மெக்கா செல்ல அரசு நிதியுதவி கொடுக்க கூடாது – இந்தியாவின் அலஹாபாத் நீதிமன்றம்
![]() |
![]() |
அரசு நிதியுதவி வழங்க கூடாது என பலகாலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன |
இஸ்லாமியர்களின் புனிதத்தலமாகக் கருதப்படும் மெக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சுமார் எண்பதாயிரத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள், இந்திய நடுவணரசின் ஏற்பாட்டின் ஊடாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்த ஹஜ் புனித யாத்திரைக்காக இந்திய நடுவணரசு, ஆண்டுக்கு சுமார் 180 கோடி ரூபாய் மானியமாக அளித்துவருகிறது.
இந்த மானியம் அளிக்கப்படுவதை பாரதிய ஜனதா உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகள் பலகாலமாகவே எதிர்த்துவருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில், மதசார்பற்ற நாடாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள இந்திய அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களின் மதக்கடமையை நிறைவேற்றுவதற்கு நிதி உதவிசெய்வது தவறு என்பது இவர்களின் வாதமாக இருந்துவருகிறது.
ஹஜ் யாத்திரைக்கு அளிக்கப்படும் இந்திய நடுவணரசின் மானியத்தை நிறுத்தவேண்டும் என்று கோரி, உத்திரபிரதேசத்தின் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
![]() |
|
ஹஜ் உள்ளிட்ட, அனைத்து மத யாத்திரைகளுக்கும் இந்திய நடுவணரசு சார்பில் நிதி உதவி எதுவும் செய்யப்படக்கூடாது என்று, தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், தங்களின் இந்த தீர்ப்பு குறித்து, உத்திரப்பிரதேச அரசும், இந்திய நடுவணரசும் ஆறுவார காலத்திற்குள் தங்கள் தரப்பு கருத்துக்களை நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு முஸ்லீம் கட்சிகள் மத்தியிலும், முஸ்லீம் அமைப்புகள் மத்தியிலும் பரவலான அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இந்த பின்னணியில், இந்த தீர்ப்பை பற்றி முஸ்லீம் தரப்பு கருத்துகளை தமிழோசையிடம் விளக்கினார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜெவாஹிருல்லாஹ்.