விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்த இந்திய படகுகள்: இலங்கை அரசு குற்றச்சாட்டு
கொழும்பு, நவ. 17- இந்திய மீன்பிடி படகுகளில் விடுதலைப்புலிகள் ஆயு தம் கடத்தி வருவதாக இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இலங்கை கடற் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் பற்றி இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-
தாக்குதல் நடத்தி வரும் விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்து வருகிறோம். இந்திய மீன்பிடி படகுகள் மூலம் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளில் அயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசை கேட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்ததயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபச்சே பாராளுமன்றத்தில் பேசும்போது “விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு வரும் படி மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதி முயற்சி மூலம் பிரச்சினைக்கு தீர்வுகான இலங்கை அரசு தயார்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராணுவ செலவுக்கு 45 சதவீதம் கூடுதலாக அவர் ஒதுக்கி இருக்கிறார்.