Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Iyer’ Category

Holy Ganges appears in Tanjore? – Viduthalai op-ed

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

செய்தியும் சிந்தனையும்
கங்கை வந்ததா தஞ்சைக்கு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கிணற்று நீரைப் பெற்றுக் கொள்வதற்காக ஆண்களும் பெண்களும் மிக நீண்ட வரிசையாக நின்றனராம். பெருமிதத்தோடு ஒளிப்படம் எடுத்துப் போட்டிருக்கிறது ஏடு! சிறீதர அய்யவாள் என்பவர், 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீடாம் அது. அந்த வீட்டுக் கிணற்றில் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை ஆறிலிருந்து நீர் வந்து சேர்க்கிறதாம். அதை வாங்கிக் குடிப்பதற்குத்தான் கூட்டமாம்.

அச்சுப்பிழை சரிவர திருத்தப்படாமல் செய்தி வந்துவிட்டது என்று கூற வேண்டும். சிறீதர அய்யர்வாள் வீடு என்றிருக்க வேண்டும். அவர் வீட்டில்தான் ஒரு தப்பிதமும், ஓர் அற்புதமும் நிகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்கள்.

அவர் வீட்டில் இறந்து போனவர்க்குச் “சிரார்த்தம் தரும் நாளன்று பசியால் மிகவும் வாடிய ஒருவர் சாப்பிட ஏதாவது கேட்டாராம். சிரார்த்தச் சடங்கு செய்யும் பார்ப்பனர் வரத் தாமதம் ஆகும் என்கிற நிலையில் பசித்தவர்க்கு உணவு தந்துவிட்டாராம் சிறீதர அய்யர். இந்தச் செய்தி தெரிந்ததும் மொத்த அக்ரகாரமும் தாண்டிக் குதித்ததாம்! எப்படி சிரார்த்தம் தரும் முன்பே – பித்ருக்கள் சாப்பிடும் முன்பே – மனிதர்கள் சாப்பிடலாம், சாப்பாடு தரலாம் எனக் கொதிப்புடன் கேட்டதாம் பார்ப்பனச் சேரி.

சிறீதர் அய்யர் சொன்ன சமாதானத்தைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்து விட்டார்களாம். வேறு வழியில் இல்லாமல் அவரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு விட்டாராம்.

யாருடனும் பேசாமல், பழகாமல், உதவியைக் கேட்டுப் பெறாமல் மிகவும் துன்பப்பட்டு வந்த நிலையில் அக்கிராமப் பெரியவாள்கள் பெரிய மனது வைத்துப் பரிகாரம் கூறினார்களாம். மனு தர்மத்திற்கு எதிராக நடந்துகொண்ட தோஷத்தைப் போக்கிடுவதற்காகக் கங்கையில் குளித்துப் பரிகாரம் செய்து வந்தால் பார்ப்பன ஜமாவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்களாம்.

ஏழையான சிறீதர் அய்யர் அந்தக் காலத்தில் எப்படிக் கங்கை நதிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய முடியும் எனப் பரிதவித்தாராம். அவரது நிலையைக் கண்ட பகவான் அவர் வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றில் கங்கையை வரச் சொன்னாராம். கங்கை கிணற்றில் பாய்ந்து நிரம்பி வழிந்ததாம். நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பிரவகித்த கங்கையைக் கண்டு ஊரே ஆச்சரியமடைந்ததாம். பார்ப்பனப் பெரியவாள் எல்லாம் சிறீதர அய்யரிடம் பகவான் கருணை காட்டியதைக் கண்டு சிறீதர அய்யருக்கு அபவாதமும் அபராதமும் விதித்தமைக்காக வருந்தினார்களாம்.

இந்த அற்புதம் நடந்த நாளான கார்த்திகை அமாவாசையன்று அந்த வீட்டின் கிணற்று நீரைக் குடிப்பதற்காகத்தான் கூட்டம் வருகிறதாம். இந்த விளக்கத்தை ஏடு எழுதவில்லை.

சில கேள்விகள் உண்டு. அவற்றிற்கு விடையாவது கிடைக்குமா?

(1) சிறீதர அய்யர் வீட்டுக் கிணற்றில் வந்தது கங்கை நீர்தான் என்பதற்கு ஏதாவது அடையாளம் உண்டா?

(2) இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கங்கை ஆறு திருவிசைநல்லூர் கிணற்றில் பொங்குவது எப்படி சாத்தியம்?

(3) 2007 இல் கிணற்றில் கங்கை நீர் பொங்கி பிரவகித்ததா?

(4) வாங்கிக் குடிக்கக் கூடிய அளவு தூய நீரா கங்கையில் ஓடுகிறது? (1000 கோடி ரூபாய் செலவு செய்தும் அழுக்கான ஆறுகளில் அதற்குத்தானே முதல் இடம்!)

Posted in Aiyyar, Amavasya, Amawasya, Belief, Brahminism, Caste, Community, EVR, Excommunication, Ganga, Ganges, God, groundwater, Hindu, Hinduism, Iyer, Kaarthigai, Manu, Op-Ed, Paappaan, Paappan, Paarpaneeyam, Paarppaneeyam, Periyar, Poor, Religion, Rich, River, Sect, Tanjore, Thanjavoor, Thanjavur, Thiruvisainalloor, Thiruvisainallur, Viduthalai, Village, Vituthalai, Water, Well, Well water | Leave a Comment »

Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!

வி.கே. ஸ்தாணுநாதன்

நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.

பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’

ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)

———————————————————————————————————

மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்


மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.

காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.

இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.

Posted in Aiyangaar, Aiyankaar, Aiyer, Anniversary, Archakar, backward, Brahmin, Caste, Civil, Community, Dalit, Deity, Evils, Forward, Freedom, Gandhi, Gita, Harijan, Hinduism, Hindutva, HR, Independence, isolation, Iyangaar, Iyangar, Iyankaar, Iyer, Keeripatti, Madurai, Mahatma, Manu, Meenakshi, Oppression, Papparappatti, Pooja, Rajaji, Religion, Reservation, rights, SC, Society, ST, Temple, Tolerance, Untouchability, vaidhiyanatha aiyer, vaidhiyanatha iyer, vaidhyanatha aiyer, vaidhyanatha iyer, vaidiyanatha aiyer, vaidyanatha aiyer, vaidyanatha iyer, Vaithyanatha Aiyar, Veda, Vedas, Vedha, Worship | 2 Comments »

Cut excessive pay to CEOs: Manmohan Singh – Ambika Soni defends Prime Minister’s premise

Posted by Snapjudge மேல் மே 28, 2007

தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி

புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:

பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.

ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.

அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.

Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »