‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்
சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.
இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.
ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.
எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.
ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.