மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு
மதுரா,ஜன.21-
சில வருடங்களுக்கு முன் வட மாநிலங்களில் விநாயகர் பால் குடிப்பதாக தகவல் பரவியது. நாடு முழுவதும் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.
இதே போல் தற்போது அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடிவதாக பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் புனித நகரமாக கருதப்படும் மதுராவில் ஆக்ரா ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.
இந்த தகவல் காட்டுத்தீ போல மதுரா நகரம் முழுவதும் பரவியது. இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்தனர்.அவர்கள் அனுமனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் திரண்டது. கோவில் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
இதுபற்றி கோவில் பூசாரி கூறுகையில் அனுமன் கண் களில் இருந்து கண்ணீர் வடிவ தாக பக்தர் ஒருவர் கூறினார். நான் சென்று பார்த்த போது நீர்த்துளி வழிவதை பார்த்தேன் என்றார். பக்தர் ஒருவர் கூறுகையில் அனுமன் கண்களில் கண்ணீர் வடிவது நல்லது அல்ல. இதற்கு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அனுமனுக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத் தில் அமர்ந்து அனுமனை போற்றி பஜனை பாடல்கள் பாடி தீபாராதனை காட்டி வழிப்பட்டனர்.
இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள்ë உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதே போல் உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அனுமன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மாலை வரை அனுமன் கோவில்கள் பரபரப்பாக காணப்பட்டது.