சினிமா
சாதனை (விமர்சனம்) :: மனோஜ்கிருஷ்ணா
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்ற பாரதியின் வரிகளுக்கு வலிவூட்டியுள்ள தரமான படம்.
நகரின் மையப் பகுதியில் நகர்ப்புற பாதசாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு வயதே நிரம்பிய அழுக்கான ஓர் அனாதைச் சிறுவன் சலவைத் தொழில் செய்யும் ஒரு சேரிப்பெண்ணின் வெள்ளை உள்ளத்தால் ஆதரிக்கப்படுகிறான். “ஸ்லம்’ என்ற பெயரில் வளரும் அவன் சேரிச் சிறுவர்களோடு குப்பை பொறுக்கும் (ஊரைச் சுத்தப்படுத்தும்) வேலை செய்கிறான். கிடைக்கும் சிறு தொகையை அவனை வளர்க்கும் ஆயாவிடம் தருகிறான். சிறுவர்களுக்கேயுரிய குறும்புகளோடு வாழ்க்கை நகருகிறது. ஒரு நாள் நடக்கும் சிறு சம்பவத்தில் அவன் வயதையொத்த, பள்ளி மாணவர்கள் அவனுடைய கல்வியறிவின்மையைச் சுட்டிக்காட்டி கேலி பேசுகிறார்கள். தானும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் மனதில் எழுகிறது. ஆனால் பள்ளியில் சேருவதற்கான உரிய வழிமுறைகளை அறியாத அவன், பள்ளி செல்லும் மாணவ, மாணவியரிடம் கெஞ்சிக் கூத்தாடி “அ, ஆ…’ கற்கிறான்.
அவனுக்குள் மாற்றம் நிகழ்கிறது. தொடர்ந்த முயற்சியாலும், பயிற்சியாலும் பள்ளிக்கே செல்லாமல் ஒன்பது வயதிலேயே பத்தாம் வகுப்பு பாடம் வரை படிக்கிறான். நேரடியாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத சட்டம் அனுமதி மறுக்கிறது. இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளியாகிறது. சிறுவனைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நாடெங்கிலும் கிளர்ச்சி நடக்கிறது. இறுதியில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. ஸ்லம் என்னவாகிறான் என்பது மனதைத் தொடும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஒன்பது வயது சிறுவன் கிஷன் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறான். சிறு வயது குறும்புகள் கலகலப்பு. குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் டீக்கடைக்காரரை ஏமாற்றி டீ குடிப்பவன், கல்வியறிவு பெற்றவுடன் இலவசமாகக் கிடைக்கும் சீருடையைக் கூட வீட்டைக் கழுவும் வேலை பார்த்துப் பெறுகிறான். தினமும் பள்ளி வரை செல்லும் அவன், உள்ளே செல்லமுடியாமல் வாசலிலேயே நின்று வாட்ச்மேனிடம் பிரச்சினை செய்வது, பள்ளி செல்லும் மாணவர்களைப் பார்த்து ஏங்குவது, உள்ளூர் “டுபாக்கூர்’ அரசியல்வாதி ரங்காவுடனான கலாட்டா, பள்ளியில் சேருவதற்காக ஆசிரியையை விடாமல் துரத்துவது போன்ற காட்சிகளில் கல்வியின் மேன்மையை சாமானியனும் உணரத்தக்க வகையில் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறான்.
கிஷனுடைய சேரித் தோழர்களாக வரும் சிறுவர், சிறுமியரின் இயல்பான நடிப்பும், வசனங்களும் அருமை. ஆசிரியையாக வரும் தாரா மனதில் நிற்கிறார். ஜாக்கிஷெராஃப் முதல்வராக நடித்துள்ளார். பாடல்கள் தன்னம்பிக்கையூட்டும் ரகம். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இதுபோன்ற திரைப்படங்களை அனைவரையும் காணச் செய்யும் வகையில் அரசு வரி விலக்கு அளிக்கலாம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இப்படத்தைத் திரையிட்டு அவர்கள் மூலம் கல்வியின் அவசியத்தை கல்லாதோருக்கு உணர்த்தச் செய்யலாம். படிக்க வாய்ப்பில்லாத சிறுவர், சிறுமியருக்கு இதுபோன்ற படங்களால் படிக்கும் ஆர்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
“அள்ளும்…’, “துள்ளும்…’ “…பருவம்’ என பெரிய மனிதர்களின் எத்தனையோ படங்களுக்கு மத்தியில் ஒன்பது வயது சிறுவன் இயக்கிய இந்தப் படத்தைப் பார்க்கும்போது “எத்தனை சிறிய மனிதருக்கு எத்தனை பெரிய மனமிருக்கு…’ என்ற எண்ணம் எழுவதே படத்தின் சாதனைதான்!