காடு
தமிழ்ப் புத்திலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் பெயர் நின்று நிலைக்கும் என்பதை இந்தக் கட்டுரையின் ஆதியிலேயே நான் சொல்லிவிட விரும்புகிறேன். “காடு” என்ற அவரின் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வேதசகாய குமார் அவரை “தமிழில் ராட்சசக் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது” என வருணித்திருக்கிறார். இது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
இதன் முதல் காரணம் 2003இல் மட்டுமே தீவிர இலக்கியத்தில் தீவிரமாக இருக்கும் இந்த எழுத்தாளாரின் முக்கிய நாவல்கள் இரண்டு வெளியாகியுள்ளன. இரண்டும் மிகுந்த உழைப்பைக் கொண்டு, தங்கள் கருப்பொருளுக்கேற்ப விவரணைகளை அள்ளிக் கொடுக்கின்றன. அதே ஆண்டில் 5 திறனாய்வு நூல்களையும் பதிப்பித்துள்ளார். இளைஞரான இவர்பைதுவரை ரப்பர் என்னும் நாவல் தொடங்கி, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்கள், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களை எழுதியிருப்பதுடன் கொற்றவை என்ற காப்பிய வடிவிலான நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே புதுத்தமிழ் இலக்கிய இதழ்களாலும் விமர்சகர்களாலும் அணுக்கமாக விமர்சிக்கப்பட்ட நாவல்கள்.
இப்படி எழுதிக் குவிப்பதினாலேயே இவர் சிறந்த எழுத்தாளர் என்று அர்த்தமாகி விடாது. மாத நாவல்கள் எழுதுவோரும், கால வாரி இதழ்களுக்கு எழுதுவோரும் இவரை விட அதிகமாக எழுதிக் குவிக்கிறார்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் வணிக லாப நோக்கம் சற்றும் இல்லாத, வாசகனைப் பற்றி அநேகமாக கவலைப் படாத தூய இலக்கிய வடிவங்கள். அதோடு புதிய, தரமான இலக்கியம் என்பது பற்றிய பிரக்ஞை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளன் என்பதில் பெருமிதமும் விமர்சனங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத கர்வமும் உண்டு. இதனாலேயே இவருடைய விமர்சனங்களிலும் மூர்க்கத்தனம் தெரிந்து எழுத்தாளர்களைப் பெரிதும் எரிச்சல் படுத்தியிருக்கிறது. அண்மையில் மலேசியாவில் இவரைக் கண்டவர்கள் இதனை நேரில் அறிந்திருப்பார்கள்.
காடு 474 பக்கங்கள் கொண்ட பெரும் நாவல். காடுகள் பற்றி சில நாவல்கள் தமிழில் உண்டு. காட்டை அழிப்பதைப்பற்றிய சா. கந்தசாமியின் சாயாவனம் அதில் முக்கியமானது. அதில் கத்தநாயகன் காட்டை வெல்கிறான். ஆனால் ஜெயமோகனின் இந்த நாவலில் காடே கதாநாயக அந்தஸ்து பெற்று அனைத்தையும் வெல்கிறது.
நாவலின் எல்லாப் பக்கங்களிலும் நாம் காட்டைச் சந்திக்கிறோம். அதன் மரங்கள், பூச்சிகள், விலங்குகள், மழை, நீரோடைகள், காய்ந்த சருகுகள், மலைகள், பள்ளங்கள், காடுவாழ் மக்கள், அவர்களின் தெய்வங்கள் என அனைத்தும் பார்க்கிறோம். மொத்ததில் காடு அதன் மர்மம், கொடுமை, ஆக்கினை, வீரியம் ஆகிய அனைத்துடனும் சித்தரிக்கப் படுகிறது.
இந்தக் காடு தமிழ்நாட்டு மலையாள எல்லையில் உள்ளது. அதன் மக்கள் அதிக மலையாளம் கலந்த ஒரு மொழி பேசுகிறார்கள். அதில் ஒரு 30 முதல் 40 விழுக்காட்டுச் சொற்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் வாசகப் பயணத்தை அது தடை செய்யவில்லை. கிரிதரன் என்ற ஒரு நாயகன் இருக்கிறான். காட்டில் சாலை அமைக்கும் காண்டிராக்டரிடம் வேலை செய்கிறான். காட்டிலேயே முகாம் அடித்து வாழ்கிறான். அந்த மக்களோடு பழகி ஒரு மலைப் பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.
ஆனால் ஜெயமோகன் தனது எந்த நாவலிலும் தனது தலைமைப் பாத்திரங்கள் மேல் கருணை உள்ளவர் அல்ல. ஆகவே அந்தக் காதல் ஒன்றுமில்லாமல் போவது மட்டுமன்றி கிரியின் இறுதி நாளில் அவன் பெண்டாட்டியை அடித்து, பிள்ளையால் ஒதுக்கப்பட்டு, சுருட்டுப் பிடித்துக்கொண்டு தனிமையில் வாழும் இயலாமையில்தான் முடிக்கிறார்.
கதையின் செறிவான நிகழ்வுகள் வாசகன் முன்னறிந்து சொல்ல முடியாத திசைகளுக்குள் செல்கின்றன. எப்படி நமது அன்றாட வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறதோ, அப்படியே இவர் கற்பித்துக் கொண்ட கதயையும் செலுத்துகிறார். இதனால் கதையில் எப்பொழுதும் சோர்வில்லாத திருப்பங்கள் தோன்றிக்கொண்டே உள்ளன.
ஆனாலும் இந்த நாவலில் அவனுடைய இந்த வாழ்வு என்பது முக்கியமானது போல் நமக்குத் தோன்றவில்லை. நாவல் கிரிதரன் பற்றியதல்ல. அவனைச் சுற்றியும் அவன் மனசுக்குள்ளும் காடு நடத்தும் விளையாட்டுக்களே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
காடு பற்றிய இவ்வளவு விவரணைகளைத் தான் தர முடிந்ததற்கு காட்டுத் துறை வல்லுநர் தியோடோர் பாஸ்கரன் தந்த விளக்கங்கள் உதவியதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் கொஞ்சம் சொந்த அனுபவமில்லாமல் இவ்வளவு எழுதி வாசகனையும் அந்தக் காட்டின் அனுபவங்களில் தோய்த்தெடுப்பது முடியாது.
இந்தக் கதையில் ஒரு சிறப்பு அம்சமாக ஒரு காட்டுத் துறை மேலாளரைப் படைத்து அவரை சங்க இலக்கியங்களில் விருப்பமுள்ளவராக்கி சங்க இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார். இடையிடையே கூடுதல் சுவை கூட்டுவனவாகவை அமைகின்றன.
இந்த நாவலைக் கையிலெடுக்கும் வாசகர்கள் இன்னும் இரு சுவைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று காமம். மற்றொன்று நகைச்சுவை. இரண்டும் வலிந்து தரப்படாமல் கதையோடு இணைந்து ஒத்திசைவாகவே வருகின்றன.
காடு தமிழுக்குத் தரப்பட்ட அரிய கொடைதான். புத்திலக்கியம் படைக்க தமிழ் மொழியை எப்படி மிகுந்த நெகிழ்ச்சியோடு கையாளலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.