையிலிருந்து இந்தியா மீள எடுக்கும் நடவடிக்கைகள் உரிய பலன் தருவது கடினமே. இவ்வாறு ஸ்ட்ராட்பார் அமைப்பு தெரிவித்துள்ளது.