அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து குடியிருப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.50 கோடி
புதுதில்லி, மே 2: அரசு பங்களாக்களை அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 400 பேர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.16.83 லட்சம் மற்றும் ரூ.18.97 லட்சமாகும். அங்கீகாரம் இல்லாமல் அரசு பங்களாக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து வாடகை வசூலிப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அது தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. சுனில் தத் ஆகியோரின் குடும்பத்தினர், பிகார் முன்னாள் ஆளுநர் புட்டா சிங் வாடகை பாக்கியை செலுத்தத் தவறி விட்டனர். காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துள்ள பங்களாக்களுக்கு செலுத்த வேண்டிய வாடைகை பாக்கி முறையே ரூ.13.45 லட்சம், ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.13.19 லட்சத்தை செலுத்தவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் 3 பேர், உரிமக் கட்டணம் / சேதங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.1.10 கோடி. காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் தில்லி மாநில பிரிவுகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.50.15 லட்சம் மற்றும் ரூ.19.31 லட்சம். நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை வசூலிக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.