Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jeevanantham’ Category

Jeeva – Lifesketch

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

ஜீவா எனும் குறிஞ்சிப்பூ

இரா. நாறும்பூநாதன்

“”ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கும்?” காரைக்குடி வந்த தேசப்பிதா காந்திஜி, ராஜாஜியை அழைத்துக்கொண்டு, சிராவயலில் இருந்து காந்தி ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்றபோது கேட்ட கேள்வி இது.

“”சொத்தா.. அது கோடிக்கணக்கில் உள்ளது…” என்று சிரித்தார் ஜீவா.

“”புரியும்படி சொல்லுங்கள்…” என்றார் காந்திஜி.

“”இந்தியாதான் எனது சொத்து” என்று கூறினார் ஜீவா. “”இல்லை ஜீவா! நீங்கள்தான் இந்தியாவின் சொத்து…” நெஞ்சாரப் பாராட்டினார் காந்திஜி.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும்போது, செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞர்கள் ஆவேசப்படுகிறார்கள். சாதாரணப் பொதுமக்கள் பொருமுகிறார்கள். “அரசியலே சாக்கடை’ என்று வியாக்யானம் செய்கிறார்கள். “இந்தியாவின் சொத்து’ என்று காந்தியடிகளால் புகழப்பட்ட ஜீவாவும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்தான்!

சென்னை வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்லும் ஜீவாவைப் பார்த்து எதிரே வந்த நண்பர் கேட்டார், “”தோழர் ஜீவா! ஏன் நடந்து செல்கிறீர்கள்?”

“”பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன்” என்றார் ஜீவா.

நண்பர் விடவில்லை. “”கையிலே என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“”அதுவா? தோழர்கள் கொடுத்த கட்சி நிதி. கட்சி அலுவலகத்திற்குத்தான் கொண்டு போகிறேன்” என்றார் ஜீவா.

“”பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றார் நண்பர்.

“”கட்சி நிதி என்று தோழர்கள் தந்த பணமுடிப்பிலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால்கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பதுதானே சரி” நடந்தபடியே கூறினார் ஜீவா.

உதிரம் சிந்தித் தந்த தொழிலாளர்களின் நிதியை, சொந்த உபயோகத்திற்காக சல்லிக்காசு எடுக்கத் துணியாத ஜீவானந்தம் போன்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு.

கம்பராமாயணத்திலிருந்தும், திருக்குறளிலிருந்தும் மேற்கோள்காட்டி அற்புதமாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் தோழர் ஜீவா. 1952 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றபோது, வடசென்னை வேட்பாளராக வெற்றி பெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தால் வெளியே நிற்கும் உறுப்பினர்களும் உள்ளே வேகவேகமாய் வந்து அமர்வார்களாம். “”பயிற்று மொழி தமிழாய் இருக்க வேண்டும்” என்று அப்போதே சட்டமன்றத்தில் முழங்கினார். 1956-லேயே சென்னை மாகாண அரசு தமிழை ஆட்சிமொழியெனப் பிரகடனம் செய்தது. எல்லாம் ஏட்டிலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

மாநில முதல் அமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்குமான உறவு அன்று எப்படிப்பட்டதாக இருந்தது?

ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜரும், அன்றைய செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு காரில் சென்றனர்.

“”ஜீவா! அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

“”நான் வர வேண்டுமென்றால், கால் மணி நேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும்” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

உள்ளே ஜீவா, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

“”ஜீவா! எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா. “”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கின்றபோது நானும் மாடி வீட்டில் வாழ்வேன்”.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் ஏனைய பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஜீவா எங்கே?

காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்திலும், பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், இறுதியில் பொதுவுடைமை இயக்கமே மனித குல விடுதலைக்கு மாற்று என பொதுவுடைமை இயக்கத்திற்கு வந்தபோதும், இறுதிவரை கதராடையையே உடுத்தி வந்தார். அவரது அன்னையார் இறந்தபோது ஈமக்கிரியை சடங்கிற்காக கதராடை கொடுக்காமல் மில் துணியைக் கொடுத்ததால், தாய்க்கு கொள்ளி வைக்க மறுத்து விட்டார் ஜீவா.

