தி.மு.க. கோட்டையை இடிக்க கிளம்பும் கும்பல்
கருணாநிதி கடிதம்
சென்னை, நவ. 17: கொள்கை மறவர் குருதியை குழைத்துக் கட்டிய திமுக கோட்டையை இடித்திட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு திட்டம் தொடக்கம். நல்லாட்சி நடக்கிறது என்று புகழ் மாலை. இதைச் சகித்துக் கொள்ள சில பேருக்கு முடியவில்லை.
நாம் நேரடியாக எதிர்த்தால் “பரம்பரை யுத்தத்தில் ஒரு பகுதி“ என்பது பச்சை உண்மை ஆகி விடுமே யென்று விபீஷண, சுக்ரீவர்களை விட்டு விடக்கூடாதென்று பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அழைத்து “ஐஸ்“ வைத்து, அவைக் களத்தில் நிறுத்தி- பட்டு பரிவட்டங்கள் சாத்தி, “அட்டாக்“ பண்ணுங்கள்; திமுகவையென்று உசுப்பி விடுகிறார்கள். அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு காட்சியை அண்மையில் மைலாப்பூர் மண்டபம் ஒன்றில் காண நேரிட்டது.
விபீஷண சுக்ரீவர்கள்; என்று யார் யாரைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால்; அய்யோ பாவம்; பட்டுக்கோட்டை நமது பழைய சீனுவாசன்! அண்ணா இருக்கும் வரையில் பட்டம், பதவி, பெற்றுக் கொண்டு; அண்ணா மறைந்த பிறகு இதுவரை அவர் நினைவு நாளைக்குக் கூட அந்தக் கல்லறை பக்கம் செல்லாத -பல “கட்சித் தாவி. அவர்கள் கூட்டம் போட்டு, கொள்கை மறவர் கொட்டிய குருதியை குழைத்துக் கட்டிய இந்தக் கோட்டையை இடித்திடக் கிளம்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 155 வார்டுகளிலுமா வன்முறை? குறைபாடு? தவறு? இல்லை! சில வார்டுகளில் மட்டுமே! அதிலும் சில “பூத்“களில் மட்டுமே!
அப்படி நடந்ததாக புகார் தரப்பட்ட சில இடங்களில் கூட மறுதேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
“ஆகா! வன்முறை! ஆபத்து ஜனநாயகத்துக்கு! என்றலறும் பழைய பட்டுக்கோட்டை சீனுவாசன்களும்- அவர்களின் மருங்கிருந்து கலகமூட்டும் மாலன், பாலன்களும்; தமிழ்நாட்டிலேயே பணியாற்றாத ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரும்; மடித்து வைத்துள்ள தின ஏடுகளை எடுத்துப் படித்துக் காட்டுகிறார்கள்.
அடடா; என்ன இது? என்ன ஏடு இது? இந்த ஆண்டு(2006) ஏடு என நினைத்து; பாரியாள் பழைய (2001) ஏட்டையல்லவா எடுத்துக் கொடுத்திருக்கிறாள்! என் செய்வது? அந்த ஏடுகளை இவர்கள் படிக்காவிடினும் நாம் படித்துப் பார்ப்போம்!
இரண்டு ஏடுகள்:-
ஒன்று “இந்து“– மற்றொன்று இன்று அவர்களின் பேச்சை பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ள “தினமலர்“.
“இந்து“ 17.10.2001
“சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்தலின்போது ஆயுதம் தாங்கிய கும்பல், பூத்துகளைக் கைப்பற்றியதோடு நகரின் சில பகுதிகளில் வாக்காளர்களை அதிக அளவில் பயமுறுத்தி கொசப்பேட்டையில் உள்ள திமுகழகத் தேர்தல் அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இந்தக் கூட்டம் வாக்குச்சீட்டுகளையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அ.தி.மு.க. மற்றும் ஒரு சில சுயேச்சைகளின் ஏஜெண்டுகளைத் தவிர மற்ற கட்சிகளின் ஏஜெண்டுகளையெல்லாம் விரட்டி விட்டு ஓட்டுப் பெட்டிகளுக்குள் அந்த வாக்குச்சீட்டுகளைத் திணித்துக் கொண்டனர்“
தினமலர் நாளேட்டில் வெளிவந்த செய்தியின் சுருக்கம் வருமாறு:
“சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில் அதிமுக வேட்பாளர் சங்கர் உட்பட 200 பேர் கொண்ட கும்பல் பள்ளியில் உள்ள அனைத்து பூத்துகளையும் இழுத்து மூடினர்“ என்று எழுதியுள்ளது.
அது நம்- அம்மா ஆட்சி- அப்போது எதுவும் நடக்கலாம்- அது நம்மவா ஜனநாயகம்!
“தமிழக திமுக அரசை ‘போஸ்ட் மார்ட்டம்‘ செய்ய வேண்டும்“ என்று பட்டுக்கோட்டையார் கத்தினாராம்-
கொள்கை மறவர் குருதி குழைத்துக் கட்டிய கோட்டை இது என்பதை, அந்தக் கும்பல் உணர்ந்து கொள்ளட்டும்!
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.