இசை: தமிழின் கண்களில் தியாகராஜர் தரிசனம்!
ரவிக்குமார்
கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்கு வந்து தங்கியிருந்த பலநாட்டவரும் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் அடக்கம் தான். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. “”நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்க பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தமிழரை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். அந்தத் தமிழரின் பெயர் டி.என். பாலா. அவரை அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி!
ஏறக்குறைய 29 வருடங்கள் அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை வகித்த டி.என். பாலாவுக்கு தற்போது வயது 80. இவருக்கு வாய்ப்பாட்டும் அத்துப்படி. மதுரை மணி ஐயரின் சீடர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்நாடக இசைத்துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கெüரவிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum்) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.
இந்தப் பாடல்களின் தொகுப்பு நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி பாரதி நூலை வெளியிட்டுப் பேசும்போது, “”முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸôகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர். இரண்டொரு நாளில் அந்த புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.
“”தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அன்னியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும்
பிரிக்கமுடியாது அல்லவா? அதனால்தான், என் அப்பனைப் பாடியிருக்கிறேன். இதை யாராவது முறையாக இசை வடிவத்தில் கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு இதன் உரிமையைத் தருவதற்கு தயாராக உள்ளேன்.” என்றார் கண்கள் பனிக்க டி.என். பாலா.