பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்
![]() |
![]() |
இந்திய இராணுவத்தினர் |
புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.
சீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.
இராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.