1946-ல் அவரது தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, டி .கே. பகவதி மற்றும் குத்தூசி குருசாமி போன்றோர் அவருக்கு உதவி செய்தனர்.

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிங்காரவேலரின் தொடர்பு கிட்டியபோது, பகத்சிங்கின் “”நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக காரைக்குடியில் போலீஸôர் அவரது காலில் விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்த சொரிமுத்துப்பிள்ளை என்ற மூக்காண்டி, ஜீவானந்தமாகப் பரிணமித்து, தமிழக அரசியலுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது நூற்றாணடு தொடங்கும் இந்நாளில் அவரது எளிய வாழ்க்கை, சோர்வுற்ற இளைஞர் களுக்கு நம்பிக்கையளிக்கட்டும்!

————————————————————————————————————————————————

ஜீவாவின் வாழ்வும் வழியும்

ஆர். நல்லகண்ணு

2007 ஆகஸ்ட் 21. பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு நாள்.

ஓராண்டாக ஜீவா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது; விடுதலைப் போராட்டமே அவருடைய முதல் மூச்சாக வெளிப்பட்டது. தன்னைப் பெற்ற தாயின் இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பிய வேளையில் உறவு முறையினர் கொடுத்த புதுத் துணியும் கதராகத்தானிருக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தவர்.

அவர் பிறந்த “பூதப்பாண்டி’யில் கட்டுப்பாட்டை மீறி, தலித் சிறுவர்களை மேல் ஜாதிக்காரர் தெருக்களில் அழைத்துச் சென்றதற்காகக் கல்லெறியும் அடியும் மிதியும் பட்டவர்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், இவருடைய செயலுக்கு அச்சிற்றூர் இடம் கொடுக்காததைக் கண்டு ஊரைவிட்டு வெளியேறினார்; செட்டிநாட்டுக்குச் சென்றார்; “சிராவயல்’ என்ற ஊரில் “ஆசிரமம்’ நடத்தினார். எல்லா ஜாதி சிறுவர்களுக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தார்.

ஜீவாவின் “ஜாதி மறுப்புக் கொள்கையும்’ “தலித்’ மக்களின் மீதுள்ள பற்றையும் கடிதங்கள் மூலம் தொடர்புகொண்ட மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது ஜீவானந்தம் என்ற இளைஞனைப் பார்க்க விரும்பினார்; காரைக்குடியின் காங்கிரஸ்காரர்களிடம் தெரிவித்தார்; “சிராவயலில் இருக்கிறார்; அவரை அழைத்து வருகிறோம்’ என்று சொன்னதும் மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்; அந்த இளைஞனைத் தாமே போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதும், காந்தியை சிராவயலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஜீவாவைச் சந்தித்து உரையாடினார்; ஆசிரமம் நடத்த உமக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று மகாத்மா கேட்டதும் ஜீவா “”இந்த நாடு தான் என் சொத்து” என்றாராம்.

மகாத்மா பெருமகிழ்ச்சியடைந்தார்; “ஜீவா’ நீதான் இந்த நாட்டின் மதிப்புமிக்க சொத்து’ என்று தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்; இந்நிகழ்ச்சி 1930-ல் நடந்தது.

பெரியார் நடத்திய வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திலும் சிறுவனாகவே ஜீவா கலந்துகொண்டார். சேரன்மாதேவி பரத்வாஜ் ஆசிரமத்தில் ஜாதி வேற்றுமையை எதிர்த்து நடந்த சம்பவத்திலும் பங்கேற்றார்.

சுதந்திரம், ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பும் அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கிளம்பிய உயிர்மூச்சாகும். பெரியாருடன் சேர்ந்து பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

தன்னுடைய சுதந்திர வேட்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தனக்குச் சரியான புரிதலைத் தேடி அலைந்தார்.

தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் மற்றும் பக்தி இலக்கியங்கள் போன்ற அனைத்து தமிழ் இலக்கியங்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டார்.

அரசியலில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது முதல் கடமை; ஏகாதிபத்திய அரணை உடைத்துவிட்டால், மானிட சக்தி விலங்கொடித்து, வீறுகொண்டெழுந்துவிடும் என்று உணர்ந்தார்.

இரண்டாவது உலகப்போரில் சோவியத் எழுச்சி உலக இளைஞர்களுக்கு வழிகாட்டியது; ஜீவாவை ஒத்த வயதுடைய இளைஞன் மாவீரன் பகத்சிங். நவயுக சோஷலிஸ்ட் சமிதியை அமைத்தார்.

லாகூர் சதி வழக்கில் சிறை வைக்கப்பட்டபோது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதினார். அதை ஜீவா தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் “பிரிட்டிஷ் ஷார் நம்மை ஆள்வது ஆண்டவன் அருளால் அல்ல; நம்மிடையே உள்ள பிளவைப் பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியால் இரு நூற்றாண்டுகளாக ஆண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பகத்சிங்கின் அந்த ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ததால் ஜீவாவுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; “குடியரசு’ப் பதிப்பாசிரியருக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்பட்டன.

பகத்சிங்கின் வழக்கில் தண்டிக்கப்பட்டு பட்டுகேசுவர தத் மற்றும் சிலர் சென்னை சிறையில் இருந்தார்கள்; அவர்களோடு ஜீவாவும் சிறையிலிருந்தார்; தத் மூலம் கிடைத்த மார்க்சிய நூல்களை ஜீவா கற்றுத் தேர்ந்தார்; ஜீவா சிறந்த மார்க்சிய அறிஞராக வெளியே வந்தார்.

1937-ல் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனசக்தி வார இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராக ஜீவானந்தம் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 1963 ஜனவரி 18-ல் ஜீவா மறையும் வரை அவரே ஆசிரியராகச் செயல்பட்டு வந்தார்; அவர் தொடங்கிய அதே ஜனசக்திதான் 70-வது ஆண்டில் தின இதழாக இப்போது நடத்தப்பட்டு வருகிறது.

ஜீவா முற்போக்கு இயக்கத்தில் பன்முகப் போராளியாகத் திகழ்ந்து வந்தார்.

இலக்கியத்தில் கலை, கலைக்காகவே என்ற கருத்து நிலவி வந்த காலம்; ரசனைக்காகவே கலை பயன்பட வேண்டுமென்று கருத்து வலுவாக இருந்த காலத்தில் “கலையும் இலக்கியமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் இயக்கங்களில் நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டு நிலைநிறுத்தினார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி பாடியதை ஆதாரமாகக் கொண்டார். மானுடத்தின் மேன்மைகளை விளக்கினார். வள்ளலாரின் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்பதையும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான் என்ற திருக்குறளையும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’ என்ற சிலப்பதிகாரத்தின் அடிகளையும் தனது பொதுவுடைமைக் கருத்துகளுக்கு ஆதரவாக மக்களிடம் பரப்பி வந்தார்.

பாரதியின் பெருமையைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்; “பாரதியைச் சிலர் இழிவுபடுத்திய காலத்தில் பாரதியை “மகாகவி’ என்று உலகறியச் செய்த பெருமை, ஜீவா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், வ.ரா., திரு.வி.க., வெ. சாமிநாதசர்மா ஆகியோருக்கு உண்டு. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததில் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் மூவரும் மூலவர்களாக விளங்கினார்கள்.

ஜீவாவின் பாடல்களுக்கு முன்னுரை எழுதிய சாமிநாத சர்மா “ஜீவா சிறந்த கவிஞர் மட்டுமல்ல, கர்மயோகி’ என்று பாராட்டினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “துன்பச் சுமைதாங்கும் அன்புத் தோழன் ஜீவானந்தம்’ என்று தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டார்.

முற்போக்கான அரசியல்வாதி, ஜாதிமறுப்பு, பகுத்தறிவு சிந்தனையாளர், மார்க்சிய அறிஞர், தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் களம் கண்டவர்; இலக்கிய வழிகாட்டி ஜீவா, தாம் வாழ்ந்த காலத்தில் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; ஜீவாவின் வாழ்வும் வழியும் புதிய தலைமுறைக்கு ஒளிவீசும் கலங்கரை விளக்காகும்.

(கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்).

Posted in Bio, Biography, Independence, India, Jeeva, Jeevanandham, Jeevanantham, Kumari, Lifesketch, Old, Politics, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »