“பெரியார்’ திரைப்பட விவகாரம்: இளையராஜாவுக்கு பகிரங்க வருத்தம் தெரிவிக்க த.மு.எ.ச. முடிவு
திருநெல்வேலி, நவ. 15: “பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இசை அமைப்பளர் இளையராஜா, “பெரியார்’ திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.
அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், “பெரியார்’ படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.
எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர் புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.
நடிகை ராதிகாவுக்கு கண்டனம்: தமிழக மக்களின் மனங்களில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக இடம் பெற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் ராதிகா, கோக கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
எந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. கோக கோலாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அதைக் குடிக்கச் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிப்பது கூட அவரது சுதந்திரம்தான். ஆனால், அறிவியல் பூர்வமாக அந்த குளிர்பானத்தை குடிப்பது ஆபத்தில்லை என்று சொல்ல ஒரு விஞ்ஞானிக்குத்தான் உரிமை உண்டு. ராதிகா ஒரு விஞ்ஞானியைப் போல அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, ராதிகா அவ்வாறு நடித்திருப்பதைக் கண்டித்தும், அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அவர் வீட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இலங்கைத் தமிழர் துயரம்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு மழை பொழியும் அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டக் குழுவினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம்: கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சேரன் இயக்கிய “தவமாய்த் தவமிருந்து’ செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் நடைபெறும் விழாவில், அதற்கான பரிசு வழங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.