Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ira Murukan’ Category

Eraa Murugan: Dinamani Kathir Series: No.40 Rettai Theru

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

என்னமோ தெரியவில்லை, பெருமாள் கோவில் எப்போதும் அமைதியில் மூழ்கியிருக்கும். தொடர்ந்து அவதாரம் எடுத்து முடித்த அசதியோடு ஓய்வெடுக்க எங்கள் ஊரைத்தான் பெருமாள் தேர்ந்தெடுத்ததால் பண்டிகை, நாதசுவரம், அதிர்வேட்டு எல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டு விச்ராந்தியாகச் சாய்ந்து படுத்துவிட்டதாகக் கேள்வி.

சிவனோ உற்சாகப் பிரியராக ஒன்று முடிந்து அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பார். முக்கியமாக மார்கழி வந்தால் போதும். மாதம் பிறக்க இரண்டு நாள் முந்தி வக்கீல் குமாஸ்தா வெங்கடேசனுக்குக் கனவிலோ அல்லது அவர் சதா சுமந்து கொண்டு நடக்கிற ஹோ அண்ட் கோ டைரியில் கொட்டை எழுத்தில் போட்டோ ஞாபகப்படுத்தி, பட்டு உத்தரீயத்தைத் தேடவைப்பார். வெங்கடேசன் அந்தப் பழைய உத்தரீயத்தை தியாகி டெய்லர் கடைக்கு எடுத்துப் போகும்போது கூடவே போகிற எங்களுக்கு வெண்பொங்கல் வாசனை மனதில் மிதந்து வரும்.

“அடுத்த வருஷமாவது புது முண்டாசு வாங்கிடுங்க, சாமிகளே. ஊசி நுழைய எடமே இல்லாமே ஒட்டுப்போட்ட நூல்தான் முழுக்க இருக்கு’, தியாகி டெய்லர் எப்படியோ தையல் இயந்திரத்தில் அந்தப் பட்டு உத்தரீயத்தை முன்னாலும் பின்னாலும் இழுத்துப் பிடித்து கிழிசலை அடைத்துத் தருவார். “பொழச்சுக் கிடந்து எங்க வக்கீலய்யாவுக்கு நல்லதா நாலு கேசு வரட்டும் பார்க்கலாம்’ குமாஸ்தாவுக்கு நம்பிக்கை இருந்தது.

மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியை கம்பீரமான முண்டாசாகக் கட்டிக் கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சில நாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப் போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக் கொள்வது உண்டு.

“”போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரை வினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருப்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.

உபயதாரர்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல். காளாஞ்சியாக வெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் விபூதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும் வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.

மார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வென்டர் தாத்தா போன்ற “அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக “நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் “ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் “ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.

“அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜூத் தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள். காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன?) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர் கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி- திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது- அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜூத் தெரு மனிதர்கள் நாலு வீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும். இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ. ஆபிசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய ஃபைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். “பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக் கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். “மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ. ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.

தாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம் இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக் கொண்ட என்.ஜி.ஓக்கள் “நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

———————————————————————————————————————————

Sunday September 23 2007

ரெட்டைத் தெருவுக்கும் சாப்பாட்டுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. ஒன்றுக்கு மூன்றாக மெஸ்கள் தெருவில் அங்கங்கே இடத்தைப் பிடித்து நாள் முழுக்கச் சுகமான சாப்பாட்டு வாடையைப் பரப்பியபடி இருக்கும். தெரு மத்தியில் கர்னாடக சங்கீத மெஸ். சாப்பிட வருகிறவர்களுக்கு ஆகாரத்துக்கு முந்தியோ, அப்புறமோ ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கிற ஏற்பாடோ அல்லது சங்கீதம் கேட்டபடி சாம்பார் சாதத்தை ஒருகை பார்க்க வசதியோ எல்லாம் இல்லை. வீட்டம்மா மூணு வேளை சாப்பாடு போடுகிற மெஸ் நடத்தினாள். அவங்க வீட்டுக்காரர் பாட்டு வாத்தியார். திண்ணையில் சுருதிப் பெட்டியோடு உட்கார்ந்து சரிகம என்று ஸ்வரம் இழுத்துப் பாடச் சொல்லிக் கொடுத்தார். ஆத்திரம் அவசரத்துக்கு சங்கீதக்காரர் சமையல்கட்டில் பொடிமாஸ் செய்ய வாழைக்காயை அரிவாள்மணையில் நறுக்கிக் கொண்டிருப்பார். ஆனாலும், அவர் வீட்டுக்காரி திண்ணையிலோ, உள்கட்டிலோ பாட்டுப் பாடிக் கேட்டதில்லை.

என் அம்மாவுக்கு அடுப்புப் பக்கம் போகக் கூடாத நேரம், பாட்டியம்மா “ஒருபொழுது’ உபவாசம், திடுதிப்பென்று உறவினர் வருகை போன்ற நேரங்களில் கையில் இரண்டு எவர்சில்வர் தூக்குகளோடு மெஸ் படியேற என்னைத்தான் அனுப்புவார்கள். “ஓரகத்தியோட பேத்தி. ராமேஸ்வரத்திலே மட் ஒய்பா இருக்கா. உனக்கு அக்கா முறை ஆகணும்டா குழந்தே. மிஸ்ஸிலே போய் புது ஈடா நாலு இட்லி வாங்கி வா’. பாட்டி, மெஸ்ûஸ மிஸ்ஸôக்கி… மிட் ஒய்பை மட் ஒய்ப் ஆக்கினாலும் கர்னாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே “உளுந்து போதாது’, “சரியா வேகலை’ போன்ற அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்துவிடுவாள். நானூறு பக்க நாவலைப் படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனாலும் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது. விமர்சகர்களும் இலக்கியமும் போல.

மெஸ் நடத்த பஞ்சாயத்து போர்ட் அனுமதி வாங்கவில்லை என்று ஒரு தடவை ஆபீசர் ஒருத்தர் வந்து தக்காளி ரசத்தையோ, தண்ணீர் ஏகத்துக்கு விளம்பிய அவரைக்காய் சாம்பாரையோ கண்ணாடிக் குடுவையில் அடைத்துக் கொண்டிருந்ததாக சீதரன் சொன்னான். இலையில் சாதத்தோடு சுடச்சுட வார்த்துப் பிசைந்து விழுங்க வேண்டிய சங்கதியை எல்லாம் சயின்ஸ் வாத்தியார் பிராணவாயு தயாரிக்கிற மாதிரி குடுவையில் நிரப்பிப் பரிசோதித்துக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், சீதரன் அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் பஞ்சாயத்து ஆபீசிலிருந்து கூட்டமாக சைக்கிள்களில் வந்திறங்கிய ஒரு கூட்டம் கர்னாடக சங்கீத மெஸ்ஸில் புகுந்தது. தம்புராவையும் இலைக்கட்டையும் ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு அவர்களுக்குக் கல்யாண சாப்பாடு மாதிரி பரபரப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, நாலு இட்லி, கெட்டி சட்னிக்காக நான் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிப் போனது.

சங்கீத மெஸ் தவிர இன்னொரு நட்சத்திர மெஸ்ஸýம் தெருவில் உண்டு. நட்சத்திரம் என்றால் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து என்று அர்த்தம் இல்லை. சினிமா நட்சத்திரம் கிருஷ்ணையா நடத்திய மெஸ்ஸôக்கும் அது. “வஞ்சிக்கோட்டை வாலிப’னா அல்லது “மிஸ்ஸியம்மா’வா என்று தெரியாது. நான் சினிமா பார்க்க ஆரம்பிப்பதற்கு முந்தைய ஏதோ ஒரு ஜெமினி கணேசன் படம். ஜெமினி பி.பி.சீனிவாஸ் குரலில் ஏக்கத்தோடு பாடுவார். அப்புறம் மனதில் பதிந்த கதாநாயகியைப் படம் வரைய உட்காரும்போது வர்ணம், பிரஷ் போன்ற சமாச்சாரங்கள் இல்லாதது தெரியும். “யாரங்கே!’ அவர் கையைத் தட்ட, ஒரு தட்டில் வர்ணப்பொடி, தேங்காய்மட்டை பிரஷ் எல்லாம் வைத்து எடுத்துக் கொண்டு, சின்னதாக உச்சிக்குடுமியோடு கிருஷ்ணையாதான் கம்பீரமாக நடந்துவருவார்.

கட்டை, குட்டையாக, குடுமி, கடுக்கன் அலங்காரத்தோடு கிருஷ்ணையா மெஸ் வாடிக்கையாளர்களோடு எப்போதும் ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய தமிழ் சினிமா அல்லது அரசியல் பற்றி உரக்கப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கோதுமை ரவை, உப்புமா, கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை என்று பத்திய போஜனமாக உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்காக மட்டும் நடத்தும் மெஸ்úஸô என்னமோ தெரியாது, நான் போனபோதெல்லாம் “இட்லி தீர்ந்து போச்சு; ரவாதோசை வேணும்னா போடச் சொல்றேன்’. கிருஷ்ணையா ஜெமினி கணேசன் மாதிரி உள்ளே பார்த்துக் கைதட்டுவார். “மெஸ்ஸியம்மா’ தலை சமையலறை இருட்டுக்கு வெளியே ஒரு வினாடி தட்டுப்பட்டு மறையும். “பக்தவத்சலம் ஆட்சியிலே அரிசிக்கு ஆலாப் பறக்க வேண்டியிருக்கு. ராஜாஜி திரும்ப வரணும்’. கிருஷ்ணையா மெஸ்ஸில் ராஜாஜி என்ன, அறிஞர் அண்ணாவே வந்து ரூபாய்க்கு மூணுபடி அரிசி கொடுத்தாலும், ரவா உப்புமாதான் கிடைக்கும்.

இந்த இரண்டு மெஸ் தவிர தெருக் கோடியில் பொரிகடலைக் கடைக்கு எதிரில் செல்லூரார் மெஸ் உண்டு. பக்கத்தில் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு வரும் கட்சிக்காரர்களுக்காக, பிரத்யேகமாக கல்தோசையும், உளுந்து வடையும், சுண்டலும் விற்கிற இந்த மெஸ், கோர்ட் விடுமுறை காலத்தில் தூங்கப் போய்விடும். பள்ளிக்கூடம் அரைப் பரீட்சை, முழுப் பரீட்சைக்கு அடைத்து லீவு விடுவதுகூடத் தாமதமாகலாம். கோர்ட், வக்கீல் ஆபீஸ் போன்ற பெரியவர்கள் புழங்கும் இடங்கள் நாள் நட்சத்திரம் தவறாமல் வெகேஷனுக்காக அடைத்துப் பூட்டப்படுவது வாடிக்கை.

பஞ்சாயத்து போர்ட் பிரசிடென்டாக இருந்த அண்ணவாரு ராதாகிருஷ்ணன் ரெட்டைத் தெருவாசிதான். அவர் மெஸ் எதுவும் வைக்கவில்லை. ஆனால், காந்திவீதியில் ஏழெட்டு பெஞ்ச் போட்டு உடுப்பி ஓட்டல் என்று நடத்திக் கொண்டிருந்தார். பெரியவர்கள் காப்பி குடிக்கப் படியேறும் இடம் இது. நாலு வீட்டில் தோசைக்கு அரைத்து, குடிதண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த குட்டி கிருஷ்ணனின் அம்மா இறந்தபோது அவனும் வீட்டுக்காரியும் அதே நாலுவீட்டிலும் அண்டையிலும் தகனத்துக்காக யாசகம் வாங்கிய பணத்தோடு படியேறிய இடம் இந்த ஓட்டல். அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் இதை இளக்காரமாகச் சொல்லும்போது பாட்டியம்மா சொல்வாள்- “பாவம், அகப்பை நோக்காடு. குத்தம் சொல்லக் கூடாது’.

மெஸ்கள், ஓட்டலைவிட ரெட்டைத் தெருக்காரர்களை அதிகம் ஆகர்ஷித்த சாப்பாட்டுக்கடை ஒன்றும் உண்டு. சிவன்கோயில் தெரு முனையில், கங்காராஜ் அண்ட் கோவுக்கு அடுத்து இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பழைய வீட்டுத் திண்ணையில், ராமராயர் பகல் நேரத்தில் பஜ்ஜிக்கடை போடுவார். மதியம் கோர்ட் இடைவேளியின்போது குதிரை வண்டியில் வீட்டுக்குப் போகிற வக்கீல்கள், சைக்களில் கேஸ்கட்டோடு வருகிற குமாஸ்தாக்கள், பள்ளிக்கூட வாத்தியார்கள் என்று ஒரு பெரிய கூட்டம் ஊரில் உண்டு. காலையில் எட்டு மணிக்கு இலை போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் போகிற விநோதப் பழக்கம் உள்ளவர்கள்.

மதியம் பட்டப் படைக்கிற வெய்யிலில் ராமராயர் எண்ணெய்ச் சட்டி வைத்து காரசாரமாக உற்பத்தி செய்து தள்ளுகிற பஜ்ஜி தவலைவடை, மற்றும் சுவியன், போளி வகையறாக்கள் அடுப்பை விட்டு வெளியே வந்த நிமிடமே எண்ணெய் கசிய பழைய தினசரியில் சுற்றி பரபரப்பாகச் சாப்பிட்டு முடிக்கப்படும். அருகருகே நின்று அன்னியோன்னியமாகப் பேசியபடி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட வக்கீல்கள் அந்தக் காரம் குரலில் வழிய மாஜிஸ்ட்ரேட் கோர்ட் படியேறி எதிரும் புதிருமாகப் பொறிபறக்க வாதிடும்போது, ராமராயர் எண்ணெயைத் தூக்குப் பாத்திரத்தில் வழித்து ஊற்றிவிட்டு, மீதித் தவலைவடையைப் பிரம்புத் தட்டில் பரத்திக்கொண்டு, ஊருணிப் பக்கம் முன்சீப் கோர்ட்டை நோக்கி நடப்பார். அங்கேயும் நீதியை நிலைநாட்டத் தன்னாலான ஒத்தாசையைச் செய்கிற அவசரம் நடையில் தெரியும்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

பங்குனி மாதம் பிறந்தால் சிவன் கோவிலில் கொடி ஏற்றுவார்கள். இது சுதந்திர தினத்துக்கு ஹெட்மாஸ்டர் ஏற்றி, பத்து நிமிஷம் காந்தி, நேரு என்று பேசிவிட்டு, வரிசையில் நிற்க வைத்து ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அனுப்புகிற சமாச்சாரமில்லை. சிவன் கோவிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடி. சிவனுக்கு இல்லை, சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் பத்து நாள் உற்சவம், திருக்கல்யாணம் அப்புறம் தேர். கிட்டத்தட்ட முழு வருடப் பரீட்சை லீவோடு இது சேர்ந்து வருவதால், பத்து நாளும் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட திருவிழா மண்டகப்படி நடக்கிற இடங்களில் சுற்றுகிறதுதான் அதிகமாக இருக்கும்.

பங்குனி உத்திரக் கொடியேற்றியதும், உள்ளூர்காரர்கள் வெளியூர்ப் பயணம் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்தக் காலத்திலேயோ எழுதாத சட்டம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஊருக்குப் போகாமல் இருக்க முடியாது. முக்கியமாக அப்பா. போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வந்து இறங்கி, கான்வாஸ் பையோடு வீட்டுவாசல்படி ஏறுகிறவராகத்தான் அவர் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறார். அவர் அடுத்தபடி ஆபீஸ் டூர் போக ஆயத்தமாகும்போது கோவில் கொடியேற்றியிருக்கும் என்பதால், வீட்டில் ரேழிக்குப் பக்கத்து காமிரா அறையில் எப்போதும் ஒரு துணிப்பையில் ஒரு பழைய கதர் வேட்டி, கைவைக்காத பனியன், குற்றாலத் துண்டு அடைத்துத் தயாராக வைத்திருக்கும். அதாவது கோவில் உற்சவத்துக்கு முன்பே அவர் பிரயாணம் போகத் தயாராகி, ஊரின் எல்லையில் மூட்டை முடிச்சைக் கொண்டு சேர்த்துவிட்டாராம். அது எப்படி, குனிந்தால் தலை இடிக்கிற எங்கள் வீட்டு அறைக்குள் ஊர் எல்லை வந்து நுழைந்தது என்று தெரியாது.

பங்குனி உத்திரத்தின் பொழுது பத்து நாளும் சாமி புறப்பாடு உண்டு. சாயந்திரம் ஓலையைக் கொளுத்தி தெருத் தெருவாக இழுத்துப் போவதற்கு பையன்களுக்குள் உக்கிரமான போட்டி நடக்கும். சாமி வரும் தெருவைச் சுத்தப்படுத்தவாம் இது. கொளுத்திய ஓலையோடு பீடித் துண்டு, பல்பொடி மடித்த காகிதம் ரேஷன் அரிசி வாங்கினதற்கான ரசீது, ஜெயவிலாஸ் பஸ் டிக்கட் என்று தெருவோடு கிடக்கும் சகலமானதும் புகையைக் கிளப்பி எரிந்து கதம்ப வாடையைக் கிளப்பும்.

முதல் இரண்டு நாள் மண்டகப்படி உற்சவமும் சாமி புறப்பாடும் சாதாரணமாகத்தான் இருக்கும். பரம்பரை பரம்பரையாக சீரோடு வாழ்ந்து நொடித்துப் போன குடும்பங்கள் வீம்புக்காக இன்னும் விடாமல் நடத்துகிற உற்சாகம். ஒற்றைத் தீவட்டி, நிறைய இடம் விட்டுக் கட்டிய பூமாலை சார்த்திய பழைய பல்லக்கு, நகரா என்கிற ஒற்றை மேளம், சாமி பல்லக்கோடு கூட வேகுவேகுவென்று நடக்கிற குருக்கள் வீட்டுக் கடைசிப் பையன் என்று அதிசிக்கனமாக நடந்தேறும். இந்த ஊர்வலங்களுக்கு அப்புறம் காந்திவீதி, நேருவீதி வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பெரிய தோதில் தினசரி மண்டகப்படி நடத்த ஆரம்பிப்பார்கள்.

மண்டகப்படி நடக்கிற இடத்தில் கூரைக் கொட்டகை போட்டு ராத்திரி சரியாக ஏழு மணிக்கு கச்சேரி வாடிக்கையாக இடம்பெறும். ஒரு வருடம் திருச்சியிலிருந்து நகாஸ் என்று ஒரு பாடகர் வந்து சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டு நாலைந்து பாடினார் சட்டென்று “சிங்காரவேலனே தேவா’ என்று அச்சு அசலாக எஸ்.ஜானகி குரலுக்குத் தாவி, தொடர்ந்து மூக்கை விரலால் பொத்திக் கொண்டு காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுவர இசையையும் எடுத்து விட்டாரே பார்க்கலாம்! விசில் சத்தம் காதைப் பிளந்தது. இன்னொரு தடவை, அருமையாக ஆர்மோனியம் வாசித்தபடி “ஆடாது அசங்காது வா கண்ணா’ பாடிய பித்துக்குளி முருகதாஸிடம் “சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராவணன் பாடுகிற ராகமாலிகை பாடச்சொல்லித் துண்டுச் சீட்டு யாரோ அனுப்பியபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஒருதடவை ஜவுளிக்கடைக்காரர்கள் மண்டகப்படிக்கு போலீசில் அனுமதி வாங்கி, நடுத்தெருவை அடைத்து வெள்ளைத்திரை வைத்து “நீலக்கடலில் நிம்மதியான உலகம்’ சினிமா போட்டார்கள். இங்கிலீஷ் படம். கடலுக்கு அடியில் எடுத்தது. வெள்ளைக்காரர்கள் சுறாமீனையும், திமிங்கிலத்தையும் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். அதற்கும் சிவன்கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்றாலும் தியேட்டருக்கு வெளியே சினிமா, அதுவும் ஓசியில் என்பதால் சாயந்திரம் நாலுமணியிலிருந்து அந்தப் பிராந்தியமே அமளிதுமளிப்பட்டது. படத்தை அவ்வப்போது புரஜக்டரில் ரீல் மாற்ற நிறுத்தி, “புகையிலை வாங்கினால் காதித விசிறி இனாம்’ என்று அறிவிப்பு வேறே. புகையிலை விற்று, படம் முடிந்து ஊர்வலம் கிளம்ப சாமியும் பொறுமையாக ரதத்தில் காத்துக் கொண்டிருந்தார் பாவம்.

மண்டகப்படி விசேஷங்கள் முடிந்து ராத்திரி ஒன்பது மணிக்கு சாமி புறப்பாடாகும்போது, முன்னால் கரக ஆட்ட கோஷ்டி நையாண்டி மேளத்தோடு ஆர்ப்பாட்டமாகக் கிளம்பிப் போகும், நிறையப் பவுடர் ஒற்றி, ஜிகினாவை புருவத்தைச் சுற்றி ஒட்டிக் கண்மை இட்ட அந்தப் பெண்கள் கையில் தவறாது கைக்கடியாரம் காணப்படும். ஒவ்வொரு தெருமுனையிலும் பத்து நிமிடம் நிறுத்தி “மாமா மாமா மாமா’, “எலந்தப்பழம்’ போன்ற ஜமுனாராணி, எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளுக்குத் தலையில் கரகத்தோடு வியர்த்து வடிந்து அவர்கள் நடனமாடுவார்கள்.

புதிதாகத் தார் போட்ட தெரு நடுவில் வைத்த ஒரு ரூபாய்க் காசைத் தலையில் வைத்த கரகம் நழுவாமல் குனிந்து, கண் இமையால் பற்றி எடுப்பதைப் பார்க்க என்னமோ பாவமாக இருக்கும். “லஜ்ஜை கெட்ட கூத்தா இருக்கே’, முழுக்கப் பார்த்து முடிந்த பெரியவர்கள் மேல் துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்கும்போது நாங்கள் நாதசுவர கோஷ்டி பின்னால்.

தெருமுனையில் நின்று ராகம் இழுத்து வெளியூர் நாதசுவர கோஷ்டிகள் வாசிக்கும். எல்லாருக்கும் பிடித்த “தாமரை பூத்த தடாகமடி’, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ போன்றவை கூட்டம் அதிகமான நாலுதெரு சந்திப்புகளில் வாசிக்கப்படும். ஒருதடவை தாளக்காரப் பையனை (எம் வயசுதான் அவனுக்கு) தூக்கக் கலக்கத்தில் தப்புத்தாளம் போட்டதற்காக நடுராத்திரி நேரத்தில் நாதசுவரக்காரர் பேயறை அறைந்ததைப் பார்த்தபின் நாதசுரம் கேட்கப் போகவே பிடிக்கவில்லை.

சலவைக்காரர்கள் மண்டகப்படி விசேஷமானது. முழுக்க முழுக்க பூவால் நிறைத்து அலங்கரித்த புஷ்பப் பல்லக்கில்தான் உலா. பல்லக்கு தெருவுக்கு வருவதற்கு முன்பே தூக்கலான பூவாடை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும். மல்லிகை, ரோஜா, இருவாட்சி, தாழை, முல்லை, சம்பங்கி, பிச்சிப்பூ, கனகாம்பரம் என்று தழையத் தழையக் கட்டி ஊர்ந்து வரும் பல்லக்குக்கு முன்னால் சுந்தரேசுவரக் குருக்கள் மேல் துண்டால் மூக்கை சற்றே பொத்தியபடி நடப்பார்.

பூவாசனை தாங்காது ஒருதடவை தலைசுற்றி நடுத்தெருவில் விழுந்துவிட்டதற்கு அப்புறம் இது. இந்த மண்டகப்படிக்கு நன்கொடை வசூல் செய்து சீட்டுக் குலுக்கல் நடத்தி, சருவப்பானை, எவர்சில்வர் டிபன்காரியர் பரிசாகத் தருவது வழக்கம். ராமன் லாண்டரி குடும்பத்தில் யாருக்காவது வருடாவருடம் பரிசு கிடைக்கும். அநேகமாக டிபன் காரியராகவே அது இருக்கும்.

தேருக்கு முந்தைய நாள் சாயந்திரம் கோவிலில் பருப்புத் தேங்காய், அக்னி வளர்த்து ஹோமம், ஆரத்தி, மஞ்சள், குங்குமம், நலுங்குப் பாட்டு எல்லாம் சேர, திருக்கல்யாண உற்சவம் மங்களகரமாக நடக்கும். கல்யாணம் முடிந்த சுவாமி தம்பதி சமேதராக உலா போவது வரிசையாக மின்சார பல்ப் மாட்டிய ரதத்தில். முன்னால் நீண்டு போகும் இரண்டு வரிசையாக, கழியில் பளிச்சென்று எரியும் டியூப்லைட் மாட்டி வயர் இழுத்துப் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது சகாயமாதா கோவில் திருவிழாவா, சுப்பிரமணிய உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும்? எல்லாமே சந்தோஷம்தான்.

——————————————————————————————————————–

Kathir – Oct 7 2007

பங்குனி உத்திரக் கொடி ஏற்றி பத்தாவது நாள் தேரோட்டம். ஸ்கவுட் மாஸ்டர் லூர்துசாமி வாத்தியார் பள்ளிக்கூட வாசலில் காக்கி நிஜார், தொப்பி, விசில் சகிதமாக நடுப்பகலுக்கே ஆஜராகிவிடுவார். சாரணர் இயக்கத்தில் இருக்கப்பட்ட பிள்ளைகள் எல்லாம் அவர் தலைமையில் பொதுஜன சேவைக்குக் கிளம்பும் நேரம் இது. தினசரி ஒரு நல்ல காரியமாவது செய்து குறிப்பேட்டில் எழுதி சபையில் படிக்கவேண்டிய கடமை சாரணர்களுக்கு உண்டு. ஒருதடவை முதல் பெஞ்சில் இருந்த நாலு பையன்களும், “அரண்மனை வாசல் பக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வயதான ஒரு பெண்மணியைச் சாலையைக் கடக்க உதவினேன்’ என்று ஒரே குறிப்பு எழுதியிருந்தார்கள். என்ன விஷயம் என்று வாத்தியார் விசாரிக்க, “அந்தப் பாட்டியம்மா தெருவைக் கடக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க’ என்று காரணம் சொன்னார்கள்.

சாரணர்கள் பள்ளி வாசலில் லெஃப்ட் ரைட் போட்டு, விசில் ஊதிக்கொண்டு, கயிற்றில் விதவிதமாக முடிச்சுப் போட்டு அவிழ்த்து தேர்க்காலத்தில் ஊர்ப் பாதுகாப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இரண்டு விஷயம் இல்லாமல் போயிருக்கும். முதலாவது மின்சாரம். தேர் பிரம்மாண்டமாக நகர்ந்து எட்டு வீதியும் சுற்றித் தேரடிக்கு வரும்வரை, முன் ஜாக்கிரதையாகத் தேரோடும் வீதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கும். இன்னொரு சப்ளை நிறுத்தம் நல்லையா நடத்துவது. காலையில் அவர் வீடுவீடாகச் சந்தாதார்களுக்கு வினியோகிக்கிற தினசரி பத்திரிகை, வாரப் பத்திரிகை சமாச்சாரங்கள் அன்று வீட்டு வாசலில் வந்து விழாது. குடும்பத் தொழிலான பழவியாபாரத்திற்காகத் தேரடியில் கடைபோட்டு, நல்லையா கால்பரப்பி உட்கார்ந்து பலாப்பழத்தை எண்ணெய் தடவிய கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கும்போது, வென்னீர் குடித்த வக்கீல்கள் முந்தியநாள் பேப்பரைத் திரும்பப் படித்தபடி மனதில் நல்லையாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி இங்கிலீஷில் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். காலையில் பேப்பர் படித்து, காலைக் கடன் முடித்து, கிரமமாக நாளைத் தொடங்குவது தடைப்பட்ட கஷ்டம் அவர்களுக்கு.

கோயிலை ஒட்டிய தேரடியில் மரத் தேரைக் கழுவித் துடைத்து, ஜமுக்காளங்களை உருட்டி நீளமாகத் தழைகிற தோரணங்களை மாட்டி, பூவும், வாழையிலை, மாவிலையுமாக அலங்காரம் செய்யப்படும். நல்லையா கடையோடு நாலைந்து வளையல் கடை, கோலிசோடா கடை, பலூன்கடை என்று வரிசையாகத் தெருவோரமாக முளைத்திருக்கும். மலிவுவிலை சர்பத் கடையில் மூன்று பைசா நாணயங்கள் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தபடி சர்பத் விலையைச் சொல்லிக்கொண்டிருக்கும். சுதந்திர இந்தியா அதற்கு முன்போ பின்போ வெளியிட்ட வேறு எந்தக் காசும் மிதந்ததில்லை. கடையில் நீட்டினால், கண்ணாடி கிளாஸில் சாக்ரின் ஜாஸ்தியான, ஐஸ்கட்டி போட்ட சர்பத்தும் அப்புறம் மூணு பைசாவுக்குக் குடிக்கக் கிடைக்கவில்லை. சர்பத் கடைக்குப் பக்கத்தில் பொட்டல்வெளியில் கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கரடு கரடாகத் திரண்ட கையும் காலுமாகக் கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, “தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார். முறுக்குமீசை தவிர அவருக்கும் பீமசேனனுக்கும் வேறு ஒற்றுமை இருக்காது. அவ்வப்போது இருபத்தைந்து பைசா செலவில் உடனடியாகப் பீமசேனனாக உத்தேசித்து யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாவகமாக ஐந்து சென்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு சென்ட்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்.

ஊரில் தேரோட்டம் என்றால் எப்படியோ மாஸ்கோவில் செய்தி தெரிந்து, ஆளனுப்பித் தெப்பக்குளம் பக்கம் பனந்தட்டி வைத்து அடைத்து சோவியத் புத்தகக் கடை போட்டுவிடுவார்கள். வழுவழு காதிதம். புரட்டினால் சுகமான வாடை. ஐந்து ரூபாய்க்கு லெனின் வாழ்நாள் முழுக்க எழுதியது, பேசியது சகலமும் ஏழெட்டு வெல்வெட் தலையணை சைஸ் புத்தகமாகக் கிடைக்கும். பீமபுஷ்டி அல்வா வாங்க இருபத்தைந்து பைசா கொடுக்காத வீட்டில் லெனினுக்காக ஐந்து ரூபாய் எப்படிப் பெயரும்?

சுற்றி ஏழெட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க வடம் பிடிக்க வருகிற கூட்டத்தோடு உள்ளூர்வாசிகளும் சேர, சாயந்திரம் ஐந்து மணிக்கு அதிர்வேட்டு சத்தம் காதைப் பிளக்கும். தேர் நிலையிலிருந்து நகர்ந்தாச்சு. இனி நாலு ஐந்துமணி நேரம் கழித்து அது நிலைக்குத் திரும்புவரை தேரடி வெறுமையாக, விடுமுறை விட்ட பள்ளிக்கூடம் போல் சுரத்தே இல்லாமல் இருக்கும். அப்போது போனால் அல்வா, பலாச்சுளை, சோவியத் புத்தகம் எல்லாம் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்று பரவலாக நம்பிக்கை நிலவினாலும் யாரும் போவதில்லை.

தேர் ரெட்டைத் தெருவை அடைத்துக்கொண்டு ஆரவாரத்துக்கு நடுவே ஆயிரம் கைகள் வடம் பிடித்து இழுக்க மெல்ல நகரும்போது வீட்டுப் படியில் நின்றபடி ஒருவினாடி சாமி தரிசனம். பெரிசுகள் கன்னத்தில் போட்டுக்கொண்டு வேல் வேல் என்று கூட்டத்தோடு உரக்க முழங்கும் நேரம் பார்த்துச் சத்தம் போடாமல் கூட்டத்தில் கலந்து விடலாம். பின்னால் ஐநூறு பேர் தள்ள, முன்னால் இன்னொரு ஐநூறு பேர் மெல்ல நகர, கடகடத்து வரும் பெரிய மரச் சக்கரங்களைப் பார்த்தபடி, தேர்வடத்தை ஒரு வினாடி தொட்டு இழுத்து யாரோ பெரியவர்கள் அணைத்து அப்பால் அனுப்ப, அந்தப் பெரிய ஜனசமுத்திரத்தில் ஒரு துளியாகக் கரைவதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னொரு தடவை கிடைக்க என்ன வேணுமானாலும் தரலாம்.

நகர்கிற தேரில் இரண்டு புறத்திலும் நின்று கையை அசைத்து வடம் பிடிக்கும் கூட்டத்தை முன்னே செலுத்திக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர்ட் போலீஸ்காரர்களாக இருப்பார்கள்.. அவர்கள் பின்னால், தேரில் உட்கார்ந்தபடியே நாதசுரம் வாசித்து வருகிற நடேசன் நாயனக்காரர். பக்கத்தில், இரைச்சலுக்கு நடுவிலும் டமடம என்று தவிலை முழக்கியபடி கருப்பையாப் பிள்ளைவாள். “அளவா லேகியம் சாப்பிட்டா அம்சமா வாசிக்கலாம்’ என்று தவில்காரர் எங்களிடம் ஒருதடவை தேரோட்டம் முடிந்து சொன்னார். பீமபுஷ்டி அல்வா இல்லையாம் அது.

தேர் சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நிற்கும். குறுகிய திருப்பம். அது முடிவது வக்கீல் சுப்பண்ணா வீட்டு வாசலில். இன்னும் இருபது அடியில் அடுத்த கடைசித் திருப்பம். அது கடந்தால் தேரடிதான். இந்த வளைவில் தேரைக் கொண்டுவர, இரண்டு பக்கத்திலும் வடம் பிடித்து இழுப்பவர்கள் நீண்ட வரிசையாக சுப்பண்ணா வீட்டு முன்வாசல் கடந்து, கூடம் வரை நுழைந்து பிடியை விடாமல் இழுக்க, தேர் தளுக்கும் மினுக்குமாகத் திரும்பும். ஊர் முழுக்க சுப்பண்ணா வீட்டுக் கூடத்தில் ஐந்து நிமிடம் கூடவதும், அப்புறம் வந்த சுவடே தெரியாமல் அந்த இடம் திரும்ப அமைதியாவதும் வருடம் ஒருமுறை நடப்பது. சுப்பண்ணா காலமானபோது, “தேர்க்கூட்டம்தான்’ என்றார்கள் கலையாமல் அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்தவர்கள்.

போனவருடம் ஊருக்குப் போனபோது தேரடியைப் பார்த்தேன். தேர் உளுத்துப்போய் நின்று கொண்டிருந்தது. அது நகராது. வக்கீல் வீட்டு வாசல் கடந்து வடம் பிடித்து இழுக்கக் கூட்டம் வராது. சின்ன வாசலும் நாலு மாடியுமாக அங்கே புதுக் கட்டடம் எழும்பி நிற்கிறது.
——————————————————————————————————————–

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

Sunday October 14 2007 00:00 IST

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

ராத்திரிக் கச்சேரி நடத்தும்போது பேங்க் ஏஜெண்ட் கிட்டு தவறி விழுந்ததற்கு இரண்டு மாதம் கழித்து ஊரில் சங்கீத சபா தொடங்கப்பட்டது. இப்படிச் சொன்னால் புரியாது. பேங்கு ஏஜெண்ட்டில் ஆரம்பிக்கலாம். கி.பி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் வங்கி மேனேஜர்கள் என்ன காரணத்துக்காகவோ ஏஜெண்ட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தொளதொளவென்ற பேண்ட் மாட்டிக்கொண்டு, சதா சிடுசிடுத்த முகத்தோடு இவர்கள் கிளார்க்கு, கேஷியர், டைப்பிஸ்ட் வகையறாக்களை கட்டி மேய்த்தபடி நாள்முழுக்க பேங்குக்குள் சுற்றிவருவார்கள். ராத்திரி ஏழுமணி போலத் தட்டுச் சுற்று வேட்டிக்கு மாறித் தெருமுனையில் ஜமா சேர்த்துக் கொண்டு வெற்றிலை போட்டபடி வம்பு பேசுவார்கள். பேங்க் ஏஜெண்ட் கிட்டு ராத்திரி ஜமா சேர்த்துக் கொண்டு சிவன்கோயில் தெருவில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கீர்த்தனம் பாடுவது வழக்கம். “பால கனகமய’ என்று தொடங்கி சுவரம் பாடி முடிப்பதற்குள் கூட இருக்கப்பட்ட நண்பர்களான பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரோ அல்லது எதிர்வீட்டு டாக்டரோ, கோடிவீட்டு என்ஜீனியரோ, “”அடானாவிலே இந்த சஞ்சாரம் வரலாமோ” என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவியபடி, கட்டைக் குரலில் அடானா அதிகாரமாகத் தொடரும்.

ஏஜெண்ட் வீடு நல்ல உயரமான வீடு. அகலமான ஐந்து வாசல்படி. இரண்டு பக்கத்திலும் யானை முகம் போல சின்னதாகச் சுவர்கள் படிகளை அணைத்து, கோயில்

மண்டபவாசல் போல உயர்ந்திருக்கும். கச்சேரி செய்கிற ஏஜெண்ட் ஒரு பக்கத்துப் படிச் சுவர் உச்சியிலும், விமர்சகர்கள் எதிர்வசத்திலும் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ராக ஆலாபனையின்போது ஐந்தாம்படி ஓரத்திலிருந்து தவறிப் பக்கத்துப் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார் ஏஜெண்ட். நல்லவேளை அடி பலமாக இல்லை. டாக்டர் உடனே போட்டுவிட்ட பெரிய பிளாஸ்திரியோடு முழங்காலுக்கு பேண்டை சுருட்டி மடித்துவிட்டுக்கொண்டு பத்துப் பதினைந்து நாள் சுற்றிவந்தார் அவர். நல்ல சங்கீதத்தைக் கேட்டு ரசிக்க ஊரில் நூறு பேராவது தேறுவார்கள் என்று அவருக்கும் சகபாடிகளுக்கும் அப்போது தோன்றியிருக்கலாம். சென்னையிலிருந்து ரிடையராகி வந்த காலேஜ் பிரின்சிபாலும் மெட்ராஸ் சபா நடவடிக்கைகளைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்து உற்சாகப்படுத்த, உள்ளூர் சங்கீத சபா சீக்கிரமே உதயமானது.

“மாசம் ஒரு கச்சேரி… அரியக்குடி.. செம்மங்குடி, குன்னக்குடின்னு வரிசையா வரப்போறாங்க. குடும்ப பாஸ் பத்து ரூபாய்தான்.’ ஊரின் பொதுநலத் தொண்டன் குப்பன் நிதானத்தில் இருக்கிற சாயங்கால நேரங்களில் வீடுவீடாக நோட்டீஸ் வினியோகிக்க, கொஞ்சம் பின்னால் ஏஜெண்ட், ஹெட்மாஸ்டர், டாக்டர், என்ஜீனியர் ஜமா தொடர்ந்து வந்து, சந்தா சேர்த்தது. இப்படி ஊர்ப் பெரிய மனுஷர்கள் எல்லா வீட்டில் நுழைந்து அழைக்க, நடுத்தெருவிலும், சிவன்கோவில், பெருமாள் கோவில் தெருக்களிலும் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் சபா அங்கத்தினராகி விட்டார்கள். பஜ்ஜி ராயர் கூட மைசூர் செüடையா வயலின் கச்சேரி வைக்க வேணும் என்ற நிபந்தனையோடு, எகனாமி கிளாஸ் டிக்கட் எடுத்தார்.

சபா ஆரம்பித்த உடனே இப்படி வெளியூர் பெரிய கைகளை மேடையேற்ற அவகாசம் இல்லை என்பதால் முதல் மாத நிகழ்ச்சிகள் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்த் திறமைகளோடு தொடங்கின. ஹைஸ்கூல் ஆடிட்டோரியம்தான் சபா அரங்கு. நாயனம் நடேசனும், அவருடைய மருமகனான பக்கத்து ஊர்க் கோவில் நாதசுவரம் கிருஷ்ணனும் சேர்ந்து “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ பிடிக்க, கருப்பையா பிள்ளைவாள் மற்றும் அவர் சகலை முழக்கிய ஸ்பெஷல் தவுல் மற்ற சத்தத்தை எல்லாம் விழுங்கி ஆடிட்டோரியத்தை ஆட்டங்காண வைத்தது. பாலக்காட்டிலிருந்து குடியேறிய கல்யாண சமையல் தாணு மாஸ்டர் மகள் ஓமனக்குட்டி பாட்டு கற்றுக்கொண்டு ஆலப்புழை ஆகாசவாணியில் பாடப் போனாள். குரல் சரியில்லை என்று திருப்பி அனுப்பி விட்டதாகக் கேள்வி. மங்கள வாத்தியத்துக்கு அப்புறம் ஓமனக்குட்டி கச்சேரி. நலுங்கு, நவராத்திரி, வளைகாப்பு என்று எங்கே கூப்பிட்டாலும் ஓமனக்குட்டி “பாவயாமி ரகுராமம்’ தான் பாடுவாள். சபாவிலும் அவள் வழக்கம்போல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ராமன் பிறப்பில் ஆரம்பித்து பட்டாபிஷேகத்தை நோக்கி மிக மெதுவாக ராகமாலிகையாக நகர, சபையில் பொறுமை போனது. இந்த வேகத்தில் போனால் கச்சேரி முடிந்து அடுத்து ஆவலாக எல்லாரும் காத்திருக்கும் நிகழ்ச்சி தொடங்க விடிகாலை ஆகிவிடும். பேசாமல் கர்னாடக சங்கீத மெஸ்கார அண்ணாவையே பாட வைத்திருக்கலாம். ஆனால் அவருக்குப் பாடிக்கொண்டே வாழைக்காய் நறுக்க அரிவாள்மணையும் தேவை.

ஒருவழியாகத் தாடகை வதத்தோடு ஓமனக்குட்டியின் கச்சேரி ஒத்திவைக்கப்பட, காதைப் பிளக்கிற கரகோஷம். அடுத்தபடியாக, ஹைஸ்கூல் ஆசிரியரும், நாடக கர்த்தாவுமான கே.ஆர்.என் சார் எழுதி உள்ளூர் மக்களே முழுக்கப் பங்கு பெற்ற “விடை இல்லாத கேள்விகள்’ சமூக நாடகம் ஆரம்பம். பாங்க் ஏஜெண்ட் மகன் நரேந்திரபாபு கதாநாயகனாகக் காதலித்தபடி மேடையில் குறுக்கும் நெடுக்குமாக அலைய, பள்ளிக்கூடத்தில் எனக்கு நாலைந்து வருடம் சீனியரான கிருஷ்ணகுமார் தலையில் டோபா முடியோடு காதலியாகக் கீச்சென்று வசனம் பேசினான். கதாநாயகிக்கு இரட்டை வேடம் என்பதால், ஜிக்கி பாடிய “சின்னப் பெண்ணான போதிலே’ இசைத்தட்டுக்கு நடனம் வேறே சுழன்று சுழன்று ஆட, அடுத்த கைத்தட்டல் கதாநாயகியைப் பெண் பார்க்க ஹீரோ குடும்பத்தோடு வரும் காட்சியில் ஏஜெண்ட், டாக்டர், என்ஜீனியர் ஆகியோர் கவுரவ நடிகர்களாக மேடையில் தோன்றி ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு, ஆறி அவலாய்ப்போன ராயர் கடை பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டபோது உற்சாகத்தின் எல்லைக்கே ரசிகர்கள் போயிருந்தார்கள்.

அடுத்தடுத்த “மாதக் கச்சேரிகளுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பகல் நேரத்தில் அரைமணி நேரக் கச்சேரி செய்யும் வித்துவான்கள் வரிசையாக வரவழைக்கப்பட்டார்கள். செம்பை எங்கே, காருகுறிச்சி எங்கே என்று குரல் கேட்டு அலுத்துப் போய் உள்ளூர் ரசிகப்பெருமக்கள் ரேடியோவில் கேட்ட குரல்களை முகங்களோடு தரிசிக்கப் பழகிக் கொண்டார்கள். வானொலியில் கச்சேரி செய்வதோடு, அகில பாரத நாடகங்களில் “சிம்மாத்திரி, இந்தக் கடல் புறத்திலே உன் குரல் எனக்கு மட்டும் கேட்கிறதே’ என்று ஆந்திரக் கடலோரத்திலும், “பஜாஜ் சாப், ஹோலிக்கு வர்ணத் தண்ணீரை என்மேல் தெளிக்காதீங்க, நான் கருப்பாகவே இருந்துட்டுப் போறேன்’ என்று தில்லி குடியிருப்பிலும் குரலால் வசனம் பேசி நடந்த ஒரு வித்வான்-கம்-நடிகர் கச்சேரிக்கு வந்தபோது, வழக்கத்தைவிடப் பத்து பேர் கூடுதல். அப்போது ஹைஸ்கூல் ஆடிட்டோரியம் கிட்டாமல், பத்தாம் கிளாஸ் “ஏ’ மற்றும் “பி’ பிரிவுகளுக்கு இடையே இருந்த மர ஸ்கிரீன்களை நகர்த்திவிட்டு, பிதகோரஸ் தியரம் எழுதி விளக்கியிருந்த கரும்பலகைக்குக் கீழே கச்சேரி நடந்தது.

வாங்கிய டிக்கெட் வீணாக வேண்டாம் என்பதற்காக இந்தக் கச்சேரிகளுக்கு என் வீட்டிலிருந்து நானும் மற்ற வீடுகளிலிருந்து அதேபடி கூட்டாளிகளான பையன்களும் மட்டுமே கட்டாயமாக அனுப்பப்படுவது அதிகரித்தது. “ப்ரோவோ பாரமா’, “தேவி ப்ரோவ சமயமிதே’, “நன்னு ப்ரோவ நடாசி வச்சிதிவோ’ என்று கச்சேரிக்குக் கச்சேரி கேட்டு, ஏதோ ஒரு மொழியில் “ப்ரோவுதல்’ என்றால் கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தபோது சங்கீத சபா ஓய்ந்து போயிருந்தது.

அப்புறம் ஒரு ராத்திரி பாங்க் ஏஜெண்ட் திரும்ப வீட்டு வாசல்படி முகப்பில் “ஆத்மாராமா ஆனந்த ரமணா’ என்று கச்சேரி செய்வதைப் பார்த்தோம். டாக்டரும், என்ஜீனியரும் அவருக்கு இரண்டு பக்கத்திலும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்தால், அடுத்த சங்கீத சபா ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

———————————————————————————————————————————————-

Sunday October 28 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ,40 ரெட்டைத் தெரு

இரா. முருகன்

காலையில் பிரேயர் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியபோதே சண்டை ஆரம்பித்துவிட்டது. எலிமெண்டரி ஸ்கூல் என்பதால் சின்னப் பசங்களைச் சரியாகப் பிரார்த்தனை செய்யப் பயிற்சி தர, தினசரி ஒரு வாத்தியார் முதலில் பாட, பிள்ளைகள் தொடர்ந்து பாடுவது வழக்கம். நாலாவது வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணன் சார், “விவேகானந்தா உன்னை நான் மறவேன்’ என்று அன்றைக்குப் பாட நாங்கள் திரும்ப அதேபடி பிரார்த்தித்து விட்டு வகுப்பில் வந்து உட்கார்ந்தோம். மர ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கம் கனகவல்லி டீச்சர் எடுக்கும் ஐந்தாம் கிளாஸ்.

வகுப்பைச் சத்தம் போட விட்டுவிட்டு, நாலாங் கிளாஸ் உள்ளே கோபமாக எட்டிப் பார்த்தார் டீச்சரம்மா. “விவேகானந்தா உம்மை நாம் மறவோம்’ தான் சரியான பாட்டு என்பது அவருடைய வாதம். “வாத்தியாரே தப்பாச் சொல்லிக் கொடுத்தா, பிள்ளைங்க என்னத்தை ஒழுங்கா படிக்கும்?’ டீச்சர் இரைய, கிருஷ்ணன் சாருக்கோ சரியான பதில் கோபம். “உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க டீச்சர். தஞ்சாவூர் கிராமத்துலே வீட்டுக்காரம்மா புருஷனைக் கூப்பிடற மாதிரி விவேகானந்தரை நீர், உம்மைன்னு அரை மரியாதையோட கூப்பிடக் கூடாது; ஆண்டவன் போல ஒருமைதான் சரி’. கிருஷ்ணன் தஞ்சாவூர்க்காரர். நாலாம் கிளாஸ் வாத்தியார் என்பதால், ஐந்தாம் கிளாஸ் எடுக்கும் உள்ளூர் கனகவல்லி டீச்சரோடு ஒப்பிட்டால் ஒரு தட்டு கீழேதான்.

பள்ளி கரஸ்பாண்டெண்ட் சோமநாதன் சாவகாசமாக வீட்டில் பூஜை புனஸ்காரம் முடித்து சாப்பாட்டுக்கு அப்புறம் வாயில் தாம்பூலத்தோடு குடைபிடித்துக் கொண்டு பன்னிரண்டு மணி சுமாருக்கு நுழைந்தார். அவர் தலையைக் காணும் வரைக்கும். நாலாம் கிளாசிலும், ஐந்தாம் கிளாசிலும் அரைகுறையாகப் பாடம் நடந்தபடி இருக்க, “உம்மை’யா, “உன்னை’யா வாக்குவாதம் ஆவேசமாகத் தொடர்ந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் அவ்வப்போது ஒருவிரல், இரண்டு விரல் சைகைகளால் அனுமதி வாங்கி ஸ்கூல் வாசலில் கொடுக்காப்புளி வாங்க ஓடினோம்.

இந்தக் கொடுக்காப்புளி என்பது கொஞ்சம் வினோதமான தாவரவகை. இதை யார் வீட்டிலும் சமையல் செய்து பரிமாறிப் பார்த்ததில்லை. கொத்துக் கொத்தாக அவரைக்காய் மாதிரி கூறு கட்டி பள்ளிக்கூட வாசலில் கொடுக்காப்புளி விற்கிற பங்காரம்மா எங்கள் தலையைப் பார்த்ததும் “அரிசி இருக்கா?’ என்று ஆவலாக விசாரிப்பார். அரிசியோ குருணையோ கொடுத்தால், காசுக்குக் கிடைப்பதைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுக்காப்புளி கிடைக்கும். அரிசிக்கு தமிழ்நாடு ஆலாகப் பறந்த நேரம் அது. எலிக்கறி சாப்பிடச் சொல்லி கவர்மென்ட் சிபாரிசு செய்ததாகக் கூடக் கேள்வி.

ரேஷன் அரிசி போதாமல், கொடுக்காப்புளிக்கும், ஈச்சம் பழத்துக்கும், இலந்தைப் பழத்துக்கும் அரை உழக்கு அரிசி பண்டமாற்று கிடைக்காதா, ஒருவேளை கஞ்சிக்கு வழிபிறக்காதா என்று ஊரைச் சுற்றியிருந்த கிராமப்புறத்து ஏழைகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணஜயந்திக்கு நாவல்பழம் வாங்க என்று பாட்டியம்மா கொஞ்சம் அரிசி எடுத்துவைப்பது உண்டு. ஆனாலும் கொடுக்காப்புளி வாங்க அரிசி எல்லாம் பள்ளிக்கூடம் போகிறபோது கிடைக்காது.

பாட்டியின் கிராம்புப் பையிலிருந்து மணக்க மணக்க கிளப்பிய ஓட்டைக் காலணா என்ற பழைய பைசா ரெண்டு, நல்லெண்ணெய் வாங்கி மீதி சில்லறையாகக் கிடைத்து வீட்டில் கொடுக்க “மறந்து’ புது ஒற்றை நயா பைசா இரண்டு என்று பங்காரம்மாவிடம் கொடுத்தால், ஒரு சின்னக் குவியல் கொடுக்காப்புளி கைமாறும். ஒவ்வொன்றாக உரித்து வாயில்போட, இனிப்பும் துவர்ப்புமாக சுவர்க்கம் தட்டுப்படும். நிஜார் பாக்கெட்டில் மீதி கொடுக்காப்புளியை அடைத்துக் கொண்டு மூன்றாம் வகுப்பு வழியாக உள்ளே ஓடினால் ஸ்தானிஸ்லாஸ் சார் வழிமறிப்பார்.

“கண்ட கருமாந்திரத்தையும் தின்னு வயத்தைக் கெடுக்கவா ஸ்கூலுக்கு வந்தீங்க’ என்ற கூச்சலோடு பதுக்கிக் கொண்டு வந்ததை கஸ்டம்ஸ் அதிகாரி போலப் பிடித்து ஓரமாக வைப்பார். ஸ்கூல் விட்டதும் ஜன்னலுக்கு வெளியே விட்டெறியவாம். அறிவியல் பாடப் புத்தகத்தில் “உடலுக்கு நலம் தரும் கீரை, வெண்டை, தக்காளி, வாழை’ வகையறாக்களோடு கொடுக்காப்புளியையும் புத்தகம் போட்டவர்கள் சேர்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். “தினசரி பிரேயருக்கு முன்னால் ஒரு கொத்து கொடுக்காப்புளி சாப்பிட்டுவிட்டுத்தான் வரவேண்டும்’ என்று உத்தரவாகி, சாப்பிடாதவர்களை ஸ்டானிஸ்ஸôஸ் வாத்தியார் தண்டித்திருப்பார். (வாத்தியார் தட்டிப் பறித்த சரக்கை எல்லாம் விட்டெறிவதில்லை என்றும் வீட்டுக்கு எடுத்துப் போய் முழுக்கச் சாப்பிடுகிறார் என்றும் வதந்தி நிலவியதும் உண்மைதான்.)

எந்த கிளாஸ் ஆக இருந்தாலும் ஸ்தானிஸ்லாஸ் சார் தான் கைத்தொழில் ஆசிரியர். காதி போர்ட் கடையில் பளபள என்று பித்தளைச் சக்கரம் அடியில் மின்ன, மேலே நீளும் இரும்புக் குச்சியின் ஓரத்தில் அழகான வளைசலோடு வரும் தக்ளி கிடைக்கும். பதினாலு பைசாதான் விலை. எடுத்துக் கொடுக்க ஒருத்தர், தக்ளியை விட நீளமான காகித பில் போட ஒருத்தர், சரிபார்த்துக் கையெழுத்துப் போட ஒருத்தர், காசு வாங்கிக்கொண்டு வாங்கின பொருளைக் கையில் கொடுக்க இன்னொருத்தர் என்று இந்த பதினாலு காசு வியாபாரத்துக்குக் கடையில் நாலு பேர் இருப்பார்கள்.

தக்ளியில் நூற்கப் பஞ்சு இரண்டு பைசாவுக்கு ஒல்லியான கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி கங்காராஜ் கடையில் பில் இல்லாமல் கிடைக்கும். வாத்தியார் அழகாக தன்னுடைய பழைய தக்ளியில் சன்னமான நூல் நூற்பார். “இப்படி நூத்தே ரெண்டு மாசத்திலே நெஞ்ச வேட்டி’ என்று தன் வேட்டியைக் காட்டுவார். வழிமறித்துப் பறித்த கொடுக்காப்புளி கொடுத்த பலத்தில் நெய்ததாக இருக்கலாம். கொஞ்சம் பழுப்பேறி, ஒன்றிரண்டு இடத்தில் ஒட்டுப்போட்டு இருக்கும் அது.

கதர்க் கடையில் பாரதி புத்தகம் கிடைக்கிறது என்றும், எல்லாரும் உடனே வாங்கி வகுப்புக்கு எடுத்துவர வேண்டும் என்றும் உத்தரவானது. இதுவும் பதினாலு பைசாதான் விலை. என்ன காரணமோ, காதி, கதர்க்கடை விற்பனை சமாச்சாரங்களுக்கு இப்படிப் பதினாலு பைசா விலையை சர்க்கார் விதித்திருந்தது. கூட்டமாகப் போய், பில் போடுகிற, காசு வாங்குகிற சடங்கு எல்லாம் முடிந்து கையில் அந்தப் பதினாலு காசு பாரதி பாட்டுப் புத்தகம் கிட்டியது. அதன் அழகைச் சொல்ல சட்டென்று வார்த்தை வரமாட்டேன் என்கிறது. மொத்தம் பத்து பாட்டு. கனமான தாளில், பல வர்ணத்தில் ஒவ்வொரு பாட்டோடும் கோபுலு வரைந்திருந்த அழகான படங்கள். எதை எதையோ சேர்த்து வைத்த நான் அந்தப் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கத் தவறிவிட்டேன். பக்தவத்சலம் சர்க்காரை இந்த ஒரு புத்தகத்துக்காகவே, அரிசி சர்க்கரை ரேஷன், இந்தி திணிப்பை எல்லாம் மீறிப் பொறுத்துக் கொள்ளலாம்.

முழுவருடப் பரீட்சைக்கு நாலு நாள் முன்னால் நாலாங் கிளாஸ் மர ஸ்கிரீனுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்து கனகவல்லி டீச்சர் சொன்னார்- “”பசங்களா, அடுத்த செவ்வாய்க்கிழமை கல்யாணம். கோவில்லே வச்சு. வந்துடுங்க”. அவருக்குத்தான் கல்யாணம். மாப்பிள்ளை யார் என்று நாச்சம்மை கேட்டபோது, “உங்க சார்தான்’ என்றாள் டீச்சர் வெட்கத்தோடு சிரித்தபடி.

கோபுலு படம் போட்ட பாரதியார் பாட்டுப் புத்தகம் போல கனகவல்லி டீச்சர் முகம் அப்போது அழகாக இருந்தது. சம்பிரதாயமான பத்திரிகை வைத்து அழைக்காமல், அதுவும் சின்னப் பிள்ளைகள் கல்யாண விசேஷங்களுக்கு ஆஜராவது வீட்டில் தடை செய்யப்பட்டிருந்ததால், கல்யாணத்துக்குப் போகமுடியவில்லை. ஆனாலும் அடுத்த வாரச் சந்தை தினத்தில் காய்கறிப் பையோடு டீச்சர் வீட்டில் நுழைந்தோம். “கல்யாணக் கணக்கு எழுதின எம்ப்ளது பக்க நோட்டு எங்கே?’ வாத்தியார் தேடிக் கொண்டிருந்தார். “எம்ப்ளது இல்லே, எண்பது’ என்றாள் டீச்சர் அழுத்தந் திருத்தமாக. “உம்மை நாம் மறவோம்’ மாதிரி இன்னொரு போர் தொடங்கும் அபாயம் தட்டுப்பட்டது. ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே “வாங்கடா பசங்களா’ என்றார்கள்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday November 4 2007 00:00 IST

பழைய தெரு முனையில் திரும்பும்போதே சிரிப்புச் சத்தம் காதில் விழும். எல்லோரும் பெண்கள். எனக்கு ஏழெட்டு வயசு பெரிய மூத்தவளில் இருந்து, கிட்டத்தட்ட என் வயதில், பாவாடை சட்டை போட்ட கடைக்குட்டி வரை மொத்தம் ஆறுபேர். வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடிப் பக்கம் துணி துவைத்துக் கொண்டும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியும், வாளியில் சேந்திய தண்ணீரை மேலே தெளித்து விளையாடிக் கொண்டும் ஒரே நேரத்தில் அதில் நாலு பேராவது தட்டுப்படுவார்கள். ஒல்லியாக, வளர்த்தியாக, கண்ணில் மையும், தினசரி தலைகுளித்து நீண்ட தலைமுடியுமாகச் சிரிக்கும் முகங்களை ஒரு வினாடி அவசரமாகப் பார்த்து, சட்டென்று பார்வையை நேராகத் திருப்பித் தெருமுனையைக் கடப்பது வழக்கம்.

ஒரே வீட்டில் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு பெண்கள். ஊரில் சவுகரியமாக ஆறு புஷ்பம் என்று ஒற்றைப் பெயரில் அவர்களைக் கூப்பிடப் பழகியிருந்தார்கள். பழைய தெருமுனையிலே, “அதாம்பா ஆறு புஷ்பம் வீட்டுக்குப் பக்கம்’ என்பதுபோல் அடையாளம் சொல்கிற தகவல்கள் சகஜமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்பா இல்லாத வீடு. ஆறு பெண்களையும் வளர்த்து ஆளாக்கும் அம்மா பெயர் என்ன? அவர்கள் ஒவ்வொருத்தியின் பெயர்தான் என்ன? யாரும் யாரையும் கேட்டதில்லை.

ஆனாலும் எனக்குக் கொஞ்சம் தெரியும். அதாவது கடைக்குட்டிப் பெண் பெயர் மட்டும். “”லட்சுமி, பராக்குப் பார்த்தபடி பல் தேய்ச்சு பேஸ்டை முழுங்கிடாதே. அப்புறம் பல்ப் போட்ட மாதிரி குடல் எரியும்”. தென்னை மரப் பக்கம் நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தவளிடம், துணி துவைத்துக் கொண்டிருந்த மூத்த அக்கா சத்தமாகச் சொன்னபோது நான் திரும்பிப் பார்த்தேன். லட்சுமி வாயெல்லாம் பேஸ்ட் நுரையோடு பெரிய கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தாள். முழங்காலுக்குக் கீழே தாழ்கிற அரைநிஜார் அணிந்த ஒரு பன்னிரண்டு வயதுச் சோனிப் பையன் முதன்முதலாக குறுகுறுப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்ட வினாடி அது.

ஆறு புஷ்பம் வீட்டில் மெஸ் நடத்தினார்கள். காலை நேரத்தில் தாவணி முந்தானையை இழுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு அம்பாரமாகக் குவித்த பத்துப் பாத்திரங்களைக் கழுவுகிறதும், தோட்டத்தில் கத்தரி, வெண்டை, கீரை பயிர் செய்வதும், தென்னை மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதும் மெஸ் சம்பந்தப்பட்டவை. நான் சொன்னபோது குண்டுராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். எட்டாம் கிளாசில் படித்தாலும் எனக்கு நாலு வயது சீனியர். அவனுடைய சைக்கிள் செயின் கழன்று போய் ஆறு புஷ்பம் வீட்டுக்கருகில் குனிந்து உட்கார்ந்து அதை மாட்டிக் கொண்டிருக்க, பின் சீட்டில் சவாரி செய்துவந்த நான் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தேன். ” நீ குழந்தைப் பிள்ளைடா’. குண்டுராஜூ சைக்கிள் நேரானதும் சிரிப்புச் சத்தம் கேட்கும் கிணற்றடியைப் பார்த்தபடி இருந்தேன். லட்சுமியைப் பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது.

பாட்டியம்மா இட்லி வாங்கி வர அனுப்பிய ஒரு ராத்திரியில் கர்னாடக சங்கீத மெஸ் மட்டுமில்லாமல் ரெட்டைத் தெரு முழுக்க மின்சாரம் காணாமல் போயிருக்க, நான் சட்டென்று தீர்மானமெடுத்து பழைய தெருப் பக்கம் திரும்பினேன். ஆறு புஷ்பம் மெஸ்ஸில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “ராஜா மகள், ரோஜா மலர், என் ஆசை நிறைவேறுமா’ என்று கொஞ்சம் பழைய சினிமாப் பாட்டு வீட்டுக்குள் இருந்து வந்தது. “நாலு இட்லி, வெங்காயம் போடாத சட்னி’ லட்சுமியிடம் இதைச் சொல்வதை மனதில் ஒத்திகை பார்த்தபடி படியேறினேன். “”என்னடா தம்பி வேணும்?” எதிர்ப்பட்டது மூத்த அக்கா.. கிராம்பு மென்றபடி வந்து நின்றாள். பாவாடை தாவணியில் இல்லாமல் பாந்தமாகச் சேலை உடுத்தியிருந்தாள் அவள்.

ஹைஸ்கூலுக்குப் புதிதாக வந்த விஸ்வநாதன் வாத்தியார் உள்ளே வந்ததும், என்னைப் பார்த்து முறைத்தபடி(அப்படித்தான் நினைத்தேன்) கூடத்துக்குப் போனதும், ஆறில் ஒரு புஷ்பம் ஏதோ சொல்ல ரெண்டு பேரும் உரக்கச் சிரித்ததும், கிராம போனில் ஓய்ந்திருந்த ராஜா மகள் திரும்ப ஆசை நிறைவேறுமா என்று கேட்க ஆரம்பித்ததும் அப்புறம் நடந்தவை. “”விஸ்வநாதன் சார் ஆறு புஷ்பம் மெஸ்ஸிலே சாப்பிட்டு முடிச்சு நடுராத்திரிக்குத்தான் காந்திவீதியிலே தன்னோட ரூமுக்குத் திரும்பிப் போறார்” இதைச் சொல்லும் போதும் குண்டு ராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அந்த வருஷ நவராத்திரி நேரத்தில் ஆறில் மூத்தவள், ராஜா சவுண்ட் சர்வீஸ் குருநாதனைக் காதல் கல்யாணம் செய்து கொண்டு ரெட்டைத் தெருக் கடைசி “வரதன் ஸ்டோர்’ வீடுகள் ஒன்றில் குடியேறினாள். வீடுவீடாகப் போய் நவராத்திரிக் கொலுவுக்கு அழைக்கிற தெருப் பெண்கள் தன் வீட்டுப் படியேறாததை அவள் கிராம்பு மென்றபடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் சன்னமாக ராஜா மகள் கேட்டது. சரஸ்வதி பூஜை சமயத்தில் அந்தப் பாட்டு எங்கள் வீட்டுக்கு ஏதிரே ரேடியோ ரிப்பேர்கார புஷ்பவனம் வீட்டுத் திண்ணையில் கரகரவென்று கேட்க ஆரம்பித்து , குரல்வளையை நெரித்தாற் போல் கிரீச்சிட்டுப் பாதியில் நின்றது. “பழைய ரேடியோ கிராம். இதுக்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. ரிப்பேர் கொஞ்சம் கஷ்டம்தான்.’ புஷ்பவனம் மாமா சொல்ல, அவள் கிராம போன் பெட்டியை சணல் பையில் அடைத்து எடுத்து வைக்க நான் உதவி செய்தேன். கிராம்பு மணக்காமல் சிரித்தாள் அக்கா.

அப்புறம் ஒரு நாள் நேருவீதி காதர் கடையில் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொண்டிருந்த போது ஆறில் இன்னொரு புஷ்பம் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்தேன். பெண்கள் ஓட்டுகிற அந்த சைக்கிளை “கல்யாணப் பரிசு’ திரும்ப டூரிங் தியேட்டருக்கு வந்த போது, “வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்று பாடியபடி சரோஜாதேவி ஓட்டிப் பார்த்திருக்கிறேன். நேரில், அதுவும் என்னைவிட நாலைந்து வயது மட்டும் பெரிய பெண் ஒருத்தி லாவகமாக ஓட்டிவந்து நிறுத்திவிட்டு, காதர் கடைக்கு அடுத்த பேன்சி ஸ்டோரில் “ரெமி ஸ்நோ, டால்கம் பவுடர் தாங்க’ என்று கேட்டு வாங்கியது ஏதோ கனவில் நடக்கிறது போல் இருந்தது. அப்படியே அடுத்த தங்கப்பன் பழக்கடையிலும் நுழைந்து அவன் கொடுத்த பணத்தைக் கைப்பையில் வைத்தபடி நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டாள். “சித்தையா கம்பெனி’ என்ற லேவாதேவி கடையில் கடன் வசூல் உத்தியோகமாம். ஒரு பெண் படியேறிக் கேட்டால் வராத கடனும் வசூலாகும் என்பதால் சித்தையா அந்தக் காலத்திலேயே பெண் ஊழியர்களை நியமித்தது ஆறு புஷ்பம் வீட்டில் இருந்து தொடங்கியது.

வெய்யில் காலத்தில் பாட்டியம்மா அப்பளம் இடுவது வழக்கம். வருடம் தவறாமல் தானே செய்துவந்த இந்தக் காரியம், அவள் சுகவீனப்பட்ட காரணத்தால் காண்ட்ராக்டில் விடப்பட்டது. செல்லூர் மெஸ்ஸம்மாதான் சப்ளையர்.””உள்ளங்கையைவிடச் சித்தெ பெரிசா, சுட்டா சிவக்காம, பொறிச்சா எண்ணை குடிக்காம, நல்ல வட்டமா வரணும், பெரண்டைச் சாறு தூக்கலா வேணும்”. அப்பள உற்பத்திக்கு டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுத்த பாட்டியம்மாளிடம், “”தனியாப் போட கஷ்டம். கூட யாரையாவது சேத்துக்கறேன்” என்றாள் செல்லூரம்மா. அவளுடைய அசிஸ்டென்ட் ஆறு புஷ்பங்களின் அம்மா என்பது பாட்டிக்குத் தெரியாது.

சாத்தப்பன் ஊருணிப் பக்கம் நான் குரங்குப் பெடலில் சைக்கிள் ஓட்டிப் போன போது முன்னால் இரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது புஷ்பம் லட்சுமியும் அவள் அம்மாவும் . லட்சுமி தாவணி போட்டிருந்தாள். அவள் கொத்தாக அள்ளிக் கையில் வைத்திருந்தது, பக்கத்துக் கரட்டுப் பூமியில் பறித்த பிரண்டை. “”ஊரெல்லாம் தெரிய தூக்கிட்டு வரணுமாடீ. இதை தாவணிக்குள்ளே மறைச்சுக்கோயேன்” அவளுடைய அம்மா சொன்னாள். “”நீயே உன் புடவைத் தலைப்புலே கத்திக்கோ. என்னைப் பெத்த வயத்துலே பிரண்டை அடைச்சுக்கலாம்” லட்சுமி பிரண்டையை அம்மாவிடம் கொடுத்த போது நான் சைக்கிள் மணியை அடித்து வழிகேட்டு அவர்களைக் கடந்து போனேன். அம்மாவும் பெண்ணும் சிரிக்கும் சத்தம் பின்னால் கேட்டபடி இருந்தது. அது சிரிப்பில்லை என்று தெரிய அப்புறம் எத்தனையோ காலமானது.

———————————————————————————————————————————————-

Sunday November 18 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

வாழ்க்கையிலேயே முதல் தடவையாகப் பேண்ட் போட்டுக் கொண்டபோது சத்திய சோதனை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்து வயதுப் பையன்களுக்கு, இடுப்புக்கு மேலே வார் வைத்த நிஜார்தான் அனுமதிக்கப்பட்ட உடுப்பு. ஆனாலும், தீபாவளி நேரத்தில் அழுது புரண்டு அடம் பிடித்து புது பேண்ட்டுக்கான அனுமதி வீட்டில் கிடைத்தபோது என்னைவிட சந்தோஷப்பட்டவர் குருசாமி டெய்லராகத்தான் இருக்கவேண்டும். ஊரில் பேண்ட் போடுகிறவர்கள் சொற்பம். அவர்களும் மதுரைக்குப் போய்த் தைத்து வாங்கி வந்துவிடுவது வழக்கம். குருசாமி டெய்லருக்கு பேண்ட் தைத்துப் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான். என்னை நிற்கவைத்து இஞ்ச் டேப்பால் காலில் ஆரம்பித்து கழுத்தைச் சுற்றிக்கூட ஏகப்பட்ட அளவெடுத்துக் குறித்துக்கொண்டு, கெட்டியான பைஜாமா போல் தைத்து எடுத்து வந்து கொடுத்தார். இடுப்பிலிருந்து கால்வரை நீண்டு வந்த அதன் பெயர் பேண்ட்தான்.

“”யார்கிட்டே பேண்ட் இருக்கு?” பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு மூன்று வாரம் முன்னால் கிருஷ்ணன் சார் வகுப்பில் விசாரித்தபோது நான் பெருமையோடு இரண்டு கையையும் உயர்த்த, சாயந்திரம் நாகப்பன் வாத்தியாரைப் பார்க்கச் சொன்னார் அவர்.

“”இதான் வரவேற்புரை. சொல்லி, நிகழ்ச்சியை நீதான் ஆரம்பிச்சு வைக்கறே.” நாகப்பன் நாலாக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினார். சென்னையில் ஏதோ பத்திரிகை ஆபீசில் ப்ரூஃப் ரீடர் என்ற உத்தியோகத்திலிருந்தாராம். “மதராஸில் ஜலக் கஷ்டம்’ என்று பத்திரிகையில் வழக்கமாக எழுதுகிற தொழிலாக இருக்கலாம் அது. வேலை பிடிக்காமலோ என்னமோ, டீச்சர் டிரெயினிங் போய் வாத்தியாரானவர்.

காகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். “இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை!! மாலை ஆறு மணி! வருக… வருக..வரவேற்கிறேன் உங்களை!’ என்று இரண்டு பக்கத்துக்கு இருந்தது அந்த வரவேற்புரை. இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒற்றை, ரெட்டை, சமயத்தில் மூன்று ஆச்சரியக் குறிகளை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. லேசாக, நடுவாந்திரம், அதிகமாக என்று பல தினுசில் ஆச்சரியப்பட மார்ச் பதினைந்தாம் தேதியில் என்ன விசேஷம் என்றும் புரியவில்லை. பத்திரிகையில் “மதராஸில் ஜலக் கஷ்டம்’ கூட ஒரு ஆச்சரியத்தோடுதான் முடிந்ததாக நினைவு. அந்த ஆச்சரியகரமான வரவேற்புரை பாடத்தை விடச் சீக்கிரமாக மனப்பாடம் செய்யப்பட்டு, கடகடவென்று சொல்ல இரண்டே நாளில் நான் தயார் ஆனேன்.

தினசரி சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டதும் நாலரை மணிக்கு ஒத்திகை. வருஷம் தவறாமல் “நேரு மாமா, ரோஜாவின் ராஜா, பஞ்சசீலம்’ என்ற வார்த்தைகளோடு ஒரு பாட்டு இருக்கும். அந்தந்த வருடம் பிரபலமான சினிமாப்பாட்டு மெட்டில் இதையும் நாகப்பன் சார்தான் எழுதிக்கொடுப்பார். அந்த வருடம் “பாட்டுப் பாடவா, பார்த்துப் பேசவா’ மெட்டில் நேரு மாமா வந்தார். இந்தப் பாட்டை கோஷ்டி கானமாக ஆமினா, கனகவல்லி, முத்தம்மா டீச்சர்கள் இசைக்க, நாலாவது மற்றும் ஐந்தாவது வகுப்புப் பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு வட்டமாகச் சுற்றி வந்து இப்படியும் அப்படியுமாகக் குதிப்பார்கள். எல்லோர் தலையிலும் கட்டாயமாக வளையல்கடையில் வாங்கிய பிளாஸ்டிக் ரோஜாப்பூவும் கழுத்தில் ரோல்ட் கோல்ட் நெக்லசும் இருக்கும். ஆடத் தேர்ந்தெடுத்ததுமே இந்த இரண்டையும் வீடுகளில் வாங்கச் சொல்லி, துணிப்பையில் போட்டுப் பெயர் எழுதிப் பள்ளிக்கூட மர அலமாரியில் அட்டனெஸ் ரிஜிஸ்தர்கள், சாக்பீஸ் டப்பாக்களோடு வைத்துவிடுவது வழக்கம்.

ஆண்டு விழாவுக்கு நாள் நெருங்க நெருங்க, பள்ளிக்கூடத்தில் பரபரப்பு அதிகமாகும். கடைசி நாலைந்து நாள் பாடம் நடத்துகிற நேரத்தை விட ஆண்டு விழா தயாரிப்புதான் முக்கிய வேலையாகிவிடும். பெரிய மூங்கில் தட்டிகளைத் தரையில் படுக்கப் போட்டு, மேலே வெள்ளைக் காகிதத்தைப் பசை காய்ச்சி ஒட்டி உலரவைத்துக் கொண்டிருப்பார் கிருஷ்ணன் சார். பசை காய்ச்ச, காகிதம் எடுக்க, கிட்டு கடையில் வாத்தியாருக்குக் கும்பகோணம் சீவலும் வெற்றிலையும் வாங்கிவர என்றமாதிரி எடுபிடி காரியங்கள் செய்வதில் வரும் இன்பம் சொல்லிமாளாது. அப்புறம் மண்சட்டியில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று கிருஷ்ணன் சார் சொல்லியபடிக்கு வர்ணம் கரைக்கிற வேலை. கரைத்து வைத்த வர்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவர் பென்சிலால் மூங்கில்தட்டியில் ஒட்டிய காகிதத்தில் காந்தி, பாரதி, மண்டி போட்டுக் கைகுவித்து வணங்குகிற பெண்கள் என்று படம் வரைவார். படத்தில் ஈஸ்ட்மென் கலரில் வர்ணம் பூசுகிற வேலை அடுத்தது. எல்லாப் படத்திலும் கைவிரல்கள் உடம்போடு ஒட்டாமல் கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி நீண்டிருப்பதோடு, எல்லா முகத்திலும் கனகவல்லி டீச்சர் போல் மூக்கு நீளமாக இருக்கும். அந்த வருடம் வரையப்பட்ட ஜான் கென்னடி பச்சை பேண்ட், நீலக் கோட்டோடு கனகவல்லி டீச்சர் மாதிரிப் பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தார்.

ஆண்டு விழாவுக்கு ஒரு நாள் முந்தி உடுப்பு ஒத்திகை என்று சொல்லி ஆட, பாட, நடிக்கத் தேவையான உடுப்பு, உபகரணங்களோடு நிகழ்ச்சிகள் சரிபார்க்கப்படும். வாத்தியார், டீச்சர்கள், ஹெட்மாஸ்டர், கரஸ்பாண்டெண்ட் போன்றவர்கள் நிறைந்த சபை அது. புதுத்துணி வாடையடிக்கும் நீலப்பாவாடையோடு நேருமாமா பெண்கள் ஆடும்போது, டீச்சர்களின் இசைக்குழுவுக்குத் தபலாவில் தாளம்போட கெüரவ வித்வானாக, பாலாம்பா டீச்சரின் தம்பி அரிசிக்கடை சாமிநாதன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் காது மந்தம் என்பதால், பாலாம்பா டீச்சர் கையை உயர்த்தித் தாழ்த்தி தாளம் பாட்டோடு நடக்க ஒத்தாசை செய்தார். அங்கவஸ்திரத்தைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு கிரிதரன் கடெüயேழு வள்ளல்களில் ஒருவரான குமணன் ஆகத் தமழுக்குத் தலைகொடுக்க நாலு திசையிலும் எச்சில் தெறிக்கச் சூளுரைத்தான். அடுத்த காட்சியில் காதிதக் கூழால் செய்த தலையைத் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு புலவனாக குண்டுராஜா வரவேண்டும். அவசரமாக நடந்து வேட்டி தடுக்க, அவன் கையில் பிடித்த தலை தரையில் விழுந்து உள்ளேயிருந்து தேங்காய்மட்டை எட்டிப் பார்த்தது. உடனடியாகக் காகிதப்பசை காய்ச்சித் தலை ஆப்பரேஷனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“”வரவேற்புரை யாரு, வா இங்கே.” படபடப்போடு போய் நின்றேன். “”டிரஸ் எங்கேடா?” அவசரமாகக் குனிந்து பார்த்தபோது, “”அசடே, பேண்ட் எங்கேன்னு கேக்கறேன்.” என்னத்தைச் சொல்ல? டிரஸ் ரிகர்சலுக்கு எல்லாம் பேண்ட் தரமுடியாது என்று வீட்டில் கட்டாயமாகச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. “அப்புறம் அதைத் திரும்பத் துவைக்கணும். இஸ்திரி போடணும், ஆண்டு விழாவுக்குன்னு ஏற்னவே ஒருரூபா அழுதாச்சு. இன்னும் பணம் செலவழிக்க முடியாதுன்னு போய்ச் சொல்லு’ சொல்ல முடியாது. “”சலவைக்கடையிலே இருந்து நாளைக்குத்தான் கிடைக்கும் சார்” வாழ்க்கையில் பொய் சொல்வது கூட ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்பமாகிறது.

“இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு! வெள்ளிக்கிழமை!’. நான் கடைசி ஒத்திகையாக ஆச்சரியப்பட ஆரம்பிக்கக் குரலே எழும்பவில்லை. பாலாம்பா டீச்சர் ஸ்கூல் தோட்டத்திலிருந்து திம்ஸ்கட்டையை எடுத்து வந்து முன்னால் நிறுத்தினார். “”இதான் மைக் அப்படீன்னு நினைச்சு உரக்கப் பேசு. சபைக் கூச்சம் ஓடிப்போகும்.” கட்ட மைக்குக்கு முன்னால் நின்று அன்றைக்குக் கத்த ஆரம்பித்ததுதான்.

அப்புறம் பேங்கில் வேலைபார்த்தபோது, பாலாம்பா டீச்சரின் பென்ஷனை அவர் வீட்டிலேயே போய்ப் பட்டுவாடா செய்யவேண்டி வந்தது. நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தார் டீச்சர். “”வாடா வா, பென்ஷன் பணமா? காதுலே விழறது. மெதுவாச் சொல்லேன். கடப்பாறையை முழுங்கினியா சின்ன வயசிலே?” டீச்சர் பொக்கைவாயால் சிரித்தபடி செல்லமாகத் தலையில் குட்டினார். “”கடப்பாறை இல்லே, திம்ஸ்கட்டை” என்றேன் அவர் காதில் விழாமல் மெதுவாக.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

அந்த வீட்டைச் சாவு சுற்றிச் சுற்றி வந்தது. அப்படித்தான் நினைத்தோம். வருடம் தவறாமல் அங்கே யாராவது செத்துப் போனார்கள். பள்ளிக்கூடம் விடுமுறை விட்ட குளிர்கால ராத்திரியில் திடீரென்று அழுகைச் சத்தம் கேட்டால், வேதமய்யா வீடுதான் உடனடியாக மனதில் வரும். பெரும்பாலும் அது சரியாகவும் இருக்கும்.

அரண்மனை மாதிரி வீடு என்று சொல்வது வேதமய்யா வீட்டைப் பொறுத்தவரை பாதி பொருந்தும். பாழடைந்த அரண்மனை அது. வேதமய்யா என்ற ஒருத்தரை நாங்கள் மட்டுமில்லை; எங்கள் வீட்டுப் பெரிசுகளிலும் அநேகமாகப் பலபேர் பார்த்தது இல்லை. மூன்று தலைமுறைக்கு முன்னால் திவானாக இருந்தவராம். பாட்டி சின்ன வயதில் அம்பலப்புழையிலிருந்து வரும்போது மலையாளத்தில் அவளுடைய அம்மா, அப்பா பற்றி சம்சாரித்து, மிட்டாய் கொடுப்பாராம் வேதமய்யா. அவ்வளவு பழைய காலத்து மனுஷர். அவருக்கு அப்புறம் வாரிசு அருகிப் போனது. மிஞ்சியவர்களுக்குள் சண்டை, நிலபுலங்கள் கடனுக்காக அடமானம் வைத்து முழுகியது, வருமானக் குறைவு என்று அடுத்தடுத்த தலைமுறைகளில் இறங்குமுகமாகி, நான் பார்க்கும்போது இழுத்துப் பறித்துக்கொண்டு இறுதி மூச்சு விட்டபடி கிடந்தது வேதமய்யா வீடு.

வீடு முழுக்க பாட்டி, தாத்தா என்று வயதானவர்கள். கரண்ட் பில் கட்டாததால் ப்யூûஸப் பிடுங்கிப் போனதற்குப் பிறகு ராத்திரி லாந்தர் வெளிச்சம் முணுக் முணுக்கென்று அலைபாய வீட்டிலிருந்து இருமல் சத்தமும், வென்னீர் கேட்கிறதும், கொல்லைப் பக்கம் கையைப் பிடித்துக் கூட்டிப் போகச் சொல்லி மன்றாடுவதும் கேட்கும். “”கொஞ்சம் பொறுக்கணும். புனர்பாகமா சாதம் வடிச்சாறது”. வலது பக்கம் கோணலாகச் சாய்ந்த கழுத்தோடு அலமேலு கீச்சுக்கீச்சென்று இரைவதும் காதில் விழும். வேதமய்யாவின் பேரனுக்கோ, பேத்திக்கோ பிறந்த பெண் அலமேலு.

ராத்திரி தூங்கத் திண்ணையில் படுக்கை விரிக்கும்போது “”அத்தே, எங்களை விட்டுப் போய்ட்டீங்களா” என்று அலமேலு குரல் கேட்டால் அந்த வீட்டில் ஒரு இருமல் சத்தம் ஓய்ந்து போனதாக அர்த்தம். நடுராத்திரி வரை ஒற்றை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பாடை முடைகிறவர்கள் உரக்கப் பேசியபடி இருப்பார்கள். விடிகாலையிலோ அல்லது இருட்டு பிரியும் முன்னரோ பிணம் எடுத்தபிறகு, பஞ்சாயத்து குழாயில் தகர வாளியில் பிடித்த தண்ணீரை செங்கல் உதிர்ந்த வீட்டுத் திண்ணையில் வீசிவீசி அலமேலு கழுவும்போது அவள் கழுத்து இன்னும் கோணலாக, தோளால் வாயைப் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பாள். ஒரு வருடம் மார்கழியில் வேதமய்யா வீட்டில் பத்து நாளைக்கு ஒன்றாக ராத்திரிச் சாவு தொடர, அந்த வீட்டு வாசலைக் கடந்து போகவே இனம் புரியாத மிரட்சியாக இருந்தது. ஆனாலும், வீட்டில் தொடர்ந்து இருமித் துப்பி வென்னீர் கேட்க இன்னும் ஆட்கள் இருந்தார்கள்.

கோணல் கழுத்தம்மா பொங்கலுக்கு முந்திய போகிப் பண்டிகை நாள் பகல் நேரம் எங்கள் வீட்டுப் படியேறி வந்தாள். கூடவே விசித்து விசித்து அழுதபடி அவளுடைய மகள் விமலியும். கொஞ்சம் பயத்தை எழுப்பும் பூனைக் கண் விமலிக்கு. ரெண்டாம் கிளாசில் படிக்கிறவள். பாதிப் பள்ளிக்கூடம் நடக்கும்போதே பைக்கட்டைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாள். யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

“”உங்க வீட்டுக்கு வந்த பொங்கல் வாழ்த்தை இவ அவசரப்பட்டுப் பிரிச்சுட்டா. பம்பாய்லேருந்து வந்ததா நெனப்பு. இருக்கியா செத்தியான்னே கேக்காதவங்க வாழ்த்து எல்லாம் அனுப்ப மாட்டாங்கன்னு இந்த மூதேவிக்குத் தெரியலை”. நான் பார்த்துக் கொண்டிருக்க அலமேலு விமலி முதுகில் பலமாக அடிக்க, அந்தப் பெண் இன்னும் தீனமாக அழுதாள். பாட்டி சமாதானப்படுத்தி போளி கொடுத்து அனுப்பினாள்.

எப்போதாவது ரகு வாசல் படியில் உட்கார்ந்திருப்பான். கோணல் கழுத்தம்மா மகன். எங்கேயோ ஹாஸ்டலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். ரொம்பவே பூஞ்சையான உடம்பு. குண்டு ராஜூ வயசு அவனுக்கு. கொஞ்ச நாள் அவன்கூட இங்கேதான் படித்தானாம். நானும் ராஜூவும் அவனைக் கடந்து போகும்போது, “”பம்பாய்க்குப் போகலாமா?” என்று ராஜூவைக் கேட்பான். “”சாப்பிட்டு வந்துடரேன். அப்புறம் ராத்திரி போட்மெயில்லே போகலாம்” என்றபடி ராஜூ என்னை இழுத்துப் போவான்.

ஒரு சாயந்திரம் நாங்கள் தெருவில் பந்தும் மட்டையுமாகச் சுறுசறுப்பாக இருந்தோம். ரகு வீட்டு வாசலில் உட்கார்ந்து “”லண்டன் போகணும், டெல்லி போகணும், மெட்ராஸ் போகணும்” என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். கோணல் கழுத்தம்மா விமலிக்காக ஒரு பென்சிலை இரண்டாக நறுக்கியபடியே, ஒவ்வொரு ஊர்ப் பேர் சொல்லியானதும், “”நாளைக்குப் போகலாம்” என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தாள். “”பம்பாய் போகணும். வேணாம். அப்பா அயோக்கியன் கிட்டே போக வேணாம்” ரகு திடீரென்று குரலை உயர்த்தி அழ, அலமேலு அவனை மெல்ல உள்ளே கூட்டிப் போனதைப் பார்த்தோம். அந்தி சாய, அப்புறம் விளையாடவில்லை.

அன்றைக்கு ராத்திரிதான் ரகு செத்துப் போனது. கோணல் கழுத்தம்மாவும், விமலியும் கதறி அழுத சத்தம் இரண்டு தெருமுனை தாண்டிக் கேட்டிருக்கும். வழக்கம்போல் பாங்க் சுந்தரராமன் தான் பிணம் தூக்க வந்தது. ஏதோ பாங்கில் வேலை பார்த்து, மோசடி கேசில் ஜெயிலுக்குப் போய்த் திரும்பி, பிழைப்புக்காகப் பிணம் தூக்குவது என்றாகிப்போனது சுந்தரராமனுக்கு. “”சந்தானம் தாயாரை எரிச்சுட்டு வந்தா. நடுராத்திரியிலே வெட்டியான் வந்து வீட்டுக் கதவைத் தட்டற சத்தம். பாதியிலே அணைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்சம் விறகு வேணுமாம். ராத்திரியிலே விறகுக்கடை நாயக்கரை எழுப்பி…” சுந்தரராமன் எங்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம் புகையிலை போட்டபடி சக பிணம் தூக்கிகளிடம் சொல்லி உரக்கச் சிரித்தது அந்த ராத்திரியில் கலவரமாக மனதில் பதிந்துவிட்டது. அடுத்த நாள் காலை ஈரமாக இருந்த வெற்று வாசல் படியைப் பார்த்து “”பாவம்டா ரகு” என்றான் குண்டுராஜூ.

ரகு போன அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வீட்டிலிருந்து இன்னும் சிலர் இறுதிப் பயணமானார்கள். வீடு கிட்டத்தட்டக் காலியாகி, அலமேலுவும், விமலியும் மட்டும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வளைய வந்து கொண்டிருந்தார்கள். விமலி சூட்டிகையான பெண். ஆனாலும் திடீர் திடீரென்று அழ ஆரம்பித்துவிடுவாள். கோணல் கழுத்தம்மா இருமிக்கொண்டே அவளைச் சமாதானப்படுத்துவாள்.

அதற்கும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் ராத்திரி விமலி அழுத சத்தம் அந்த வீட்டிலிருந்து கேட்டது. கோணல் கழுத்து அலமேலு செத்துப் போனதாகத் தெரிந்தது. திரும்பவும் பாங்கு சுந்தரராமன் சிரிப்பு. பெட்ரோமாக்ஸ் வெளிச்சம், பாடை முடைவது, இன்னும் கொஞ்சம் அழுகை, தூக்கிப் போகிறவர்கள் குரல், இனம் புரியாத சோகம். காலையில் அந்த வீட்டுத் திண்ணையை அலம்ப யாரும் இல்லை.

விமலியை யாரோ பம்பாய் கூட்டிப் போனார்கள். “”அவ அப்பனை வளைச்சுப்போட்ட படுபாவி இந்தக் குழந்தையை வேலைக்காரியா வச்சுக்காம சொந்தப் பொண்ணா வளர்க்கணுமே, அம்புலப்புழை கிருஷ்ணா”, பாட்டி மனமுருகப் பிரார்த்தித்தாள்.

எத்தனையோ வருடம் கழித்து ராத்திரியில் தாமதமாக தில்லியிலிருந்து பம்பாய் புறப்பட்ட விமானத்தில் “விமலி ரங்னேகர்’ என்ற பெயர் அட்டை குத்திய ஏர்ஹோஸ்டûஸப் பார்த்தேன். பூனைக் கண்ணி. “”பூல் கயீரே” (மறந்து போச்சு) என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விமலியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விமலி என்றால் கட்டாயம் ஊரை மறந்திருப்பாள். மறப்பதில்தான் அவளுக்கு மகிழ்ச்சி. நினைப்பதில் எனக்கு இருப்பதுபோல.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

“என்னப்பனே, என் அய்யனே, பார்வதியாளின் பாலகனே, பன்னிருகை வேலவனே’ என்று உரத்த குரலில் பெங்களூர் ரமணியம்மாள் பாடும் இசைத்தட்டு எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் இப்போதும் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் ஏற்படும். கூடவே கத்திரி வெய்யில் காய்கிற ஒரு மத்தியானப் பொழுது மனதில் விரியும். வீங்கின கன்னமும், அவமானமும், அடக்க முடியாத அழுகையுமாகப் பகல் சாப்பாட்டுக்கு அதோ, வீட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற பள்ளிக்கூடப் பையன் நான்தான்.

புது வாத்தியார். ராஜமன்னார்சாமி என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பெயர். உயரமும், பெரிய மீசையும், சிவந்த கண்ணைக் கடந்து வழியும் சிடுசிடுப்பும். அடி வயிற்றிலிருந்து வருகிறது போன்ற சத்தமுமாக அவர் போலீஸ்காரர்போல்தான் இருந்தார். வகுப்புப் படியேறி உள்ளே வந்தவர் இரண்டாம் பெஞ்சில் நேரே எனக்கு முன்னால் வந்து நின்றார். மரியாதைக்காக நான் எழுந்திருக்க முயற்சி செய்வதற்குள் என் கன்னத்தில் இடி போல் அவர் கை இறங்கிய சத்தம் கிளாûஸக் கடந்து சாத்தப்பன் ஊருணிக்கரையில் எதிரொலித்திருக்கும்.

” பட்டன் போடுடா, திருட்டு ராஸ்கல்’ அடிக்கு மேல் அடுத்த அவமானமாக ஒரு வசவு. திருட்டு ராஸ்கல் நான்.

திங்கள் கிழமை என்பதால் காலையில் அவசரமாகச் சீருடையை எடுத்து மாட்டிக் கொண்ட போது , வெள்ளைச் சட்டையில் கழுத்துக்குப் பக்கத்துப் பொத்தான் உதிர்ந்து போயிருந்தது. காலை நேர அவசரத்தில் யாரிடம் ஊசியில் நூல் கோர்த்து, விபூதிச் சம்படத்துக்குள் வெள்ளை பட்டனைத் தேடி எடுத்து (வீட்டில் ஏனோ அங்கேதான் பொத்தான், ஊசி போன்ற சமாச்சாரங்களைச் சேமித்து வைப்பார்கள்) தைத்துக் கொடுக்கும்படி கெஞ்ச முடியும்? பாட்டியம்மா சரியென்று அதுவரை ருத்ராட்சத்தை உருட்டிய ஸ்கோரை “சம்போ அம்பத்துரெண்டு’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டு உதவிக்கு வருவாள். அவளுக்கு ஊசியில் நூல் கோர்க்க ஒத்தாசை செய்து தைத்து முடிப்பதற்குள் சாயந்தரமாகிப் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். பாதியில் நிறுத்திய அவளுடைய “சம்போ’ ஸ்கோர் ஆயிரத்தெட்டைத் தொட அரைவாசி தூரம் பின் தங்கி இன்னும் ஐந்நூற்று இரண்டிலேயே நிற்கும். முடிக்காமல் சாப்பிட மாட்டாள் அவள்.

சேஃப்டி பின் குத்திப் போகலாம் என்றால் அம்மா வேண்டும். அவள் கழுத்துச் சங்கிலியில் கோர்த்து வைத்து, தேவையானால் எடுத்துக் கொடுத்து அடுத்த நாள் ஞாபகமாகத் திரும்பப் பெறும் வஸ்து அது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில் அம்மா பூஜையில் மும்முரமாக இருந்ததால் அதுவும் முடியாமல் போனது. எல்லாம் சேர்ந்து பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எனக்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் திருட்டு ராஸ்கல் பட்டத்தை போலீஸ்கார வாத்தியாரிடம் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கன்னத்தையும் வீங்க வைத்துவிட்டது. அல்பமான பொத்தான் அது.

“சினிமாவுக்குப் போனா, உலகமே மறந்துடுமாடா நாயே’. ராஜமன்னார்சாமி கர்ஜித்த போது கண் இருண்டு வந்தது. இதெல்லாம் கனவு. இதோ முடிந்து எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டுப் பல் தேய்க்கப் போக வேண்டியதுதான் என்று மனம் சமாதானம் சொன்னது. ஆனால் அது கனவில்லை என்பது முதுகை வளைத்து அடித்த அடியாக விழுந்தது. வகுப்பில் கிட்டத்தட்ட முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கப்பட்ட ஒரு சாதுப் பையனை கூடப் படிக்கிறவர்கள் வில்லனைப் போல் பார்க்க ஆரம்பிப்பதைவிடப் பெரிய தண்டனை வேறே இல்லைதான்.

“”இந்த ஸ்கவுண்ட்ரல் நேத்துக்கு சாயந்திரம் சாத்தப்பன் ஊருணிக் கரை மேட்டிலே ஒரு தடியனோடு சைக்கிள் கேரியர்லே உட்கார்ந்து டென்ட் கொட்டகைக்குப் போய்ட்டு இருக்கான். நான் எதிர்த்தாப்பலே வரதை பாக்கறான் ராஸ்கல். இறங்கி மரியாதையோட சல்யூட் அடிச்சு குட் ஈவினிங் சார்னு சொல்லணும்னு தெரியலை. கால்மேல் கால் போட்டுக்கிட்டு துரை மாதிரிப் பார்த்துட்டுப் போறான். ரவுடிப்பயல்”

ஆக, அதுதான் குற்றப்பத்திரிகை. முந்தின நாள் சாயந்திரம் குண்டுராஜாவோடு டென்ட் கொட்டகையில் சினிமா பார்க்கப் போன போது இவர் எதிர்ப்பட்டது உண்மைதான். ஓடுகிற சைக்கிளில் இருந்து குதிக்கப் பயமாக இருந்ததால் உட்கார்ந்தபடியே கடந்து போனதும் உண்மைதான். அத்தனை பெரிய குற்றமா அது?

பைக்கட்டைத் தோளில் மாட்டியபடி வீட்டுக்கு நடந்தபோது உலகமே விலகிப்போய் என்னை வேடிக்கை பார்க்கிறதாகப் பிரமை. காது மடலிலிருந்து கால்வரை உஷ்ணம் பரவித் தகிக்க ஆரம்பித்தது. திருட்டு ராஸ்கல், நாய், புழுத்த நாய், ரவுடி, அர்த்தம் புரியாத ஸ்கவுன்ட்ரல். இதுக்கு அப்புறம் என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது?

புதிதாகப் போட்ட தார் வெய்யிலில் உருகி அங்கங்கே திட்டுத் திட்டாகக் கசிந்திருந்த சந்தைக் கடை வீதி. யார் வீட்டிலோ கல்யாணமோ, பூப்புனித நீராட்டுவிழாவோ கோலாகலமாக நடக்கிறது. “மொய் எழுதியவர்கள் சாப்பிட்டுப் போகவும்’ என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு. தொடர்ந்து பெங்களூர் ரமணியம்மால் இசைத்தட்டில், “என்னப்பனே..என் ஐயனே’ என்று குஷியாகத் தொடங்க, எனக்குத் திரும்ப அழுகை உச்சத்துக்கு வந்தது. “ஸ்கவுன்ட்ரல் என்றால் என்ன?’

அப்போது காய்ச்சலில் விழுந்தவன்தான். பத்துநாள் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. டாக்டர் சர்டிபிக்கேட்டேடும், மனசு முழுக்க நடுக்கத்தோடும் பள்ளிக்கூடம் திரும்பியபோது, அங்கே ஒரு பெரிய ஸ்டிரைக் தொடங்கியிருந்தது. காந்திவீதி சப்பாத்தி ஸ்டால் கைலாசம் மாஸ்டர் மகன் மனோகரனை, பள்ளி நூலகத்துக்கு முன்னால் செம்மண்ணும் சரளைக் கல்லும் பரவிய பாட்மின்டன் பந்து விளையாட்டு மைதானம் முழுக்கத் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார், ராஜமன்னார்சாமி. வகுப்பு நடக்கும் போது அவனைக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாராம். வலது கையில் இல்லாமல் இடது கையில் தம்ளரைப் பிடித்துச் சிந்தியபடி எடுத்து வந்ததாகக் குற்றச்சாட்டு. ஒரு சின்னப் பையனை வயிற்றில் மிதித்து, தலைமுடியைப் பற்றி இழுத்துச் சுவரில் மோதி, இரண்டு கன்னத்திலும் ஒரே நேரத்தில் பொறிபறக்க அறைந்து, புரட்டிப் புரட்டி அடித்து – சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு ராஜமன்னார்சாமி வாத்தியார் என்று இன்றைக்கும் அர்த்தம் எனக்கு.

ஸ்கூல் ஆடிட்டோரியம் பக்கம் நிறுத்தியிருந்த மன்னார்சாமியின் சைக்கிளைச் சின்னாபின்னமாக்கினார்கள் மாணவர்கள். வேலிகாத்தான் செடி முள்ளால் டயர் பங்சர் ஆக்கப்பட்டது. இருப்பதிலேயே பெரிய முள்ளை குண்டுராஜுவுக்குக் காட்டியது நான்தான். ஊரில் ஒரு சுவர் விடாமல், “தேளுக்குக் கொடுக்கில் விஷம்’ என்று தொடங்கி அவரைத் திட்டும் கரிக்கட்டி வாசகங்கள் எழுதப்பட்டன. ஷாஜஹானின் அத்தா அசன் ராவுத்தர், வக்கீல் வெங்கடேசன், பாங்க் மேனேஜர் போன்ற ஊர்ப் பிரமுகர்களின் கோஷ்டி பள்ளிக்கூடத்துக்குப் போய் பயங்கரவாதி வாத்தியார்கள் பிள்ளைகளின் கல்வி, மனநல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதைப் பற்றி ஹெட்மாஸ்டரிடம் விவாதிக்க, அடுத்த மாசம் ராஜமன்னார்சாமி அம்பேல்.

“”வீட்டில் கொள்ளையடிக்க வந்தவனைச் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரிண்டென்ட்” என்று சமீபத்தில் பத்திரிகையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ராஜமன்னார்சாமி ஜாடையில் இருந்த அவர் சுட்டுக் கொன்றது நிஜமாகவே கொள்ளைக்காரனையா என்று தெரியாது.
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday December 9 2007 00:00 IST
காத்திருக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் சினிமா நோட்டீசை ஆழமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஜெயராம் தியேட்டர் விளம்பர வண்டிக்குப் பின்னால் ஓடி கெஞ்சிக் கேட்டு வாங்கியது. சினிமா பார்க்கப் போவதற்கான அனுமதி கிட்டுவது இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவதில்தான் ஆரம்பமாகும். சில சினிமாப் படங்களின் பெயர்களைப் பார்த்ததுமே, வீட்டு சென்சார் கமிட்டி அனுமதியளிக்க மறுத்துவிடும். “காதலிக்க நேரமில்லை’ நோட்டீசைக் கையிலேயே வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா. முருகன் மேல் பாட்டு, பாரதி பாட்டு என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எத்தனையோ கானங்கள் திருச்சி வானொலி மூலம் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக நுழையும்போது, “காதலிக்க நேரமில்லை’ என்று குஷியாகப் பாடியபடி அவர் உள்ளே வரத் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக பீம்சிங் எடுத்த “பா’ வரிசைப் படங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தியேட்டருக்குப் போவதற்கான நாள் குறிப்பதும் தொடங்கும். ” நான் வீட்டுக்கு வெளியே இருப்பேன்’. “நிக்கற நேரம்; திடீர்னு வந்து தொலையும்’ என்று அம்மா, அத்தை, சித்தி வகையறாக்கள் சங்கேத பாஷையில் பேசித் தீர்மானிக்கும் நாள் வரை சினிமாவை கொட்டகைக்காரர்கள் மாற்றாமல் இருக்க வேண்டும். இது தவிர, பள்ளிக்கூடத்தில் பரீட்சையை ஒட்டி வரும் எல்லாப் படங்களும் பாரபட்சமில்லாமல் நிராகரிக்கப்படும். போக முடிவெடுத்த தினத்தில் பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நாலு தூற்றல் போட்டாலும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. தியேட்டருக்குள் குடை பிடித்தபடி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னாலும், பத்து வயசுப் பையன் சொல்வது யார் காதிலும் ஏறாது. இதுதவிர, வாரநாள் பொதுவாக சினிமா பார்க்க விலக்கு என்பதால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகள் சிலாக்கியமானவை.

எல்லாம் சரியாக இருந்து ஒன்பது கிரகமும் எதிர்பார்த்தபடி சஞ்சரித்தால், சாயந்திரம் சரியாக ஐந்து மணிக்கு உப்புமா கிண்டி முடித்து (ராத்திரி வந்து சாப்பிட), சீரக வென்னீர், ரஸ்க், பொரி, கடலை உருண்டை இத்யாதிகளோடு தியேட்டருக்குப் படையெடுப்பு நிகழும். தியேட்டரில் முதல் இருபது வரிசை பின்னால் சாய வசதி இல்லாத மொட்டை பெஞ்ச். அதற்கு முப்பத்தைந்து காசு டிக்கெட். அடுத்து இருபது வரிசை சாய்மானம் உள்ள பெஞ்ச். அறுபத்தைந்து பைசா டிக்கெட். அப்புறம் இரண்டு வரிசை மர நாற்காலி. ஒரு ரூபாய்க்கு அங்கே தொடர்ந்து மூட்டைப்பூச்சி கடிக்கிற வசதி இருப்பதால் தூங்காமல் பரபரப்பாகப் படம் பார்க்கலாம். நடுத்தரக் குடும்பம் என்பதால், அறுபத்தைந்து பைசா பெஞ்ச் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கை.

நான் மன்றாட வேண்டிய அவசியம் இல்லாமல், பாட்டியம்மா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடியாகத் தேர்ந்தெடுக்கும் படங்களும் உண்டு. டி.எம்.எஸ். பாடி நடித்த “அருணகிரிநாதர்’, “பட்டினத்தார்’ மாதிரி. அருணகிரிநாதர் முதல் சீனில் டி.எம்.எஸ். “ஆட வேண்டும் மயிலே’ பாடும்போது பின்னாலேயே அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் ஒல்லியான நபரை அத்தை காட்டி, “”யார்னு தெரியுதா? கலைவாணர் பிள்ளையாக்கும்” என்றாள். பாட்டி அப்புறம் என்.எஸ்.கே. கோலப்பன் வரும் சீனில் எல்லாம் சிரித்து, வாய் சுளுக்குகிற சந்தத்தில் டி.எம்.எஸ். “முத்தைத் தருபத்தித்திரு’ என்று இடைவேளைக்குப் பிறகு திருப்புகழ் பாடும்போது தூங்கிவிட்டாள்.

அம்பலப்புழையிலிருந்து அத்தை வந்தபோது கே.ஆர். விஜயா அறிமுகமான “கற்பகம்’ ஓடிக்கொண்டிருந்தது. “அத்தைமடி மெத்தையடி’ என்று பாடியபடி பேபி ஷகீலாவைக் கொஞ்சிக்கொண்டிருந்த கே.ஆர். விஜயாவைப் பார்த்து “ஆனாலும் ரொம்பப் பூஞ்சையான தேகவாகு இந்தப் பொண்ணுக்கு. புதுசா நடிக்க வந்தா, சாப்பாடெல்லாம் சரியாப் போடறதில்லே போலேயிருக்கு’ என்று பாட்டி விசனப்பட்டாள். அதே படத்தில் “பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்’ என்று பாடியாடியபடி (“”யேது கண்றாவி. இப்படியும் பாட்டா”) சாவித்திரி வந்தபோது, “பூசினாற்போல’ சாவித்திரி இருப்பதற்கு, அவர் சினிமாவில் நீண்டநாளாக இருப்பதே காரணம் என்பது பாட்டியம்மாவின் வாதம். விஜயா பிற்காலத்தில் கனமான கதாபாத்திரமானதைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை. சாவித்திரி மெலிந்து நலிந்துபோன சோகமும் அவள் அறியாதது.

வீட்டுக் காவலோடு இப்படிச் சினிமா பார்க்கிற நிலை மாறியது அதற்கு இரண்டு மூன்று வருடம் கழித்துத்தான். சந்தைக் கடைக்குப் போகிறது போல், பெரிய பையன்களோடு சேர்ந்து போக அனுமதி கிடைத்தது. மொட்டை பெஞ்ச் டிக்கெட்தான் எல்லோருக்கும். எம்.ஜி.ஆர் படம் என்றால் தங்கப்பா மரக்கடை சண்முகத்தோடு போவது வாடிக்கை. “”புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா?” என்று மழையில் நனைந்தபடி எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு வரும்போது கூடவே பரிதாபமாக நடந்து வரும் கூட்டத்தில் ஒவ்வொரு துணை நடிகர் பெயரையும் (ஆட்டுக்குட்டி தவிர) அவனால் சொல்ல முடியும். “எங்க வீட்டுப் பிள்ளை’யில் “நான் ஆணையிட்டால்’ பாடுகிறபோது, எந்த அடியில், எந்தப் படியில் எம்.ஜி.ஆர் எப்படித் திரும்பி நின்று சவுக்கைச் சுழற்றுவார் என்பதைப் பதினாறாம் வாய்ப்பாடு போல ஒப்பிப்பான் அவன்.

சிவாஜியின் “கப்பலோட்டிய தமிழன்’ வந்தபோது பள்ளிக்கூடத்திலேயே காசு வசூலித்து ஒரு சனிக்கிழமை மதியம் கூட்டிப் போனார்கள். படத்தைப் பார்த்துவிட்டு “”நான் பார்த்த திரைப்படம்” என்று வீட்டுப்பாடமாகக் கட்டுரை எழுதி எடுத்துவரச் சொல்லி உத்தரவு போடப்பட்டதால், அந்த அற்புதமான படத்தை பாடப் புத்தகத்தைப் படிக்கிற ஜாக்கிரதையோடு பார்க்க வேண்டிப் போனது. வீட்டுப் பாடமாக எழுதி எடுத்துப் போனது என்னமோ “சம்பூர்ண ராமாயணம்’ பற்றிய கட்டுரைதான். ஏழெட்டு வருடம் முன்னால் இதேபடி உத்தரவு கிடைத்த யாரோ எழுதி, அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்குப் புத்தம் புதிய காப்பியாகக் கைமாறிக் கொண்டிருந்தது அது.

அபூர்வமாக ஒரு இந்திப் படம்- ராஜ்கபூர் நடித்த “அரவுண்ட் த ஓர்ல்ட்’ ஊர்க் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. “”உலகம் பூராக் காட்டறாங்க” என்று குண்டுராஜூ வீடுவீடாக சிபாரிசு செய்து கூட்டம் சேர்த்து படம் பார்க்கப் போனோம். இந்தியன் நியூஸ்ரீலில் புல்லாங்குழல் சோகமாக ஒலிக்க “பீகாரில் பஞ்சம்’, “ஒரிசாவில் வெள்ளம்’. அதுமுடிந்து, மெட்ரோ நியூஸ் ரீலில் சிங்கம் கர்ஜித்து, எலிசபெத் மகாராணி ஆஸ்திரேலியா பயணம். நாலு மாதம் முன்னால் பார்த்தபோதும் அவர் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருந்தார். அப்புறம் ராஜ்கபூர் படம் ஆரம்பமானது. உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதைவிட கப்பலுக்குள் சுற்றிச் சுற்றி வந்து சாதனாவைப் பாட்டுப் பாடிக் காதலிப்பதில்தான் ராஜ்கபூர் ஆர்வமாக இருந்தார். ரொம்ப சிக்கனமாக உடுத்திய இரண்டு பெண்கள் ஹவாய் கடற்கரையில் காற்று வாங்கியபடி படுத்திருக்க, அந்த ரீலை மட்டும் திரும்பப் போடச் சொல்லி ஏகப்பட்ட கைகள் உயர்ந்தன.

படஇடைவேளையில் முதல் தடவையாக “டிரயிலர்’ என்ற ஐந்து நிமிட குட்டிச் சினிமா. இதுவும் இந்திப் படத்துக்காகத்தான். இண்டெர்வெல் நேரத்தில் “காது வளர்த்து, ஒட்ட வைக்க நுட வைத்தியசாலை’ கலர் ஸ்லைட் தான் வழக்கமாகப் போடப்படும். டிரயிலருக்கான கூச்சல் எழவே, காது வளர்த்து பாம்படம் போட வசதி செய்கிற விளம்பரம் போய், யாஹூ என்று டிரயிலரில் அவசரமாக ஷம்மி கபூர் தாவிக் குதித்தார்.

அதென்னமோ, அப்பாவுக்கும் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் பூலோக ரம்பை தான் ஓடிக்கொண்டிருக்கும். ஜெயராம் தியேட்டர்காரர்கள் சொந்தத்தில் தேசல் பிரிண்ட் வாங்கி அவ்வப்போது இரண்டு சினிமாவுக்கு நடுவே இட்டு நிரப்ப உபயோகமானது அது. “நாலு வருஷமா பூலோக ரம்பை ஓடறது நம்ம ஊர்லே தாண்டா. ஹரிதாஸ் கூட மதுரை சிந்தாமணியிலே ஒரு வருஷம்தான் ஓடினது” என்றார் அப்பா.
———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 23 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டை தெரு

நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால், அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து வைத்த பாத்திரம், இலைக்கட்டு, தேங்காய், காபி பில்டர், எண்ணெய்த் தூக்கு. பீங்கான் ஜாடியில் உப்பு என்று நித்தியப்படிக்குக் கொலு வைத்து ஊறுகாய் வாடையோடு இருக்கும் அந்தப் படிகள். நவராத்திரி கொலுவுக்கு அது தோதுப்படாது என்று பாட்டியம்மா தவிர மற்ற எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட, ராச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொலுப்படி அமைப்பதற்கான அவசர நடவடிக்கை தொடங்கும். இது நவராத்திரி தொடங்க சரியாக இருபத்து நாலு மணி நேரத்துக்கு முன்னால் வாடிக்கையாக நடப்பது.

வெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம்பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும் அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை, இது நடந்தேற பதினோரு மணி ஆகிவிடும். அப்படியும் கண்ணில் தூக்கத்தின் தடமே இல்லாமல் அடுத்த வேலைக்கு ஆயத்தமாவது வழக்கம்.

நாலைந்து பேர் அவசர அவசரமாகக் கொலுப் பெட்டிகளில் இருந்து பொம்மைகளை வெளியே எடுத்துப் பரப்பி வைத்தபின் வீட்டுக் கூடத்துக்குக் கல்யாண மண்டபம்போல் ஒரு தனிக் களை வந்துவிடும். ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கொலுப்படியில் அடுக்குவது சுலபமான வேலை இல்லை. ராமர் பட்டாபிஷேக பொம்மை செட் ஓரமாக ஒரு போலீஸ்காரர் பாரா கொடுத்தபடி நிற்க, அனுமார் மிஸ்ஸிங். அவர், தண்டிக்கு உப்புக் காய்ச்ச விரைவாக நடக்கிற மகாத்மா காந்தி பக்கத்தில் பவ்யமாக உட்கார்ந்திருப்பார். கல்யாண செட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாதிரி தவில்காரர் பாம்பு பிடாரன் முன்னால் கொட்டி முழக்கிக் கொண்டிருப்பார். பிடாரனுக்கு முன்னால் படம் விரித்து ஆட வேண்டிய பாம்பு, தொப்பியும் குடையுமாக ஒய்யாரமாக நடக்கிற பளிங்கு வெள்ளைக்காரனின் முழங்காலை ஒட்டி சாதுவாகக் கவிழ்ந்து கிடக்கும். பொம்மை மளிகைக் கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க, பொறி பறக்கத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் நாலு பட்டாளச் சிப்பாய்களுக்கு நடுவிலே கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் தொப்பையைத் தள்ளிக்கொண்டு மளிகைக் கடைக்காரர் ஓய்வாக அமர்ந்திருப்பார். தான் எந்த செட் என்ற தெரியாமல் கிரீடம் வைத்த ராஜா ஒருத்தர் அரக்கப்பரக்க விழித்தபடி தூணோரம் நின்றிருப்பார்.

யார் யார், எது எது எந்தெந்தக் குழுவைச் சேர்ந்தது என்று கடகடவென்று பொறுக்கி எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டால் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடலாம். வீட்டுப் பெரியவர்கள் சரியான குழுக்களாகப் பிரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை அததற்கான கொலுப்படிகளில் அமர்த்திக் கொண்டிருக்க, கொலுப் பெட்டிக்குள்ளே விரித்திருந்த பழைய செய்தித்தாள், பொம்மை சுற்றி வைத்த பத்திரிகைக் காகிதம் ஒன்றுவிடாமல் பத்திரமாக எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். கொலு முடிந்து பொம்மைகளை மறுபடி சுற்றி அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக வைக்க அவை தேவைப்படும். சராசரி ஐந்திலிருந்து பத்து வருடம் முந்தைய சற்றே மக்கிப்போன காகித உலகம் அது. அமிழ அமிழ அலுப்புத் தட்டாத அந்தப் பழைய பத்திரிகை வாசிக்கிற அனுபவத்துக்காகவே நவராத்திரியை எதிர்பார்ப்பது வழக்கமாயிருந்தது நன்றாக நினைவிருக்கிறது. நான் பிறந்த வருடத்து தினப் பத்திரிகை அது. ஐப்பானில் முதல்முதலாக டெலிவிஷன் அறிமுகமாகி, அதில் விளம்பரமும் ஒளிபரப்பான செய்தி. அதற்குப் பத்து வருடம் கழித்து வெளியான இன்னொரு பத்திரிகை. காந்தி பொம்மை சுற்றி வைத்தது. அமெரிக்கக் கறுப்பர் இனத்தின் குரலாக மராட்டின் லூதர் கிங் “எனக்கு ஒரு கனவு உண்டு’ என்று திரும்பத் திரும்ப முழங்கிய கவித்துவமான பிரசங்கம் அச்சடித்தது. போன வருடப் பத்திரிகையில் “சிவாஜி நடிக்கும் ஈஸ்ட்மென் கலர் சித்திரம் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் கர்ணன்’ படப்பிடிப்பு விவரம். கிருஷ்ணன் என்.டி.ராமாராவும் அர்ஜுனன் முத்துராமனும் ரதத்தில் நிற்கிற ஸ்டில். படம் ரசிகர்களால் பெருவாரியாக வரவேற்கப்படும் என்று பி.ஆர். பந்துலு கூறியதாகச் செய்தி. அவர் நம்பிக்கை பாவம் பொய்த்துப் போனது. ரீ-ரிலீஸ் ஆக பின்னால் எப்போது எங்கே வெளியிட்டாலும் ஹவுஸ்புல் ஆக ஓடிய “கர்ணன்’ முதலில் வெளியானபோது தோல்வியைத் தழுவியது மறக்க முடியாததுதான்.

இதுவும் நினைவிருக்கிறது. தினமணி சுடர் சினிமா பகுதியில் நல்ல படத்துக்கு இலக்கணமாகப் புகழ்ந்திருந்த திருமலை -மகாலிங்கத்தின் “ஆலயம்’ பட விமர்சனம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் படிக்கக் கிடைத்து மனப்பாடமானது அது. தசாவதார செட் சுற்றி வைத்திருந்த இந்த விமர்சனத்தை அப்போது வருடம் ஒரு முறை பார்க்கக் கிடைத்தாலும், “ஆலயம்’ படத்தை இதுவரை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

கொஞ்சம் சிறிய பொம்மைகளைச் சுற்றி வைத்த வாரப் பத்திரிகைப் பக்கங்கள் இன்னொரு சுவாரசியம். எப்போதோ, எந்தப் பத்திரிகையிலோ வெளியான ஏதோ சிறுகதை அல்லது தொடர்கதையின் துண்டு துணுக்கான அதெல்லாம் ஒன்றுவிடாமல் நினைவிருக்கிறது. “தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதையில் ஒத்துக்கார தருமன் மூர்மார்க்கெட்டில் கறுப்புக் கண்ணாடி வாங்கிப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பதற்குள் பக்கம் முடிந்திருக்கும். “அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்பி வந்த சரளா, வீட்டுக்குள் முட்டமுட்டக் குடித்துவிட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் இனம் புரியாத’ என்று அரைகுறையாக முடிந்த சிறுகதையில் சரளாவுக்காக வருடாவருடம் அனுதாபப்பட நேர்ந்தது. வேறு ஏதோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாகி, பரபரப்பான தொடர்கதையாகப் படிக்கப்பட்ட “ரோஷன் எங்கே’ கதையில் பல்பீர் தில்லி சாந்தினி செüக்கில் நடந்துபோகும்போது கதாநாயகியைப் பார்த்துத் திகைத்துப் போய் பின் தொடர்வது மனதில் இன்னும் அப்படியே நிற்கிறது.

கலந்து கட்டியாக இப்படிப் படித்து ரசிப்பது பிற்காலத்தில் பின் நவீனத்துவ எழுத்தை ரசிக்கப் பயிற்சி கொடுத்தாலும், “பரீட்சை நேரத்துலே தூங்கு. இப்போ விடியவிடிய படி. உருப்பட்ட மாதிரிதான்.’ என்று பெரிசுகள் படுக்கைக்கு விரட்டுகிற அட்டூழியம் பொறுத்துக் கொள்ள வேண்டிய நவராத்திரி நேரக் கொடுமைகளில் ஒன்றாகும்.

நவராத்திரிக் கொலு பொம்மையை எடுத்துப் படியில் வைப்பதோடு முடிவதில்லை. கீழ்ப்படியை ஒட்டி நிறைய மணலைக் கொட்டி, பூங்கா உருவாக்க வேண்டியதும் என் வேலைதான். பூங்கா அட்டை பெஞ்சுகளில் உட்கார சின்னதாக பிளாஸ்டிக் கடைகடையாக ஏறி வாங்கி வந்தால், நாலு நாளில் உடைந்து போய்விடும். சைக்கிளில் போகிற தபால்காரர், நர்ஸ், குட்டி யானை, வெள்லைக்காரி, தவழும் குழந்தை இவர்களெல்லாம் அப்புறம் பூங்காவுக்கு இடம்பெயர்வார்கள். பூங்கா மணலில் தண்ணீர் தெளித்து தினசரி வெட்டினரி ஆஸ்பத்திரி பக்கமிருந்து புல் பறித்து வந்து நட்டு வைக்க வேண்டும். பூங்கா நடுவே பித்தளைத் தாம்பாளத்தை வைத்துச் சுற்றிச் சிமெண்டால் கட்டிய சுற்றுச் சுவரோடு லாஜிக்கே இல்லாமல் ஒரு குளம் அமைத்துத் தண்ணீர் நிரப்பும் வேலையும் கூடவே நினைவு வருகிறது. நளதமயந்தி செட்டிலிருந்து பிரித்த தமயந்திதான் எப்போதும் அந்தக் குளக்கரையில் நிற்பாள் என்பதும் மறக்கவில்லை. எதுதான் மறந்தது இப்போது புதிதாக நினைவில் வர? ஆமா, “ரோஷன் எங்கே’ துப்பறியும் தொடர்கதையில் பல்பீர் வில்லனா கதாநாயகனா?
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

Sunday December 30 2007

நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.

ரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது. தீபாவளிவரை தினசரி விளையாடக்கூடப் போவதில்லை. சாயந்திரம் தொடங்கி ராத்திரி ஒன்பது வரை வாத்தியாருடைய தீபாவளிப் பட்டாசுக் கடையின் கவுரவ உத்தியோகஸ்தர்கள் நாங்கள்தான். ஒரு பைசா ஊதியம் கூட எதிர்பார்க்காமல், பட்டாசுக் குவியலுக்குப் பக்கத்தில் நின்று, எண்ணிக் கொடுத்து, எடுத்துக் கொடுத்து, பொட்டலம் கட்டித் தருகிற வேலையில் இருக்கும் சந்தோஷத்துக்காக ரங்கவிலாஸ் பட்டாசுக்கடை வாலண்டியர் தேர்வுக்கு எக்கச்சக்கமான போட்டி. வீட்டில் முணுமுணுப்பு எழுந்தால் கண்டுக்கவே கூடாது.

ஒவ்வொரு வருடமும் கடை தொடங்குவதற்கு முன்னால் சில பிரத்தியேகச் சடங்குகள் நிறைவேற்றப்படும். வழக்கமான பிள்ளையார் படம், ஊதுவத்தி, பூ, பழுப்புச் சர்க்கரை நைவேத்தியத்தோடு ஏட்டையா ஆராதனை என்ற ஒரு நிகழ்ச்சியும் உண்டு. நாலு சிவப்பு வாளியில் உடையார் ஊருணிக் கரையிலிருந்து வாரி வந்த மணல், ஊருணித் தண்ணீர் இதெல்லாம் கடை வாசலில், திண்ணைக்கு இரண்டு பக்கத்திலும் போட்ட பெஞ்சுகளில் பிரதிஷ்டை செய்யப்படும். சுற்றி அவசரமாக ஒரு பந்தல் உயரும். வாத்தியார் வீட்டுக் கூடத்துத் தூணில் சுளகு, முறம், கோட் ஸ்டாண்ட் கோஷ்டிக்கு இடையே கூம்பு வடிவ தீயணைப்புச் சாதனம் ஒன்று மாட்டி இருக்கும். பாஷை புரியாத நாட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட அந்நியன் போல பரிதாபமாக நிற்கிற அது திண்ணைக்கு இஷ்ட மித்ர பந்துக்களான பட்டாசு, மணல் வகையறாக்களோடு இடம் பெயர்ந்து மூங்கில் கொட்டகைத் தூணைக் கம்பீரமாக அலங்கரிக்கும்.

இந்த ஏற்பாடெல்லாம் முடிந்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏட்டையா சைக்கிளில் வந்திறங்குவார். எங்களைப் போல அவரும் அரை டிராயர்தான் போட்டிருப்பார். “”என்ன, பட்டாசுக் கடை போடறாப்பிலேயா சார்?” என்று விசாரித்தபடி பெஞ்சில் தண்ணீர் வாளிக்குப் பக்கமாக தொடுக்கினாற்போல் உட்கார்வார். முண்டாசா தொப்பியா என்று குழம்ப வைக்கும் தன் தலைக் கவசத்தைக் கழற்றி மடியில் வைப்பார். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொடிக்கறையோடு கைக்குட்டையை எடுத்து வழுக்கைத் தலை நடுவில் வியர்வையை அழுத்தத் துடைப்பார். பட்டாசுக் கடைதான் போடறோம். மூக்குப் பொடி விக்கறதுக்கா இப்படி வாளியில் மணல், ஊருணித் தண்ணி, தீயணைப்பு சாதனம் எல்லாம்?

மணலை முகர்ந்து பார்த்து, உள்ளங்கையில் எடுத்த தண்ணீர் உத்தேசமாக நாலடி முன்னால் தெளித்து, தீயணைப்பு சாதனம் மேல் கிறுக்கிய சர்டிபிக்கேட்டை சிரத்தையாகப் படித்தபடி அவர் காத்திருக்க, ரங்கன் வாத்தியார் ஒரு பழைய கவரை அவர் கையில் தருவார். அதைக் காக்கிச் சட்டைப் பையில் திணித்தபடி சைக்கிளில் ஏறுகிறதோடு ஏட்டையா ஆராதனை முடியும். இந்தக் கவர் தருகிற சடங்கை நாலுநாள் முன்னால் நவராத்திரி நேரத்தில் கொலுவுக்குக் கூப்பிட்டுப் பாட்டுப் பாடச் சொல்லி தெருப் பெண்களுக்கு சுண்டல், ரவிக்கைத் துணி தருகிற நேரத்திலேயே வாத்தியார் முடித்திருக்கலாம். ஏட்டையாவுக்குப் பாடத் தெரியுமா என்று தெரியவில்லை.

கொலுப்படி மாதிரியே ரங்கன் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் நாலைந்து மரப்படி வைத்து சாம்பிள் வெடிக்கட்டும் மத்தாப்பும் அங்கே நிறுத்தி வைக்கப்படும். மேல் வரிசையில் வெள்ளி நிறத்தில் மின்னும் கம்பி மத்தாப்பு. அடுத்து அங்கங்கே வெள்ளிப் பொறுக்கு தட்டிய ஸ்பெஷல் மத்தாப்பு. முதலாவதைக் கொளுத்தினால் குளுமையாக இருட்டுக்கு அழகைக் கொடுத்தபடி பூச்சிதறும். மற்றது பல வர்ணத்தில் ஆடம்பரமாக சினிமா வில்லி போல் சிரிக்கும். மத்தாப்பு அடைத்த அட்டை டப்பா மேலே ஒட்டிய படத்தில் சினிமா நடிகை சாயலில் ஒரு பெண் மத்தாப்பைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டிருப்பாள். போன வாரம் ஜெயராம் தியேட்டரில் பார்த்த “வல்லவன் ஒருவன்’ படத்தில், “பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று ஜெயசங்கரை மயக்க நடனமாடும் விஜயலலிதா போல் மத்தாப்புப் பெண் வெகு சிக்கனமாக உடுத்தியிருப்பாள்.

வரிவரியாகக் கோடு போட்டு நாலாக மடித்த மண்புழு போல் சாட்டை, அரை இஞ்ச் விட்டத்தில் ஆரம்பித்து தோசைக்கல் சைஸ் வரை வட்டவட்டமாகச் சுருண்ட தரைச் சக்கரம், எங்கே எப்படி வைத்துக் கொளுத்தினாலும் உய்ங்ங்ங்ங் என்று வீராப்பாகக் கிளம்பி மிகச் சரியாக ரேடியோ ரிப்பேர்காரர் வீட்டுத் திண்ணையில் போய் விழும் ஏரோப்ளேன் (ரேடியோக்காரர் அப்புறம் வால்வ் ரிப்பேரான ரேடியோ போல் அரைமணி நேரம் கொரகொரப்பார்), காலி பாட்டிலில் நிறுத்தி தீ வைத்தால் சில சமயம் ஆகாயத்துக்கு எழும்பி மற்றபடி தரையோடு ஊர்ந்து சிவன் கோயிலுக்குள் பிரதோஷ தீபாரதனை பார்க்க நுழையும் ராக்கெட், கொளுத்தினால் குப்பென்ற வாடையோடு கருப்பாக நீளும் பாம்பு மாத்திரை என்று மரப்படிகள் நிரம்பி இருக்கும்.

கீழ் இரண்டு படியிலும் அனைவருக்கும் பிரியமான பட்டாசுகள், ஒற்றைவெடிகளை மாலையாகக் கோர்த்த சரங்கள் கொண்ட பெரிய பாக்கெட்டுகளில் தில்லி செங்கோட்டை படம் தவறாமல் இடம் பெறும். காதைக் கிட்டத்தட்ட செவிடாக்கும் ஆட்டம் பாம் அட்டைப் பெட்டியில் தொங்கு மீசையோடு பட்டாளக்காரர்கள் போர்முனையில் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கடைத் தூணில் பொம்மைத் துப்பாக்கிகள் சணலில் தொங்கும். அவற்றில் வைத்து வெடிக்க கேப் அம்பாரமாகப் பக்கத்தில் அடுக்கியிருக்கும். கைக்கு அடக்கமான குருவி வெடி ஐந்து ஐந்தாகச் சுற்றிய கண்ணாடிப் பேப்பர் மேல் இந்தி நடிகர் ஷம்மிகபூர் அல்லது ஒரு குரங்கு அல்லது இரண்டுமே அச்சடித்திருக்கும். குரங்கு கன கம்பீரமாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை வரவேற்பது, தேர்ந்த விற்பனையாளர்களாக கடைச் சரக்குகளின் மகத்துவத்தை விளக்குவது, பட்டாசு எடுத்துத் தருவது, குண்டுராஜூ போட்ட பில்லை திரும்ப சரிபார்ப்பது (நிச்சயம் நாலு தப்பாவது இருக்கும்), இப்படி ரங்கன் வாத்தியார் செய்ய வேண்டியதில் பாதியை நாங்களே கவனித்துக் கொள்ள, அவர் கடமையே கண்ணாகக் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டு பெரிய தொகை பில்லை மட்டும் இன்னொரு தடவை சரிபார்ப்பார். ரங்கன் வாத்தியார் வீட்டம்மா அவ்வப்போது சீடை, முறுக்கு, நவராத்திரிக்கு வாங்கி மீந்த கடலைப் பொரி, நீர்க்கக் கரைத்த ஒண்டிப்புலி பிராண்ட் நன்னாரி சர்பத் என்று விநியோகித்து வியாபாரத்தை விருத்தி செய்யும் உதவியாளர்களை ஊக்குவிப்பார்.

“பிரபல ஹாலிவுட் அழகி மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை’ செய்தி வெளியான பழைய தினசரியைக் கத்தரித்துச் செய்த காகிதப் பையில் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்போது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். அதே செய்திப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் யாரோ நெல்சன் மண்டேலாவை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியும் பார்த்த நினைவிருக்கிறது. இந்த நாற்பத்தைந்து வருடத்தில் மர்லின் மன்றோ யாரோவாக மாறி, நெல்சன் மண்டேலா சிறைக்கு வெளியிலும் வெளிச்சத்துக்கு வந்து பிரபலமாவார் என்று அப்போது தெரியாது. நடக்கப் போவது தெரிந்தால் வாழ்க்கையில் என்ன உற்சாகம் பாக்கி இருக்கும்?

———————————————————————————————————————————————-

Sunday January 6 2008

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

பள்ளிக்கூடம் விட்ட சாயந்திரங்களில் ரங்கவிலாஸ் பட்டாசுக் கடையோடு தீபாவளிக் காலம் ஆரம்பித்தாலும், அது சூடு பிடிக்கும்போது ஸ்கூல் என்ற சமாசாரம் சுத்தமாக மறக்கப்படும். தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது, வாரப் பத்திரிகைகள் சவலைக் குழந்தைபோல் சோனியாக இருந்த நிலைமை திடீரென்று மாறி, பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட கொழுகொழு சைஸþக்கு வளரும். அதில் சிலது அச்சு மை வாடையோடு செண்ட் வாடையும் கலந்து அசத்தலாகப் பூசி வரும். நல்லையா சைக்கிள் பின்னால் கட்டிய மரப்பெட்டியிலிருந்து அவை வீட்டுக்குள் வந்து விழும்போது பட்டாசு, பட்சண நெடியோடு, கனமான மரிக்கொழுந்து செண்ட் வாடையும் கும்மென்று தெரு முழுக்கச் சூழப் பண்டிகைச் சூழ்நிலை பரிபூரணமாகும்.

சில பத்திரிகைகள் வழுவழு காகிதத்தில் நானூறு பக்கத்துக்கு வெளியிடும் தீபாவளி மலர்களை வாங்குகிற குடும்பத்தில் அடுத்த ஜன்மத்திலாவது பிறக்க வேண்டும் என்று தீபாவளிக்கு முந்தைய நாள் சாயந்திரம் தோன்றும். மலர் கேட்டவர்களுக்குக் கையெழுத்து வாங்கிக்கொண்டு நல்லையா வக்கீல் வீடுகள் பலதிலும் மரியாதையோடு கையில் கொடுத்துவிட்டு வருகிற நேரம் அது. “” பதினைஞ்சு ரூபாய் கொடுத்து தீபாவளி மலர் வாங்க காசு கொட்டிக் கிடக்கலே, இந்த வருஷம் உனக்கு பேண்ட் தைச்சு எக்கச்சக்க செலவு” என்று வீட்டு பட்ஜெட்டில் பாதி எனக்கு உடுப்பு வாங்கிய வகையில் செலவானதாக நாசுக்காக வலியுறுத்தப்படும். லைப்ரரியில் அந்த தீபாவளி மலர்கள் புதுக்கருக்கு எல்லாம் அழிந்து, ஓரம் மடங்கி, அட்டையில் அப்பிய அழுக்கோடு என் கைக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட அடுத்த தீபாவளி வந்துவிடும். எல்லா மலரிலும் பம்ப்செட் மோட்டார் கம்பெனி, லுங்கி விளம்பரம், சவுந்தரா கைலாசம் கவிதை, ஆர்ட் பேப்பரில் ஆச்சாரியார்கள், சுத்தியலை மைசூர்ப்பாகால் உடைக்கிற ஜோக், பிரபல எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள் என்று ஒரு வருட மலரை மற்ற வருடத்துப் புத்தகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஒன்றும் இருக்காது. இன்னும் அப்படித்தான்.

தீபாவளி மருந்து வாடை சுகமாக மூக்கில் ஏற ஆரம்பிக்கும் நொடியும் பத்திரிகை சென்ட் நெடியோடுதான் எப்போதும் சேர்ந்து வரும். திப்பிலி, சதகுப்பை, அதிமதுரம், வசம்பு போன்ற வினோதமான பொருள்களை தீபாவளி மருந்து கிளறும்போது சேர்க்க வாங்கிவர ஆவன்னா றூனா கடைக்கு ஓடவேண்டும். எண்ணெய்த் தூக்கோடு நிற்கிற கோர்ட் சிப்பந்திக்கு இருநூறு மில்லி காரல், கசப்பு இல்லாத நல்லெண்ணெயும், வாத்தியார் வீட்டம்மாவுக்குக் கடலைமாவும் வெல்லமும் வழங்கிக் கொண்டிருப்பார் ஆவன்னா றூனா… அல்லது, அடகுக்கடை பெரி.வயி. வகையறா வளவுக்கு அரைக்கிலோ முந்திரி, கால் கிலோ பாதாம், உலர்ந்த திராட்சை, ஊத்துக்குளி வெண்ணெய் என்று ராஜபோஜனத்துக்கான ஐட்டங்களாகப் பெரிய லிஸ்டை எடுத்து வைக்கக் கல்லாவில் ஆரோகணித்தபடி உரக்க ஆணையிட்டுக் கொண்டிருப்பார். அவர் என்னைக் கவனித்து திப்பிலி தேடக் குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.

அதற்குள் காந்தி வீதியில் காதைப் பிளக்கும் இரைச்சலோடு வர்த்தக ஒலிபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். எல்லா சவுண்ட் சர்வீஸ்காரர்களும் தீபாவளிக்கு முன்னால் கூட்டம் போட்டு ஒவ்வொருவருக்குமான ஒலிபெருக்கி நேரத்தைப் பங்கு பிரித்துக் கொள்வதால் ஒரு நேரத்தில் ஒரு கூச்சல் மட்டுமே கேட்டு இன்புறக் கிட்டும். வழக்கமான “தீபாவளிக்குப் புத்தம்புதிய ஜவுளிகள் குவிந்திருக்கும் தனலட்சுமி ஸ்டோர்’, “தரமான சுவையான இனிப்புகளுக்கு ஷண்முகம் ஸ்வீட் ஸ்டால்’, “நகைகளின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வாங்க ராம.பெரி. அழகு வட்டிக்கடை’, விளம்பரங்களோடு, “பசுமாடுகள் கன்று ஈன வெங்காயத்துரையை உடனே அணுகுங்கள்’ போன்ற ஸ்பெஷல் விளம்பரங்களும் இடம் பெறும். பத்து விளம்பரத்துக்கு ஒருதடவை சவுண்ட் சர்வீஸ்காரர் நகரப் பெருமக்களுக்குத் தன் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தபின், இசைத்தட்டு, “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்’ என்று கண்ணதாசன் எழுதியபடிக்கு டி.எம்.எஸ் சாபம் கொடுப்பார். “”இப்போது நேரம் சரியாக, சரியாக, வேலு, கடியாரத்தை எடுறா, சரியாக ஆறு மணி நுப்பது நிமிடம். வணக்கம் கோரி விடைபெறுவது உங்கள் ராஜா சவுண்ட் சர்வீஸ்”.

காதி, கதர்க்கடைகளில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அதிகம் தட்டுப்படுவார்கள். தீபாவளித் துணி அங்கே வாங்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் என்று சர்க்கார் உத்தரவு இருக்கலாமோ என சந்தேகத்தைக் கிளப்பியபோது, “துணி வாங்கி மாசாமாசம் சம்பளத்திலே கழிச்சுக்க ஜி.ஓ. வந்திருக்கும்’ என்றான் குண்டு ராஜூ. ஜி.ஓ. என்றால் என்ன என்று அவனுக்கும் தெரியாது. யாரோ சொன்னதாம்.

பஞ்சாயத்து போர்ட் ஆபீஸ் சங்கு தீபாவளி காலையில் நாலுமணிக்கு விசேஷமாக ஒலிக்கும். திருச்சி வானொலியில் நேயர்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லி நாகசுரக் கச்சேரி தொடங்கும். எஸ்.எம்.ஆர் வக்கீல் வீட்டுப் பிள்ளைகள் போல் அவர்களும் தீபாவளி கொண்டாடாமல் வேலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. எஸ்.எம்.ஆர். வக்கீல் வீட்டுக் கூடத்தில் சோவியத் புத்தகக் கடை மாதிரி லெனின், மார்க்ஸ் இன்னும் சில தாடிக்காரர்களின் படங்களைப் பார்த்ததுண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொன்னபடியோ எண்ணமோ, நாங்கள் எல்லாம் புதுத் துணியோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, தீபாவளி கொண்டாடாத அந்த வீட்டுப் பிள்ளைகள் இருப்பதிலேயே பழையதாக எடுத்து உடுத்திக் கொண்டு எங்களைத் துச்சமாகப் பார்த்தபடி ஒரு தெரு விடாமல் புரட்சிகரமாகச் சுற்றி வருவார்கள்.

எல்லா வீட்டிலும் படியேறி நடேசன் நாயன கோஷ்டி “உள்ளம் உருகுதையா’ பாதி பாட்டு வாசித்து தீபாவளி வெகுமதி வாங்கிப் போகும். பாட்டியம்மாவிடம் தீபாவளி மருந்தையும் கேட்டு வாங்குவார் தவில்கார கருப்பையா பிள்ளை. “இன்னிக்கு இந்த லேகியம் மட்டும்தான். அடடா என்னமா கமகமன்னு இருக்கு’ என்பார் நாயனக்காரர்.

வீட்டு வாசல் தோறும் குவிந்து கிடக்கும் பட்டாசுக் குப்பைக் காகிதத்தைப் பார்த்தால், போன வருடத்துத் தலைப்புச் செய்திகள் துண்டு துணுக்காகத் தெரியும். ஒரு தீபாவளிக்கு, சோவியத் ராக்கெட்டில் உலகிலேயே முதல் பெண்ணாக வாலண்டினா தெரஷ்கோவா வானில் வலம் வந்த செய்தி லட்சுமி வெடியிலிருந்து அரைகுறையாக வெளிப்பட்டது. பட்டாசுக்குத் தீவைத்துவிட்டு கொஞ்சம் பயத்தோடு பத்தடி முன்னால் ஓடுவதற்குள் வெடித்துச் சிதறினார் அந்த வீராங்கனை. “கீலர்- ப்ரப்யூமோ களியாட்’ என்ற பாதித் துணுக்கில் அடிபட்டது வாசனையான ஜப்பான்காரனான பெர்ப்யூமோ என்றான் குண்டுராஜூ. அவன் சொன்னால் சரிதான்.

தீபாவளிக் காலை நேரங்களை நினைக்கத் தெரிந்த மனமே, உனக்குத் தீபாவளிப் பகலை மறக்கத் தெரியாதா? ஊரே ஓய்ந்து போய், வர்த்தக ஒலிபப்பு, ரங்கன் வாத்தியார் வெடிக்கடை, இரைச்சல், வாடை எல்லாம் காணாமல் போய் சோர்வாக ஊறும் அந்தப் பகல். அது ராத்திரியில் முடியும்போது வானொலியில் வழக்கம்போல் “ஆகாசவாணி, செய்திகள்’ என்று பிரதமர் சாஸ்திரி அலகாபாதில் நிருபர்களிடம் உணவுப்பொருள் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய விவரம் ஜலதோஷம் பிடித்த சர்க்கார் குரலில் வாசிக்கப்படும். தொடர்ந்து தீபாவளி விசேஷ இசைச் சித்திரமாக நிலையக் கவிஞர் எழுதி, நிலைய சீனியர் வித்துவான் இசையமைத்து, நிலைய வாத்திய கோஷ்டியின் பின்னணி இசையோடு மற்ற வித்துவான்கள் கோஷ்டி கானமாக இசைக்க “”தீபாவளி வந்ததே, தீபத் திருநாள் வந்ததே” போன்ற பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி. தீபாவளியோ, பொங்கலோ, இருபத்துநாலு மணி நேரமும் சினிமா நட்சத்திரங்களையே சுற்றிச் சுற்றி வரும் இந்தக்கால டெலிவிஷன் நிகழ்ச்சிகளைவிட அவை சுவாரசியமானவை.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

1965எல்லா வருடத்தையும் போல பொங்கல், கரும்பு, வார்னிஷ் வாடை அடிக்கும் பொங்கல் வாழ்த்து, நாலு நாள் விடுமுறை என்று ஜனவரி நகர்ந்தது. மாசக் கடைசியில் குடியரசு தினம் வரும். ஜனாதிபதி ஆகாசவாணியில் சொற்பொழிவு, பள்ளிக்கூடத்தில் கொடியேற்றம், எல்லா இந்தியரும் என் சகோதர சகோதரிகள் என்று பிரதிக்ஞை (அப்பாவை அண்ணா என்று கூப்பிடும் வீடுகளில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம்), இனிப்பு வழங்குதல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதமும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று பெரியவர்களுக்குத் தெரியுமோ என்னமோ எங்களுக்கு யாரும் சொல்லவே இல்லை.

ஜனவரி இருபத்து நாலாந்தேதி ஞாயிற்றுக்கிழமை தினசரியில் “சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவு இல்லை. சர்ச்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல், “சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது. பெரிசுகள் தான். இந்தி நாடு முழுக்க ஆட்சி மொழி ஆகப் போகிறதாம். தமிழ்நாட்டில் அப்போது பக்தவத்சலம் தான் முதலமைச்சர். சரியாகச் சொன்னால், மதராஸ் மாகாண முதல் மந்திரி அவர். “போ ரைட்’ என்று அவரும் இந்திக்குக் கை காட்டிவிட்டாராம். “”சும்மாக் கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கறதுலே இவங்களை மிஞ்ச ஆளே இல்லை” என்றான் லைபிரரிக்கு வெளியே நடந்து சைக்கிளில் ஏறிய எஸ்.எம்.ஆர் வக்கீல் மகன் சந்துரு. யாருக்கு சங்கு? ஏன்?

செவ்வாய்க்கிழமை குடியரசு தினம். பள்ளிக்கூடத்தில் கொடியேற்றத்தை ரத்து செய்துவிட்டதாக குண்டுராஜூ காலையிலேயே ஒருத்தர் பாக்கி விடாமல் தகவல் அறிவித்து விட்டான். தமிழ்நாடெங்கும் கலவரமாம். நிறையப் பேர் கைது, ஊர் முழுக்க பதற்றமான சூழ்நிலை. தெருமுனையில் ஏதோ கூட்டம். இந்தி

ஆட்சிமொழி ஆனதை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய பத்திரிகைகளையும், இந்தி பாடப் புத்தகங்களையும் குவித்து வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். சீதரன் சொன்னான், “மணியன் வாத்தியாரை போலீஸ்காரங்க அரஸ்ட் பண்ணிட்டாங்கடா’. அவரையும் காகிதம் கொளுத்தியதற்காகத்தான் கைது செய்தார்களாம். அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டாராம். போனால் போகிறது, இன்னொரு காப்பி இல்லாமலா போய்விடும்? “மடையா, இனிமே நாம எல்லோரும் இந்தியிலே தான் பேசி, எழுதி, படிச்சு, இந்திக்காரனுக்குக் கைகட்டி நிக்கணும்னு சட்டம் போட்டிருக்காராம் சாஸ்திரி.’ எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வெüவால் தொங்குகிறதுபோல் வரிசையாகத் தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு மிச்ச வாழ்க்கையைத் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக்கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி.

“ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டு துணைக்கு வராமலேயே தட்சிணா ஆச்சாரியார் சவுண்ட் சர்வீஸ் மூலம் “144 தடையுத்தரவு’ போடப்பட்ட விஷயம் மூலைமுடுக்கு விடாமல் ஒலிபரப்பானது. சர்க்கார் போட்ட தடையுத்தரவு தவிர வீட்டிலும் அதைவிடக் கடுமையான தடைச்சட்டம் அமலாக்கப்பட்டது. சும்மா வெளியே எங்கேயும் போய்ச் சுத்திட்டுக் கிடக்காமல் பாடத்தை எடுத்துப் படிக்கச் சொல்லி உத்தரவு. பத்து நிமிடம் புத்தகத்தைத் திறந்து வைத்து சுமேரியர்கள் டேப்லெட்டில் அரசியல் சட்டத்தை எழுதி வைத்திருந்த அதிசயத்தை இன்னொரு தடவை கர்மமே என்று படித்தேன். டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ. சட்டத்தை எழுதி வைக்க காகிதம் கிடைக்கவில்லையா சுமேரியர்களுக்கு? அங்கேயும் இந்தி மாதிரி எதையாவது திணித்து, மணியன் வாத்தியாரோ அவர் மாதிரி ஊருக்கு ஊர் நிறையப் பேரோ படையாகத் திரண்டு வந்து எரிக்க முடியாமல் இப்படி மாற்று ஏற்பாடு செய்தார்களோ? டேப்லெட் என்றால் களிமண் பலகையும்தான் என்றார் அப்பா. அவருக்கும் இந்தியை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தது பிடிக்கவில்லை. நான் திண்ணைச் சுவரில் பென்சிலால் “இந்தி ஒழிக’ எழுதியபோது அவரைத் தவிர மற்றவர்கள் சத்தம் போட்டார்கள். இந்திக்கு ஆதரவாக இல்லை. புதிதாக சுண்ணாம்பு அடித்த சுவராம். உடனடியாக அழித்து இந்தியை வாழவைத்தார்கள்.

இந்தி அரக்கி படம் வரைந்து வைக்கோல் பொம்மையில் ஒட்டிப் பாடை கட்டி எரிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. கிருஷ்ணன் வாத்தியாரை வரையச் சொல்லலாம் என்று யாரோ ஆலோசனை சொன்னார்கள். கனகவல்லி டீச்சர் ஜாடையில் இந்தி இருப்பதைப் பார்க்க யாருக்கும் தைரியம் இல்லாததால், படம் இல்லாமலே அரக்கி பள்ளிக்கூட வாசலுக்குப் பாடையில் பவனி வந்தாள். எரிக்க முடியாமல் போலீஸ் எல்லோரையும் விரட்டிவிட்டது. பள்ளிக்கூடமும் பத்து நாள் லீவாகப் பூட்டப்பட்டது.

சிதம்பரத்தில் கல்லூரி மாணவர்களைத் துப்பாக்கி வைத்து சுட்டத்தில், ராஜேந்திரன் இறந்த தகவல் வந்தபோது ஊரே துக்கத்தில் முழுகியது. ஒவ்வொரு வீட்டிலும் சாவு ஏற்பட்ட வருத்தம் கனமாகக் கவிய, பேப்பரில் தினசரி செய்தி -துப்பாக்கிச் சூட்டில் சாவு, தடையை மீறி ஊர்வலம் போனவர்கள் கைது, பள்ளிகள் அடைப்பு நீடிப்பு.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கூட்டம் புகுந்து இந்தியில் பெயர் எழுதிய பலகைகளில் தார் பூசியது. “ராமேஸ்வரத்துக்கு வர்ற வடக்கத்திய பிரயாணிகள் கஷ்டப்பட மாட்டாங்களா?” என்று ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வருத்தப்பட்டார். “காசிக்குப் போற நம்ம ஆளுங்க படற கஷ்டத்தை விடவா?” என்றார் இன்னொரு வயசாளி.

பிப்ரவரி பிறந்தும் தமிழ்நாடு முழுக்க காவு வாங்குவதில் இந்தி மும்முரமாக இருந்தது. சி.சுப்ரமணியம் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா என்ற செய்தியை ஆகாசவாணியில் கேட்டு என்ன என்று புரியாமலேயே கைதட்டினோம். பெங்களூரில் காரியக் கமிட்டி கூட்டம் என்று பத்திரிகைச் செய்தி. சாதாரணமாக இந்த மாதிரி தகவல் எல்லாம் திண்டு தலையணையில் சாய்ந்து காந்தி குல்லாய் வைத்தவர்கள் விவாதிக்கிற படத்தோடு வரும். இப்போது வெறும் செய்தி மட்டும்தான். இந்தி திணிப்பை வற்புறுத்த வேண்டாம் என்று நிஜலிங்கப்பா நிஜமாகவே மன்றாட, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி சொன்னது. அவருக்குச் சாய வாகாகக் காரியக் கமிட்டியில் திண்டு கொடுத்திருக்க மாட்டார்கள்.

இரண்டு மாதம் சென்று பள்ளிக்கூடம் மறுபடி திறந்தபோது, சர்க்கார் ஏதோ உத்தரவாதம் கொடுத்ததால் இந்தி அதிகாரமாக உள்ளே நுழையவில்லை. ஆனாலும், இந்தியை மூன்றாம் மொழியாகப் படிக்க வேண்டிப் போனது. பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சிக் கட்டளை கூட “அட்டென்ஷன்’. “ஸ்டாண்ட்-அட்-ஈஸ்’ போய், “சாவ்தான்’, “வீஸ்ராம்’ ஆக மாறியது. “சாவறான்; அழுகிப் போய் வாடை வீசுறான்’ என்று நாங்கள் ஒவ்வொரு தலைவர் பெயரையும் சொல்லிச் சபித்தபடி சாவ்தான் -வீஸ்ராமுக்கு மெல்ல நடைபோட, இரண்டு வருடத்தில் ஒரு ஆட்சியே மாறிப்போனது.

இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், “ஹிந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், “சரிதான் உட்காருடா’ என்று தலையில் தட்ட மனதில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்குக் கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்.
Sunday January 27 2008

———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே.: நெ.40, ரெட்டைத் தெரு

“மாடர்ன் ஃபேன்சி ஸ்டோர்’ வாசலில் தொடங்கியது அந்த க்யூ. அது வளைந்து நெளிந்து குடிதண்ணீர் ஊருணிக்கரை வரை நீண்டிருந்தது. அடகுக்கடை ராம.பெரி.அழகு, பஜ்ஜி ராயர், ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார், மாயழகு, மளிகைக் கடை அசன் ராவுத்தர் என்ற கலவையான இந்த வரிசையின் கோடியில் நானும் நிற்கிறேன். மத்தியானம் கடையை எடுத்து வைத்துவிட்டுப் பக்கத்தில் மடத்துத் தெருவில் வீட்டுக்குப் போயிருக்கிறார் மாடர்ன் ஸ்டோர்காரர். அவர் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டு, சாவகாசமாக வந்து திரும்பவும் கடை திறக்க வேண்டும். காத்திருக்கிறோம்.

ரேஷன் கடை தவிர இதுவரை வேறு எந்தக் கடை வாசலிலும் இப்படிக் கியூவில் காத்திருந்தது இல்லை. அதுவும் மாடர்ன் ஸ்டோரில். அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் நின்றால் அங்கே மும்முரமான விற்பனை என்று அர்த்தம். மந்தித் தோப்பு தைலம், காம்போசிஷன் நோட்புக், மர ஸ்கேல், நஞ்சங்கூடு பல்பொடி, வாய்ப்பாடு புத்தகம் என்று கடைக்கு உள்ளே எங்கோ இருட்டுக் குகைக்கு நடந்துபோய் ஒவ்வொன்றாக எடுத்துவந்து கடை சிப்பந்தி கொடுக்க, அடுத்த கஸ்டமராக “”இன்னிக்கு பேப்பர் போடலை” என்று எம்.ஆர்.ஆர்.வக்கீல் புகார் மனுவோடு நடுவில் நுழைவார். பெரும்பாலான ஆங்கில, தமிழ் தினசரிகள் மற்றும் வாராந்தர “குடும்பப் பத்திரிகை’களுக்கு மாடர்ன் ஸ்டோர்தான் வினியோகஸ்தர். நல்லையா மரப்பெட்டியில் வைத்து எடுத்துவந்து ஊர் முழுக்க வீடுவீடாக வீசிவிட்டுப் போகும் இவை அபூர்வமாக இடம் மாறி விழுந்துவிடுவதால் ஏற்படும் பிரச்சினை இது. லாட்டரி சீட்டு விற்க ஏஜென்சி கிடைத்ததும் இந்த வியாபாரம், விவகாரம் எல்லாம் தாற்காலிகமாகப் பின்னால் தள்ளப்பட்டு, கடைக்கே புதுக்களை வந்துவிட்டது.

“”வாசலை மறைக்காம நில்லுங்க. காசு நோட்டா ஒத்த ரூபா எடுத்து வச்சுக்குங்க. ஒருத்தருக்கு ஒரு சீட்டுத்தான் தரச்சொல்லி கவர்மென்ட் உத்தரவு”. ஷட்டரை ஏற்றிக் கொண்டே கடை சிப்பந்தி அறிவிக்க, முதலாளி கம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி கடைக்குள் நுழைந்தார். முதல் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கியது.

“செலவு ஒரு ரூபாய், வரவோ லட்ச ரூபாய்’. புது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க இந்தப் பரபரப்புதான். “”லட்ச ரூபாய் எப்படி இருக்கும்?” அசன் ராவுத்தர் வரிசையில் பின்னால் நின்ற அடகுக்கடை ராம.பெரி.அழகுவைக் கேட்டார். அவரும் பார்த்ததில்லையாம். “”நியூஸ் பேப்பரைப் பாதியாக் கிழிச்ச சைசிலே ஒத்த நோட்டா அடிச்சிருப்பாங்களோ” என்று பஜ்ஜி ராயர் சந்தேகத்தை வெளியிட்டார். “”சாமிகளே, உங்களுக்கு லாட்டரி விழுந்து அந்த நோட்டுக் கெடச்சா, ஆத்திர அவசரத்துக்கு அதையெடுத்து மொளகா பஜ்ஜி கட்டிடாதீங்க” என்றான் மாயழகு. வரிசைக் கோடிவரை இந்தக் கிண்டல் ஒலிபரப்பாகி, அலையலையாகச் சிரிப்பு எழுந்தபோது, வரிசையை உடைத்துக் கொண்டு கறிகாய்க்கடை ஜோதி நடந்தாள்.

“”பின்னாலே போம்மா” என்று அவளை வரிசைக் கடைசிக்கு அனுப்பப் பார்த்த சிப்பந்தியைத் தடுத்தாட்கொண்டு, “”முதல் சீட்டை ஜோதி வாங்கட்டும். சுபிட்சமாத் தொடங்கலாம்” என்றார் கடை முதலாளி. யாருக்குச் சுபிட்சம் என்று சொல்லவில்லை.

வரிசை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. லாட்டரி சீட்டு கிடைத்தவர்கள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, ஜாக்கிரதையாக பையிலோ பர்ஸிலோ வைத்தபடி முகமெல்லாம் மகிழ்ச்சி தெரியக் கடை வாசல் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பசியும் தாகமும் உச்சத்தில் இருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் காப்பியோ நொறுக்குத் தீனியோ உள்ளே போகாமல், நியூஸ்பேப்பர் கிடைக்காத எம்.ஆர்.ஆர். வக்கீல் போல் இரைந்தது வயிறு. சட்டைப் பையில் பொரிகடலை இருந்தாலாவது அசை போடலாம். அவசரமாகக் கிளம்பியாகிவிட்டது.

சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அங்கே மும்முரமான பாட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. லாட்டரிச்சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்களோடு பாட்டியம்மா விளக்கிக் கொண்டிருந்தாள். தாத்தா உயிரோடு இருந்தபோது யாரோ மாதாமாதம் பெங்களூரிலிருந்து வந்து குதிரைப் பந்தயத்தில் கட்ட அவரிடம் பணம் வாங்கிப் போவார்களாம். அடுத்தமாதம் அவர் வரும் போது காயா பழமா தெரியும். தான் சந்தித்தே இருக்காத எத்தனையோ குதிரைகளை நம்பித் தாத்தா கட்டிய பணத்தை அவற்றில் சிலவாவது ஐம்பது, நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்க தாத்தாவின் பந்தய யோகமே காரணமாம். அவருடைய யோகம் முழுக்க எனக்கு வந்திருப்பதால் நான் போய் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கி லட்சாதிபதியாக பாட்டியம்மா ஆசைப்பட்டாள். அம்மா, அத்தை இரண்டு பேரும் லாட்டரிக்கு எதிர்க்கட்சியில் உறுதியாக நிற்க, எப்போதுமே ஆளுங்கட்சியான பாட்டியின் யோசனை கடைசியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. “”ஒரே ஒரு தடவை வாங்கலாம்” என்றார் மாமா அசிரத்தையாக. ஒற்றை ரூபாயோடு காந்திவீதிக்கு நான் ஓடினேன்.

திருப்பதி தரிசன க்யூ மாதிரி மாடர்ன் ஸ்டோர் படிவாசலை நெருங்கிக் கொண்டிருந்தோம். பஜ்ஜி ராயர் படி ஏறும்போது தடுமாறி விழப் போக அசன்ராவுத்தர் தாங்கிப் பிடித்தார்.

“விழுந்தால் வீட்டுக்கு; விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று எங்கிருந்தோ அறிஞர் அண்ணா குரல். பின்னால் நின்ற மிமிக்ரி கணேசன் வாயைக் கைக்குட்டையால் மறைத்தபடி பேசியது அது. ராயரின் ரெகுலர் கஸ்டமர் அவன்.

நான் கொடுத்த ஒற்றை ரூபாய் நோட்டை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்து நடுவில் ஓட்டை இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, கடைக்காரர் லாட்டரி சீட்டைக் கிழித்துக் கொடுத்தார். நம்பரை மனதில் கூட்டிப் பார்த்தபடி வெளியே வந்தேன். ஒரு தடவை ஒற்றைப் படையாகவும் அடுத்தமுறை ரெட்டைப் படையாகவும் வந்தது. “”ஒத்தப்படைன்னா குறைஞ்சது நூறு ரூபாயாவது ப்ரைஸ் கிடைக்கும். ஏழு வந்தா பத்தாயிரம்” என்று குண்டுராஜூ நம்பகமானத் தகவலாகத் தெரிவித்திருந்ததால் வீட்டுக்கு நடந்தபடி இதைச் செய்தேன். வயிற்றில் பசி இல்லாமல் சாவதானமாக மறுபடி கூட்டி நான் லட்சாதிபதியா, நூறாவதுபதியா என்று பார்க்க வேண்டும்.

லாட்டரி முடிவு வெளியானதற்கு அடுத்த நாள் விடிகாலையில் நல்லையா வரவுக்காகத் தெருவே கையில் லாட்டரிச் சீட்டுக்களோடு காத்திருந்தது. எங்கள் வீட்டுச் சீட்டு இரும்பு அலமாரியில் ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிப் பத்திரமாக வைக்கப்பட்டாலும், அதன் நம்பர் எனக்கு மனப்பாடமாகியிருந்தது. தெருமுனையிலேயே காத்திருந்து நல்லையாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பேப்பரை வாங்கி கங்காராஜ் ஸ்டோர் வாசலில் பரத்தினேன். லட்ச ரூபாய் பரிசு பெற்ற யாரோ பற்றிய விவரம் முதல் பக்கத்தில். நானில்லை. தினசரியைப் புரட்டி இரண்டு பக்கத்துக்கு வந்திருந்த பரிசு விவரத்தைக் கவனமாகப் படித்தேன். நூறு, ஐம்பது கூடப் பரிசு எங்கள் வீட்டுக்கு விழாமல், என் ஒற்றை ரூபாய் நாட்டுக்குப் போய்விட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா வீட்டு வாசலிலும் தீபாவளிப் பட்டாசு வெடித்துப் போட்ட மாதிரி காகிதக் குப்பை. பரிசு கிடைக்காத லாட்டரிச் சீட்டு அதெல்லாம்.

“”எதுக்கும் எல்லாத்தையும் பொறுக்கி எடுத்து வச்சு சாவகாசமாப் பார்க்கலாம்டா. சரியாக் கவனிச்சிருக்க மாட்டாங்க” என்ற குண்டுராஜூவிடம் ஒன்றும் பேசாமல் எங்கள் வீட்டு லாட்டரிச் சீட்டைக் கொடுத்தேன். பழைய தெருவில் ஆறு புஷ்பம் வீட்டில் வாங்கிய சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்த செய்தி அதற்குள் ஊர் முழுக்கப் பரவியது. லட்சுமியைப் பார்க்க வேண்டும் என்று ஏனோ மனதில் சின்ன ஆசை.

“”லாட்டரி சம்மானமும் வேறொண்ணும் வேணாம். உள்ளது மதி” என்றாள் பாட்டி அடுத்த குலுக்குக்குச் சீட்டு விற்றபோது. ஆனாலும் மாடர்ன் ஸ்டோர் முன்னால் மலைப்பாம்பு போல நீள வளைந்து நின்ற க்யூவில் மாமாவும் இருந்தார்.

Sunday February 3 2008
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

ரெட்டைத் தெருவாசியாக இருபது வருடத்துக்கு மேலே இருந்தும், தெருக்காரர்கள் பலரின் கண்ணில் படாமல் போயிருக்கக் கூடிய ஒருத்தர் மாத்திரம் உண்டு. தெருக்கோடி உமர்தீன் ரெடிமேட் ஹவுஸýக்கும், நல்லப்பா பெட்டிக் கடைக்கும் நடுவே கீகடமாகக் குறுக்குவெட்டில் நீளும் இத்தனூண்டு வீட்டுக்காரர் அவர். ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர். அவர் வீட்டை அடையாளம் காட்டக்கூட அவரை யாரும் உபயோகித்ததில்லை. “எருமைக்கார வீடு’. இந்தச் சிறப்பு அடையாளத்தை நியாயப்படுத்தும் விதமாக, தெருவிலேயே எருமை வளர்த்த ஒரே வீடு அவர் வீடுதான்.

வயதான போஸ்ட் மாஸ்டர், அவரை விட வயதான ஒரு அக்கம்மா (அதாவது அக்கா-அம்மா) அப்புறம் சுமார் ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க அவருடைய செல்லி. செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று அர்த்தம் என்று யாரோ சொன்னார்கள். அது சரியாக இருக்கலாம். விடிந்ததும் யாரையாவது “ஏண்டா எருமை’, “ஏண்டி எருமைச்சி’ என்று உச்சக்குரலில் கூப்பிட்டபடி தகரக் குடத்தோடு படியிறங்கிப் போகும் அந்தத் தாட்டியான அம்மாவைச் செல்லமாக யாரும் செல்லி என்று கூப்பிட்டிருக்க முடியாது. சொந்தத் தங்கை என்றாலும் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கூடத்தான்.

செல்லியம்மா, வீட்டில் வளர்ப்பு மிருகங்களான எருமைகளைத் தவிர மற்ற இனங்களை எருமை என்று சிறப்புப்படுத்தும்போது, அக்கம்மாவுக்கு அவர்கள் எல்லாரும் “உலக்கை’களாக மட்டும் தெரிவார்கள். “ஒலக்க்க்கை’ என்று ஏகப்பட்ட அழுத்தத்தோடு புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு தகரக் குடத்தை ஓரமாக வைத்துவிட்டு அவர் தெருவில் இறங்கினால், எதிர்ப்பட்ட ஆள் சட்னிதான். ஆக இந்த எருமைகளுக்கும் உலக்கைகளுக்கும் நடுவே ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் காணாமல் போய், வீட்டுப் படியிறங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் உள்ளேயே அடைகாப்பதால், அவர் ஒல்லியா குண்டா, கறுப்பா சிவப்பா, குட்டையா நெட்டையா என்று தெரியாதவர்கள் தெருவிலும் ஊரிலும் அனேகம்.

ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர். இதை, ரி.போ.மா என்று சுருக்கிக் கொள்ளலாம். இந்த ரி.போ.மா பற்றித் தொடர்வதற்குள் தகரக் குடங்கள் பற்றி ரெண்டு வரியாவது சொல்லியாக வேணும். அக்கம்மாவும், செல்லியம்மாவும் தகரக் குடத்தோடு தெருவில் மற்ற வீடுகளின் கொல்லைக் கதவைத் தட்டுவது கழுநீருக்காக, அரிசி களைந்து, வடித்து ஊற்றிய நீரை எல்லா வீட்டிலும் முன் ஜாக்கிரதையாக, ஒரு பழம்பானையில் சேமித்து வைத்திருப்பார்கள். இப்படிப் பல வீட்டுக் கழுநீரைக் தகரக் குடத்தில் கலந்து எடுத்துப் போய்க் கொடுக்கிற கழுநீர் காக்டெய்ல், ரி.போ.மா வீட்டுப் பசு, எருமைகளுக்கு இஷ்டமான காலை பானம் என்று தெருவில் எல்லோருக்கும் தெரியும். வாங்கிய கழுநீருக்குப் பண்டமாற்றாக கொஞ்சம் ஊர் வம்பும், சாண வரட்டி இரண்டும் ரி.போ.மா சகோதரிகளால் வழங்கப்படுவது வாடிக்கை. குளிக்க வென்னீர் கொதிக்க வைக்கும் “வேம்பா’ என்ற கொஞ்சம் பெரிய சைஸ் டீக்கடை பாய்லர் சமாச்சாரத்துக்கு முக்கிய எரிபொருள் இந்த வரட்டிகள். ரி.போ.மா வீட்டு மாடுகளும் எங்கள் வீட்டுக் கழுநீரும், அந்தத் தகரக் குடங்களும் இல்லாமல் இருந்தால், நான் வருடக்கணக்காகக் குளிக்க முடியாது போயிருக்கும்.

இது இப்படியிருக்க, விடிந்ததும் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்க ஒரு நாள் என்னைத் துரத்திய இடம் நல்லப்பா பெட்டிக்கடை. வீட்டில் யாருக்கோ சள்ளைக் கடுப்பு. அது என்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாத சமாசாரம். விழுந்து படுத்துப் போர்வையைப் போர்த்திக்கொண்டு காலை பத்து மணி வரை சும்மா புரண்டு கொண்டிருக்க வைக்கும் ஏதோ நோக்கோடு. இந்த அலுப்பு மருந்து விழுங்கினால் மதியத்துக்குள் நோய் தீர்ந்து வெங்காய சாம்பாரை ஒருபிடி பிடிக்க வலுக்கொடுக்கும். பள்ளிக்கூடம் போக வெறுப்பாக வரும் சில நாள்களில் நானும் இந்தச் சள்ளைக்கட்டு அஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் தீனமான கோரிக்கைகள் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டு ஸ்கூலுக்குத் துரத்தப்படுவது வாடிக்கை.

அலுப்பு மருந்தோடு திரும்ப நடக்குபோது ரி.போ.மா வீட்டு வாசலில் கொரகொர என்று ஆகாசவாணியில் பஞ்சாபகேசன் அகிலபாரதச் செய்தி அறிக்கை வாசிக்கிறது கேட்டது. தர்மாம்பாள், சரோஜ் நாராயணசாமி என்று யார் டெல்லியிலிருந்து “பிரதமர் சாஸ்திரி நான்கு நாள் நல்லெண்ண விஜயமாக மாலத்தீவு போய்ச் சேர்ந்தார்’ ரக நாடு தழுவிய செய்திகளை வாசித்தாலும் எல்லார் குரலும் ஜலதோஷம் பிடித்துத்தான் கேட்கும். தில்லி ஆகாசவாணி ஸ்பெஷல் விஷயம் இது.

ரி.போ.மா பஞ்சாபகேசனுக்கு ஒத்தாசையாக ரேடியோ பக்கம் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அந்தப் பழைய வால்வ் ரேடியோவைத் தரையில் பள்ளம் தோண்டி துருப்பிடித்த ஒரு கம்பியால் இணைத்திருந்த இடத்தில் ஒரு பீங்கான் குவளை பொருத்தியிருந்தது. ஒரு டம்ளரில் இருந்து குவளைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரவ பதார்த்தமாக எதையோ புகட்டிக் கொண்டிருந்தார் ரி.போ.மா.

“”ஆகாசவாணிக்குக் காப்பி தரீங்களா தாத்தா?” என்று ஆவலோடு விசாரித்தேன். எருமை, உலக்கை என்ற வீட்டு பிரயோகங்கள் இல்லாமல், ரி.போ.மா “தண்ணிடா’ என்றார். “”அப்பப்போ விட்டுக்கிட்டு இருந்தா, எர்த் சரியா பிடிச்சு, கொரகொக்காம ரேடியோ கேக்கலாம்.” அவர் விளக்கம் பாதி புரிந்தாலும் பஞ்சாபகேசனின் ஜலதோஷம் இந்த ஊருணித் தண்ணி வைத்தியத்தில் இன்னும் கடுமையானது.

“”என்னய்யா போஸ்ட் மாஸ்டர் வேலை. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஒருத்தன் கவுண்டர்லே எட்டிப் பார்த்துக் கட்டியாச்சான்னு அச்சானியமாக் கேட்பான். வெளியே போற தபாலை எல்லாம் ரயிலுக்கு எடுத்துப் போகச் சாக்குப் பையிலே கட்டறதை எப்பச் செஞ்சா இவனுக்கு என்ன? இவனுக்குக் கட்டியாச்சு, கட்டலேன்னு பதில் சொல்லி முடிக்கும்போது இன்னொருத்தன் எடுத்தாச்சான்னு விசாரிப்பான். கட்டறதுக்கும் எடுக்கறதுக்கும் நித்தியபடி சாவு விழுற இடமா என்ன?” ரி.போ.மா ஒரு தடவை அப்பாவிடம் தான் ரிடையர் ஆனபிறகு இந்தத் தொந்தரவுகள் இல்லாமல் அக்கம்மா, செல்லி, ஆகாசவாணி, எருமைகள் சகவாசத்தில் நிம்மதியாக இருப்பதை அழுத்திச் சொன்னார். கழுநீர் போக, ரேடியோவுக்குத் தண்ணீர் வார்க்க அவர் வீட்டில் இன்னொரு தகரக் குடம் இருந்திருக்க வேண்டும். அகில பாரதச் செய்தி, தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்காக அதே தர்மாம்பாள், பஞ்சாபகேசன், சரோஜ் நாராயணசாமி கூட்டணி நடத்திய தினசரி சேவை (“மலேயா பாங்கூர் ரப்பர் எஸ்டேட் முனியப்பன், ஆதினமிளகி வகையறாவுக்காக ஆலயமணியில் இருந்து “சட்டி சுட்டதடா கை விட்டதடா’ இதோ ஒலிக்கிறது’), மதியம் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம், சாயந்திரம் “வாங்க கண்ணுச்சாமி, வாங்க சின்னச்சாமி’ இத்யாதி. முழுக்கமுழுக்க ஆகாசவாணி ஆதரவாளராக டம்ளரும் கையுமாக இருந்ததால், ரி.போ.மா தெருவில் இறங்கி நாலு பேரோடு சகஜமாகப் பழகியது அபூர்வமாகிப் போயிருந்தது. பஞ்சாபகேசன் மட்டும் தில்லியிலிருந்து வந்திருந்தால், வீட்டுத் திண்ணையிலிருந்தே நல்லப்பா கடையில் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக் கொடுத்து ரெண்டு நிமிஷம் பேசி அனுப்பியிருப்பாராக்கும் எங்கள் ரிட்டையர்ட் போஸ்ட மாஸ்டர்.

என்றாலும் நான் பத்தாவது பாஸ் ஆனதைச் சொல்ல தேங்காய் சாக்லெட்டோடு போனபோது, அவர் எனக்கு ஒரு சன்மானம் கொடுத்தார். கட்டுக்கட கட்டுக்கட என்று தந்தி அடிக்க மோர்ஸ் கோட் பழக உதவி செய்யும் ஒரு கட்டைப் பலகை. மேலே, வளைந்து அழகான பிடியோடு பளபளவென்று பித்தளையில் ஒரு லீவர். “ஆகாசவாணி, அகில பாரத செய்தியறிக்கை’ என்று தந்தியடிக்க அவர் சொல்லிக் கொடுத்தது இன்னும் நினைவிருக்கிறது. எருமையும் உலக்கையும் எப்படி அடிப்பது என்று அவர் சொல்லவும் இல்லை. நான் கேட்கவும் இல்லை.
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

சீரங்கத்தம்மா வீடு ரெட்டைத் தெருவில் இல்லை. ராஜூத் தெருவில் முதல் வீடு. அடுப்புக்கரி டிப்போவை அடுத்து, ரெட்டைத் தெருவுக்குச் செங்குத்தாக ஒரே வசத்தில் மட்டும் அமைந்த தெரு அது. ரெட்டைத் தெருவிலிருந்தே சீரங்கத்தம்மா வீட்டைப் பார்க்க, பேச முடியும் என்பதால் அவளும் எங்கள் தெருவாசியே.

சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதந்திரப் போராட்ட தியாகி. கோலி சோடாவும் கலரும் உற்பத்தி செய்கிற சோடா கம்பெனி நடத்தியவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வீட்டுக் கூடத்தில் கண்ணாடி பிரேம் செய்த ஓவல் சைஸ் கருப்பு வெள்ளைப் படத்தில் முண்டாசும் நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாகத்தான் உருட்டி விழித்துக் கொண்டிருக்கிறார். ஓய்ந்துபோன சோடா மிஷினை ராம. பெரி வகையறாவில் யாரோ வாங்கி, பக்கத்து பூங்குடி கிராமத்தில் “சோடா கலர் ஃபாக்டரி’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயராம் சினிமா தியேட்டரில் ஐம்பது காசுக்குக் கிடைக்கும் பச்சையும் மஞ்சளுமான கோலி சோடா அங்கேதான் தயாராகிறது. “சோடான்னா, அந்தக் கால கதர் சோடா மாதிரி குடிச்சதும் சுகமா வாய் வழியாக் காற்றுப் பிரிஞ்சு ஏப்பம் வரணும். இதுலே காத்தும் இல்லே. கலரும் இல்லே. சாக்ரின் தண்ணிதான் நுரைச்சுக்கிட்டு நிக்குது’. பூங்குடி சோடா குடித்த பெரிசுகள் ஏமாற்றத்தோடு பழைய கோலி சோடாவின் பொற்காலமாகக் காட்டும் கதர் சோடா காந்தி, கதர், கைராட்டினம் காலத்தில், சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதேசிச் சரக்காக உற்பத்தி செய்தது. அது சென்னை, பெங்களூர், ஒங்கோல் என்று எல்லா ஊர் பொருட்காட்சியிலும் மெடல் வாங்கியதாம். சீரங்கத்தம்மாதான் ஒரு பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து ஊர்க்கதை பேசும்போது சொன்னாள். பொற்காலத்தில் கோலி சோடாவுக்கெல்லாம் மெடல் கொடுத்துக் கவுரவித்தது ஏனென்று கேட்க நினைத்தாலும் தேசபக்தி காரணமாகச் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துப் பட்டி தொட்டி கிராமங்களில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், பிரசவ மருந்து கொடுப்பது சீரங்கத்தம்மா வீட்டில்தான். இந்த இலவச சேவையையும் கதர் சோடா காலத்தில் அமலில் இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். பழைய நினைவோடு யாராவது அவ்வப்போது வந்து, மருந்து கிடைக்காமல் பக்கத்து கங்கராஜூ கடையில் அதை விலைக்கு வாங்கி, சீரங்கத்தம்மா கையால் கொடுக்கச் சொல்லி எடுத்துப் போவார்கள். “வாவரசியா இருந்த மகராசி’ என்று வாயாரச் சொல்வார்கள் அவர்கள்.

சீரங்கத்தம்மா வீட்டில் எப்போதும் ஏதேதோ உறவுமுறை சொல்லிக்கொண்டு கூட்டம் நிரம்பி வழியும். வாரம் ஒருதடவை “தேங்காய்த்துருவி’ கடன் கேட்டு யாராவது அங்கிருந்து வருவார்கள். மனசேயில்லாமல் துருவியைக் கொடுத்தனுப்பிவிட்டுப் பாட்டியம்மா பதினைந்து நிமிடம் கூடத்தில் பித்துப் பிடித்ததுபோல் உலாத்திக் கொண்டிருப்பாள். அது முடிந்ததும் என்னைக் கெஞ்சுகிற பார்வை பார்ப்பாள். ஓடிப்போய் தேங்காய்த் துருவியைத் திரும்ப வாங்கிவா என்று அதற்கு அர்த்தம். சீரங்கத்தம்மா வீடு தினுசு தினுசான நபர்கள் புழங்குகிற இடம் என்பதால் அம்பலப்புழை தச்சன் இழைத்துக் கொடுத்து பாட்டியம்மா சீதனமாக எடுத்துவந்த துருவி காணாமல் போகவோ, ஊருக்குக் கிளம்புகிறவர்களால் கிளப்பிக் கொண்டு போகப்படவோ வாய்ப்பு உண்டு என்று அவள் நினைத்ததில் தப்பு ஏதுமில்லைதான்.

ரேஷன் ஆபீசில் வேலை பார்க்கிற ஒரு பிள்ளையும், மலேரியா கணக்கெடுத்து, எல்லா வீட்டு வாசல் சுவரிலும் பென்சிலால் சதுரம் போட்டு பால்காரி மாதிரி அவ்வப்போது அந்த சதுரத்துக்குள் ஏதோ குறித்துவிட்டுப் போகும் இன்னொரு மகனும் சீரங்கத்தம்மாவுக்கு உண்டு. கல்யாணம் ஆகியும் பிள்ளைகுட்டி இல்லாத இந்த இரண்டு பேரும் அம்மாவோடு அதே வீட்டில் இருந்தாலும், சீரங்கத்தம்மாவுக்கு தினசரி சாப்பாடு என்னமோ ஆனந்தபவன் ஓட்டலிலிருந்துதான் வரும். சர்வர் குருமூர்த்தி, நாலடுக்கு டிபன் செட், மேலே அலங்காரமாகச் சுருட்டி வைத்த வாழையிலை, அப்பளத்தோடு சீரங்கத்தம்மா வீட்டுப்படி ஏறும்போது தினம் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைத்த அந்தம்மாவைப் பற்றிப் பொறாமையாக இருக்கும். ராத்திரிக்கு மிச்சம் எடுத்து வைத்துவிட்டு அதைச் சாப்பிடுவாள் என்று கேட்டபோதுதான் பரிதாபமாக இருந்தது. பகலில் செய்து அனுப்பிய ஓட்டல் சாப்பாட்டை ராத்திரி சாப்பிடுவது போல் ஒரு தண்டனை வேறே உண்டா என்ன?

ரெண்டு பிள்ளைகள், மற்றும் மருமகள்களோடு தொடர்ந்த குடும்பச் சண்டை காரணமாகவும், சமையல் செய்ய முடியாமல் கண் பார்வை மங்கியிருந்ததாலும் சீரங்கத்தம்மா இப்படி ஓட்டல் சாப்பாட்டை நாட வேண்டிப் போனது. ஆனந்த பவன்காரர் குடும்ப நண்பர் என்பதால் மேற்படி போஜனம் அடக்க விலைக்கே அந்தம்மாவுக்குக் கிடைத்ததாம். தியாகி குடும்ப பென்ஷனாக சீரங்கத்தம்மாவுக்கு மாதாமாதம் கிடைத்து வந்ததில் கணிசமான பகுதி இதற்கே செலவாகியிருக்கும்.

ஆனந்தபவன் சாப்பாடு, குடும்பச் சண்டை, மூட்டை முடிச்சோடு வந்து சேர்ந்து தேங்காய்த் துருவி கடன் வாங்க அலைகிற உறவுக்காரர்கள் என்று எல்லாம் அலுத்துப்போய் சீரங்கத்தம்மா தீபாவளி கழிந்த அடுத்த நாள் திடுதிடுப்பென்று காசிக்குக் கிளம்பிவிட்டாள். மதுரையிலிருந்து யாரோ கூட்டிப் போவதாகச் சொல்லி, எல்லா வீட்டிலும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். பாட்டி பத்து ரூபாயும், மஞ்சள் துண்டில் முடிந்து வைத்திருந்த ராஜா தலைக்காசு எட்டணாவும் சீரங்கத்தம்மாவிடம் கொடுத்து, பணம் வழிச்செலவுக்கென்றும், மஞ்சள் துணிக் காணிக்கை காசி விசுவநாதர் கோவிலில் சேர்க்க எந்தக் காலத்திலோ எடுத்து வைத்திருந்தது என்றும் சொல்லியனுப்பினாள். சீரங்கத்தம்மா பற்றி அப்புறம் ஒரு வருடம் போல பேச்சே இல்லை. காசியில் அவள் காலமாகியிருக்கலாம் என்று வீட்டில் ராத்திரி சாப்பாட்டுக்குப் அப்புறம் பேச்சுக் கச்சேரியில் எப்போதாவது பேச்சு எழும். “உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம்’ என்று ஜெயராம் தியேட்டரில் “கலங்கரை விளக்கம்’ படத்துக்கு முன்னால் காட்டிய இந்தியன் நியூஸ் ரீலில், படகில் உட்கார்ந்து போகிற சீரங்கத்தம்மாவைப் பார்த்ததாக குண்டுராஜூ சொன்னதை யாரும் நம்பவில்லை.

அடுத்த தீபாவளிக்கு நாலு நாள் இருக்கும்போது சீரங்கத்தம்மா திரும்பி வந்திருந்தாள். இப்போதும் வீடுவீடாகப் படையெடுப்பு. காசி விபூதி கொடுக்கவும், கங்கைச் செம்பிலிருந்து இங்க் ஃபில்லரால் எடுத்து கங்கா தீர்த்தம் பிரசாதம் வழங்கவுமாக பத்து நாள் மும்முரமாக அலைந்தாள். பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு மருமகள்கள் குடும்பச் சண்டையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்ததால், மறுபடியும் ஆனந்தபவனிலிருந்து டிபன் காரியர் அணிவகுப்பு.

“”காசியிலே போய் நின்னா, அங்கே ஜனம் பேசறது ஒரு அட்சரமும் புரியலே. அவுகளை அதான் தெய்வமா நிக்கறாரே எங்க வீட்டுக்காரர். அவுகளையும் காசிநாத சாமியையும் மனசுலே தியானிச்சுட்டு வாயைத் தொறந்தேன் பாருங்க. என்னையறியாமலேயே கடகடன்னு இந்துஸ்தானி கரைபுரண்டு நாக்குலே வந்துது. அப்புறம் என்ன, நம்ம ராஜ்ஜியம்தான்”. சீரங்கத்தம்மா சொன்னதை பாட்டி மட்டும் நம்பினாள்.

சீக்கிரமே சீரங்கத்தம்மா ஓய்ந்து போனாள். சர்வர் குருமூர்த்தி கொண்டு வரும் சாப்பாடைக் கையில் எடுத்துச் சாப்பிடக்கூட முடியவில்லை. அது வருவதும் நின்று போனது. மருமகள்கள் சண்டைக்கு நடுவில் கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். ஊர்ந்தபடி வீட்டுக்குள் நகர்ந்த சீரங்கத்தம்மா உடுத்தப் பழம்புடவையை விட்டெறிந்தார்கள். வீட்டை விற்றுப் பாகப் பிரிவினையாகிக் காலி செய்து போனபோது இளைய மகன் நசுங்கின அண்டா, பாதாளக் கரண்டி, எலிப்பொறி, ஒட்டடைக்குச்சி இவற்றோடு கைவண்டியில் சீரங்கத்தம்மாவையும் ஏற்றி ஒரு கிழிந்த போர்வையைப் போர்த்தி உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு போனான். “”அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” என்றாள் பாட்டி. அவள் கண்கள் கலங்கியிருந்தன.

———————————————————————————————————————————————

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Eraamu, Eramu, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Iraamu, Iramu, Kathir, Murugan, Murukan | 1 Comment »

London Diary – Ira Murugan: Maiden Lane Visitor

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!

இரா. முருகன்

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!

இரா.முருகன்

எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ (  It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.

ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.

ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.

“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.

பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.

மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.

Posted in Britain, Dickens, England, Era Murugan, Era Murukan, Hotel, Ira Murugan, Ira Murukan, Literature, London, London Diary, Opera, Queen, Rayarkaapiklub, Rayarkapiklub, RKK, Royal, Tourist, Travel, Travelog, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: Jacket Potato

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லண்டன் டைரி: ஜாக்கெட் பொட்டேடோ!

இரா. முருகன்

“”இது யேது கண்றாவியை வில்க்கறதுக்குக் கடய் பரத்தியிருக்கானாம்?” அழுத்தமான பாலக்காட்டு உச்சரிப்பில் தமிழ்க்குரலைக் கேட்டபடி கோவண்ட் கார்டன் ஆப்பிள் மார்க்கெட் பகுதியில் நுழைகிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவை. காலில் கான்வாஷ் ஷூ, ஸ்வெட்டர், தலையில் பனிக்குல்லாய் தரித்த பாலக்காட்டு மாமி மெல்ல நடந்துகொண்டிருக்கிறார். இரண்டு பக்கத்திலும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவது ஜீன்ஸ், பிளேசர் அணிந்த மருமகளும் மகனும்.

முன்னால் “ஜாக்கெட் பொட்டேடோ -ஹாட் ஹாட்’ என்று சாக்குக் கட்டியில் பலகை வைத்த கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நானும் அதில் கலக்கிறேன்.

“”போன வாரம் ஸ்காட்லாந்துலே இப்படித்தான் எய்ட் யார்ட்ஸ்னு போர்ட் போட்ட கடைக்குப் போனது ஓர்மை இருக்கோ. இதென்னவாக்கும் ஆறு கெஜமும் இல்லாதே, ஒன்பது கெஜமும் இல்லாதே நடுவாந்திரமா எட்டு கெஜத்திலே புடவையான்னு பார்த்தால், ஆம்பிளைகள் கட்டிக்கற பாவாடை விக்கற இடமாம்”.

ஸ்காட்லாந்து தேசிய உடையான எட்டு முழநீள கில்ட் விற்கிற கடையில் பாலக்காட்டம்மாள் நிற்கிறதைக் கற்பனை செய்தபடி இரண்டு பவுண்ட் கொடுத்து ஜாக்கெட் பொட்டேடோ வாங்குகிறேன். கையில் சுடச்சுட பிளாஸ்டிக் வட்டிலில், வேகவைத்த உருளைக்கிழங்கும் தயிரும். தோலை உரிக்காமல் வேகவைத்த உருளைக்கிழங்குதான் ஜாக்கெட் பொட்டேடோ என்ற பெயர் ரகசியம் புலனாகிறது…

நடைபாதையில் பரத்திய கடைகளும், கட்டடத்தில் அடுக்கிய கடைகளுமாக கோவண்ட் கார்டன் சனிக்கிழமை பிற்பகல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. ஜூப்ளி மார்க்கெட், ஆப்பிள் மார்க்கெட் என்று பிரிந்த பகுதிகளில் சட்டென்று கண்ணில் படுவது சாப்பாடு விற்கும் கடைகள்தான். மார்க்கெட்டிலும், சுற்றுவட்டாரத் தெருக்களிலுமாகக் கிட்டத்தட்ட ஆயிரம் இடங்களில் வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் திருப்தியாக ஏப்பம் விட்டபடி தகவல் தெரிவிக்கின்றன.

பியாஸô என்ற விஸ்தாரமான மார்க்கெட் முன் சதுக்கத்தில் ஆற அமர நடக்கிறேன். எல்லா ஐரோப்பிய நாட்டுத் தலைநகரங்களிலும், மாநகரங்களிலும் ரொட்டீன் விஷயமான இந்தமாதிரி நடைபாதை லண்டனுக்கு ரொம்பவே தாமதமாக, 1630-ல் தான் வந்தது. இனிகோ ஜோன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் கோவண்ட் கார்டனை வடிவமைத்தபோது அதில் முக்கிய அங்கமானது பியாஸô. சாயந்திரம் ஒயிலாக நடைபயில இந்த விதானம், கடைகள், கோவண்ட் மார்க்கெட் பிரதேசம் முழுவதும் அமைந்த நாடகக் கொட்டகைகள், ஏற்கனவே சொல்லப்பட்ட சாப்பாட்டுக் கடைகள்…இப்படியான சமாச்சாரங்களுக்காகவே இந்தப் பகுதி அப்புறம் பிரசித்தமானது. அந்தப் பிரபலம் முன்னூறு வருடம் கழித்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட் வளாகத்தில் ஒரு கடை வாசலில் “விர்ஜின் ஆலிவ் ஆயில்’ விளம்பரம். அறுபது வருடமாக அங்கே கன்னித்தன்மை மாறாத ஆலிவ் எண்ணெய் விற்கிறார்களாம். மேல்விவரம் அறிய உள்ளே நுழைகிறேன். விர்ஜினிட்டி என்ற சொல் கன்னிமை ஆலிவ் எண்ணெயின் பரிசுத்தத்தைக் குறிக்கும் பரிபாஷையாம். “நயம் ஆலிவ் எண்ணெய் விலை சகாயமாகக் கிடைக்குது. வாங்கிட்டுப் போங்க’ என்கிறாள் கடையில் விற்பனைப் பெண். வாங்கி? “”சமைக்கலாம். மாலிஷ் செய்து குளிக்கலாம்.” சரிதான், சீயக்காய்த் தூள் இருக்கா என்று விசாரிக்கிறேன். இல்லையாம்.

“”மந்திரமில்லே, மாயமில்லே..” ஆங்கிலத்தில் உரக்கக் குரல் விட்டுக் கொண்டு கோட்டு சூட்டு அணிந்த ஒரு வித்தைக்காரர் கோவண்ட் கார்டன் நடைபாதையில் கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் சின்னதாக ஒரு பழைய பெட்டி. “” சிகரெட் குடிக்கிறவங்க ஆளுக்கு ஒரு சிகரெட்டை விட்டெறியுங்க.” வித்தைக்காரர் கேட்டுக்கொண்டபடி ஏழெட்டு சிகரெட் முன்னால் விழுகிறது. எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அதில் ஒன்றைப் புகைத்து உள்ளங்கையில் வைத்து அழுத்துகிறார். கையை விரிக்கும்போது சிகரெட் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைப் பார்த்துக் கூட்டம் கை தட்டுகிறது. பெட்டியில் பத்து பென்ஸ், ஐந்து பென்ஸ் என்று சில்லறை விழுகிற சத்தம். “” பாதி வித்தைக்கு நடுவிலே போகாதே…” நழுவுகிற பார்வையாளர்களைப் பார்த்துச் சத்தம் போடுகிறார் வித்தைக்காரர். “”போனா, ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க, ஆமா!” நான் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்த தாயத்து விற்பனை தொடங்குவாரோ என்று யோசித்தபடி நடையை எட்டிப் போடுகிறேன்.

டீத்தூள் மட்டும் விற்க என்று ஒரு கடை. சீனாவிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசம் அடிக்கும் டீ, தாய்லாந்து கிராம்பு டீ, கொழும்பு டீ என்று அடுக்கிய கடையில் இரண்டு பெரிய அலமாரி முழுக்க அசாம், டார்ஜிலிங், நீலகிரி என்று சகலவிதமான இந்திய டீத்தூளும் கொஞ்சம் அதிக விலைக்குக் கிடைக்கிறதாகத் தெரிகிறது. பக்கத்துக் கடையில் சக்கரம் வைத்த வண்டியில் வித்தியாசமாக ஏதோ கண்ணில்பட ஒரு வினாடி நிற்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் வயதான பெண்மணிகள். நாயைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு வாக்கிங் ஸ்டிக்கோடு நடக்கிற வயோதிகர்கள், நீளத் தொப்பி தரித்த கனவான்கள், தரையில் புரளும் பாவாடை தரித்த அழகிய கன்னியர். எல்லோரும் நூறு வருடத்துக்கு முற்பட்டவர்கள். முக்கால் அடி உயரத்துக்கு மேல் யாரும் இல்லை. தத்ரூபமான இந்த மரச் சிற்பங்களை வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரரை விலை விசாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது பவுண்டாம். மூவாயிரம் ரூபாய்க்குப் பொம்மை வாங்கி விளையாடுகிற வயசா என்ன? மேலே நடக்கிறேன்.

கோவண்ட் கார்டனுக்கு மேலதிக அழகு சேர்க்கும் லண்டன் போக்குவரத்து மியூசியம் அடைத்துப் பூட்டியிருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் தெருக்களை அவற்றின் கூட்டம், குதிரை பூட்டிய கோச், டிராம் வண்டிகளோடு தத்ரூபமாகச் சித்திரிக்கும் மியூசியத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் மியூசியம் கடை திறந்திருக்கிறது. பழைய சிவப்பு லண்டன் மாநகர பஸ் படம் போட்ட டீ ஷர்ட் விலை விசாரிக்கும்போது -அதுவும் மூவாயிரம் ரூபாய் சொச்சம்தான். கடைக்குள் ஒரு சென்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக்கொண்டு சகலமானதும் வாங்குகிறவர்கள் எந்த நாட்டு டூரிஸ்டுகள்?

போக்குவரத்து மியூசிய வாசலில் சீன இசைக் கலைஞர் ஒருத்தர் முன்னால் பெட்டியைத் திறந்துவைத்துவிட்டு, புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருக்கிறார். காதல் தோல்வியில் முடிந்த சோகத்தையோ, அல்லது கல்யாணத்தில் தொடர்ந்த மகா சோகத்தையோ உருக்கமாக இசைக்கும் அவருக்கு விழுந்த காசுகள் மொத்தமே ஐம்பது பென்ஸ்தான் என்பது இன்னொரு சோகம்.

ஆனாலும் கோவண்ட் தோட்டத்துக்கு வெளியே, பாதாள ரயில் நிலையத்துக்குப் போகிற வழியில் நிற்கிற சிலைக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். அலுமினியம் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்காகச் சிலையாக நிற்கும் கலைஞருக்கு முன் காசுகள் விழுந்தபடி இருக்கின்றன.

“”உங்க அப்பா திண்ணையிலே பரப்பிரம்மா, அனங்காதே உக்கார்ந்து பேப்பர் வாசிக்கிற மாதிரி இருக்கு, கேட்டியோ..”-பின்னால் குரல். பாலக்காடுதான்.

Posted in Britain, Engaland, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, London Diary, Marketplace, markets, Potato, Sellers, Shops, Tour, Travleog, Travleogue, UK | 1 Comment »

London Diary – Era Murugan: Kothavalsavadi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

லண்டன் டயரி: லண்டன் கொத்தவால்சாவடி!

இரா.முருகன்

ஒரு மாநகரம். தலைநகரும் கூட. அங்கே போக்குவரத்தும் , ஜன நெருக்கடியும் இரைச்சலும் பரபரப்புமாகச் சதா இருக்கப்பட்ட வீதிகளை ஒட்டி ஒரு பெரிய சந்தை. நகர் முழுவதற்கும் காய்கறியும், பழமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்க ஏற்படுத்தப்பட்ட அந்த மார்க்கெட் கிட்டத்தட்ட முன்னூறு வருடம் அதே இடத்தில்தான் இருந்தது. இனியும் நெரிசல் தாங்காது என்ற நிலைமை ஏற்பட, அதை ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே இடம் மாற்றினார்கள்.

லண்டன் டயரியில் சென்னை கொத்தவால் சாவடி நுழைந்த காரணம் புரியாமல் விழிக்க முற்படுவதற்கு முன்பாக ஒரு வார்த்தை. இது கொத்தவால் சாவடி பற்றிய தகவல் இல்லை. கோவண்ட் தோட்டம் என்ற லண்டன் கோவண்ட் கார்டன் சந்தை பற்றியது. ஆதியில் அதாவது எழுநூறு வருடம் முன்னால் கோவண்ட் தோட்டம் கான்வென்ட் தோட்டமாகத்தான் இருந்தது. தேவ ஊழியத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கிறிஸ்துவப் பாதிரியார்கள் தங்கியிருந்த இடம் “கான்வென்ட்’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் துறவிகள் பிரார்த்தனைக்கு மிஞ்சிய நேரத்தில் குழந்தைகளைக் கூட்டிவைத்துக் கொண்டு அங்கேயே கல்வி கற்பிக்கத் தொடங்கியபோது, மேற்படி பள்ளிகளின் பெயரில் கான்வென்ட் ஒட்டிக் கொண்டது. லண்டன் கான்வெண்ட் தோட்டத்துக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம், அந்தக் காலப் பாதிரியார்கள் மடாலயத்துக்குத் தேவைகளுக்காக நகருக்கு நடுவே காய்கறித் தோட்டம் போட்டு கத்தரிக்காயும், முள்ளங்கியும், தக்காளி, வெண்டையும் பயிர் செய்ததுதான்.

தேம்ஸ் பாசனம், அற்புதமான மண். போட்டது எல்லாம் பொங்கிப் பூரித்து அமோகமாக விளைய, மடாலயத் தேவைக்கு மிஞ்சிய காய்கறி, பழத்தை எல்லாம் நகர மக்களுக்கு விற்க ஆரம்பித்தார்கள். “தினசரி மூணு வேளையும் வெண்டைக்காய்க் குழம்புதானா? ரெண்டு பக்கமும் வெண்ணெய் தடவி மொறுமொறுவென்று தணலில் வாட்டிய ரொட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்று புதிய , பழைய மடாலயவாசிகள் உரக்க முணுமுணுக்க ஆரம்பித்திருக்கலாம். ரொட்டியும் வெண்ணையும் வாங்க, மடாலயத்தில் நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் காய்கறிக்கடை நடத்த ஆரம்பித்து, அந்தக் காலத்திலேயே இருபது பவுண்ட் மாத வருமானம், அதாவது இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்.

லாபம் எல்லாம் சரிதான். ஆனால் காய்கறி பயிரிட, களையெடுக்க, பறித்து எடுத்துப் போய்க் கடையில் குவித்து வைக்க, விற்றுக் காசை எண்ணிக் கல்லாவில் போட்டுக் கணக்குப் பார்க்க இப்படியே பொழுது கழிந்ததால் பிரார்த்தனைக்கு நேரம் சரியாகக் கிடைக்காமல் போனது. இது சரிப்படாது என்று முடிவு செய்து, கோவண்ட் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு , மடாலயத்துக்குச் சப்ளை செய்து, மிஞ்சியதைப் பொதுமக்களுக்கு விற்று வருமானத்தை ஒப்படைக்கும் காரியம் குத்தகைக்கு விடப்பட்டது. காண்ட்ராக்ட் எடுக்க ஏகப்பட்ட போட்டி. எடுத்தவர்கள் தொப்பையும் தோல்பையும் பெருத்து வளைய வருவதை அன்றைய இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி அரண்மனைக்குள் இருந்து பெருமூச்சோடு பார்த்தான். இந்தப் புண்ணியவான்தான் கட்டிய பெண்டாட்டி ஆன்போலின் அரசியை லண்டன் டவர் வளாகத்தில் வைத்து நோகாமல் தலையை வெட்டிவிட்டுச் சற்றும் தாமதியாமல் அடுத்த கல்யாணம் செய்து கொண்டான் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நினைவு.

ஆன்போலின் அரசியின் தலையை வெட்டியதுபோல் ஏகப்பட்ட மடாலயத் துறவிகளை வரிசையாக நிற்க வைத்துத் தீர்த்துக் கட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம். மக்கள் எதிர்ப்பும் கூடுதலாக இருக்கும். எனவே எட்டாம் ஹென்றி ரொம்ப யோசித்து, ஓர் அவசரச் சட்டம் போட்டான். கோவண்ட் தோட்டம் அடுத்த நாள் காலையில் அரசுடமை ஆனது. அங்கே பயிர் செய்த காய்கறி, பழங்களைச் சில்லறை, மொத்த விற்பனை செய்வதும் கஜானாவுக்குக் காசு சேர்க்கும் விஷயமானது. நாளடைவில் அவ்

விடத்தில், காய்கறிச் சாகுபடியைவிட, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வண்டிகளிலும் , கால்நடையாகவும் கொண்டு வந்த சரக்கை நிறைத்து வைத்து விற்பனை செய்வது பிரதானமான பணியாக மாறியது.

ஆமை புகுந்த வீடு பற்றிய அனுபவம் இல்லாத இங்கிலாந்து மக்கள், அரசாங்கம் புகுந்த தோட்டம் என்ன ஆகும் என்று நோக்க அடுத்த சிலபல வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தது. பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட கோவண்ட் தோட்டம் அரசாங்கத்து வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. சும்மா இல்லை. பிரதியுபகாரமாக அவர்கள் சிம்மாசனத்துக்கு அடியிலும், மேலேயும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசனுக்கு ஆள், அம்பு , பட்டாளம் , தங்கக்காசு, வெள்ளியில் அண்டா குண்டா என்று சேவை சாதித்து, அனுபோக பாத்தியதையாகக் கிடைத்த சொத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ஆள் நம்ம கட்சியில் இல்லை, அல்லது எதிர்ப்பு அறிக்கை விடுக்கத் தயாராகிறான் என்று அரசருக்குப் பட்டால் உடனே அந்தப் பிரமுகரின் கழுத்து அளவு எடுக்கப்பட்டு , கத்தி தயாரிக்கப்படும். அன்னாரை லண்டன் டவர் சிறையில் தற்காலிகமாக ஓய்வெடுக்க வைத்துவிட்டு , அவருக்கு வழங்கப்பட்ட தோட்டம் துரவு பிடுங்கப்பட்டு, அரசரின் புது ஜால்ராவுக்கு அன்பளிக்கப்படும். அந்தக் கால அரசியல் நிலைமை அப்படி.

ஆனாலும் ஆயிரத்து எழுநூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசியல் அமைதி ஏற்பட, இந்தக் களேபரம் ஓய்ந்து, கோவண்ட் தோட்டத்தில் நகர் முழுவதற்கும் காய்கறி, பழம் சப்ளை செய்யும் பேரங்காடி எழுந்தது. பெட்போர்ட் வம்ச நாலாம் பிரபுவான பிரான்சிஷ் ரஷ்ஷல் ஏற்படுத்திய இந்த அங்காடி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தினசரி மும்முரமாக வியாபாரம் நடக்கும் இடமாக மாறியது. வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் விடுமுறை. மற்றபடி முன்னூற்று அறுபத்து நாலு நாளும் விற்பனை என்று தொடர்ந்து முன்னூறு வருடம் சாதனை படைத்த மார்க்கெட் இது. 1877 – ல் காய்கறி லோடு ஏற்றி வந்த வண்டிகளில் இருந்து சரக்கு இறக்கிக் கடைகளுக்கு எடுத்துப் போக மட்டும் இங்கே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பாரம் சுமக்கும் தொழிலாளிகள் இருந்தார்கள். பழைய கொத்தவால் சாவடியைவிட இது பத்து மடங்கு அதிகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

கோவண்ட் தோட்டக் காய்கறி, பழ அங்காடியை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஒரு முப்பது வருடத்துக்கு முன் பூதாகரமாக உருவெடுத்தது. மார்க்கெட் நெரிசல் மட்டும் இல்லை இதற்குக் காரணம். இந்தப் பகுதியில் ஏகப்பட்ட நாடகக் கொட்டகைகள், பிரசித்தமான உணவு விடுதிகள், தினசரி லட்சக்கணக்கில் வருமானம் நிறைய, சகலவிதமான பொருட்களையும் விற்கும் கடைகள், போக்குவரத்துச் சிக்கல், அசுத்தமடையும் சூழல் என்று ஏகப்பட்ட மற்ற விஷயங்களும்தான்.

1974 – ல் கோவண்ட் தோட்ட அங்காடியை அங்கேயிருந்து மூன்று மைல் தொலைவில் இடம் மாற்றிய போது முன்னூறு வருடப் பரபரப்பு ஓய்ந்த மயான அமைதியில் கிடந்த அந்தப் பெரிய நிலப்பரப்பையும், காலியான கட்டடங்களையும் பார்க்க லண்டன் மக்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. நகருக்கு மத்தியில் நடுநாயகமாக இத்தனை அழகும் பாரம்பரியப் பெருமையும் கம்பீரமும் நிறைந்த இடத்தைச் சும்மா கிடக்க விடலாமா என்று எல்லாரும் ஒருமித்து அரசாங்கத்தை நோக்கிக் கோரிக்கை எழுப்பினார்கள். ஆக, எட்டே வருடத்தில் அந்த இடம் திரும்பவும் சுறுசுறுப்பும் பரபரப்பும் ஆனது. புதுப்பிக்கப்பட்ட அந்தக் கோவண்ட் தோட்டத்தில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.

Posted in England, Era Murugan, Era Murukan, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kothavalsavadi, London Diary, Tour, Traveler, Travelogues, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: London Fire & Memorial

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!

இரா. முருகன்

நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.

“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.

மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.

பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.

தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…

மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.

பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.

நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.

சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Fire, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Memorial, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, Tourist, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: Fire, Curfew, Floods

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

லண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’!

இரா. முருகன்

“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.

லண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.

லண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.

தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.

பெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.

கிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்டி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.

இப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

பொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.

“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா? அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது? அதெல்லாம் வேலைக்காகாது”

மேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.

நெருப்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.

அந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.

Posted in 1666, Cover Fire, Curfew, England, Era Murugan, Era Murukan, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Plague, Thames, Tour, Tourist, UK | Leave a Comment »

Ira Murugan – London Diary: Thames Dames, England Coovum

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

லண்டன் டைரி: நடந்தாய் வாழி தேம்ஸ்!

இரா. முருகன்

சாயந்தரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரெஞ்சு நண்பர்கள் இருவர்.

விடுமுறை நாள் இது. காலையிலிருந்து திரைப்பட விழா கொண்டாடி, ராபர்ட்டோ ரோஸலினி, லூயி புனுவல் பெட்ரோ ஆல்மடோவார் என்று திரையுலகச் சிற்பிகளின் படங்களை வரிசையாகப் பார்த்து முடித்து, விவாதித்தபடியே மதுக்கடையில் நுழைந்திருக்கிறோம்.

“”மதுக்கடை வினாடிவினா நடக்கப் போகிறது. நீங்களும் பங்கேற்கிறீர்களா?” என்று விசாரிக்கிறார் கடை உபசரிப்புப் பெண். “”இல்லை; ஆளுக்கொரு கோப்பை ஒயின் போதும்” என்று சிரித்தபடி தலையசைக்கிறார் நண்பர் பாஸ்க்யூல். இத்தாலிய உச்சரிப்பில் அவருடைய ஆங்கிலம் மென்மையான சங்கீதம் போல் ஒலிக்கிறது.

“”லூயி புனுவல் சினிமாவின் விஷுவல் சர்ரியலிசத்தில் சால்வடார் டாலி ஓவிய பாதிப்பு”. பிரெஞ்சு நண்பர் அந்த்வான் விவாதத்தைத் தொடர, நான் கைகாட்டி நிறுத்துகிறேன். “”இன்றைக்கு முழுக்க இலக்கியத்தரமான சினிமாவைச் சுவாசித்து. பகல் சாப்பாட்டோடு மென்று, குடிதண்ணீரோடு கலக்கிக் குடித்தாகிவிட்டது. வேறே ஏதாவது பேசலாமே. உதாரணமாக இந்த மதுக்கடை பற்றி, அந்த தேம்ஸ் நதி பற்றி”.

“”அது தேம்ஸ் இல்லை, டெம்ஸ்”, இத்தாலிய நண்பர் சிரித்தபடி குவளையை உயர்த்துகிறார். சினிமா வரலாற்றோடு, லண்டன் சரித்திரமும் முழுக்கத் தெரிந்தவர்.

“”ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜ்க்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்”. ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லை என்பதால் இன்றைக்கும் அதிகாரப்பூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்.

இளங்கோவடிகள் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், “நடந்தாய் வாழி தேம்ஸ்’ என்று அந்த நதியைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருக்க முடியாது. காரணம், இந்த நாட்டுப் பாரம்பரியப் பிரகாரம் தேம்ஸ் நதி ஆண். நதியம்மா இல்லை. நதியப்பா.

அப்பாவோ, அம்மாவோ, ஆயிரம் வருடத்துக்கு மேலாக தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் குடியிருக்கிறார்கள். அதில் படகு ஓட்டிப் போகிறார்கள். நூற்றைம்பது வருடம் முன்புவரை தேம்ஸில் குளித்திருக்கிறார்கள். மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் பல தொழில் நடத்தி, நதியை அங்கங்கே தேங்கி நிற்கச் செய்திருக்கிறார்கள்.

1666-ம் வருடம் லண்டனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு மூன்று நாள் தொடர்ந்து ஊரே பற்றி எரிந்தது. அப்போது கூட இருக்க இடம் கிடைக்காமல், லண்டன் பாலத்தில் இரு பக்கத்திலும் வரிசையாகக் கூரை எழுப்பிக் கீழ்த்தட்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். பாலத்தில் வீடு கட்டி தண்ணீருக்கு மேல் இருந்ததாலோ என்னமோ ஊரை எல்லாம் அழித்த அந்த நெருப்பு, பாலத்தில் ஏறாமல் நின்றுவிட்டது. ஆனால் நதிக்கரையிலும், நதிக்கும் குறுக்கே ஆற்றுப் பாலத்தில் சகலரும் இஷ்டத்துக்கு அசுத்தம் செய்ய, அந்தக் கால தேம்ஸ் இந்தக் காலக் கூவம் போல் மணக்க ஆரம்பித்தது. காற்று அதிகமான நேரங்களில் லண்டன் முழுக்க இந்தச் சுகந்த பரிமள வாசம் நிறைந்து பரவ, மக்கள் மூக்கைக் கையால் பொத்திக்கொண்டு நடைபயில வேண்டிப் போனது. அந்தப்படிக்கே சாப்பிடவோ அல்லது அதைவிட முக்கியமாக மதுக்கடையில் பியர் குடிக்கவோ கஷ்டமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. 1858-ம் வருடம் ஒரு பகல் பொழுதில் தேம்ஸ் நதியில் எழுந்த உச்சபட்ச வாடை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகுந்து அடர்த்தியாகக் கவிய, எதிர்க்கட்சி மட்டுமில்லை, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து உடனடியாக வெளிநடப்பு அல்லது வெளியோட்டம் செய்ய வேண்டி வந்தது. உலக சரித்திரத்திலேயே கழிவுநீர் வாடை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிவந்தது முதல் தடவையாக அப்போதுதான்.

இத்தாலிய நண்பர் டெம்ஸ் நதியின் பழங்கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எந்த வாடையும் இல்லாது, பளிங்கு போல் தண்ணீரோடு சுத்தபத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்கால தேம்ûஸ நினைத்துப் பார்க்கிறேன். இருபது கோடி லிட்டர் சுத்த நீர். காஸ்டோல்ட் பகுதியில் பிறந்து வடகடலில் கலக்கிறவரை மாசுமறுவற்று ஓடுகிற ஆற்றில் ஒரு தேங்கலோ அடைப்போ அசுத்தமோ கிடையாது என்று நண்பர் சொல்லும்போது “எங்க தலைநகரத்துலேயும் இப்படி ஓர் ஆறு இருக்கு’ என்கிறேன். இத்தாலிய நண்பர் இப்போதைக்கு சென்னை வரப்போவதில்லை என்பதில் ஓர் ஆறுதல்.

மதுக்கடையில் “பப் க்விஸ்’ என்ற வினாடிவினா ஆரம்பமாகிறது. மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?

“”தேம்ஸ் நதியில் ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பெரிய வலை விரித்துப் பெரிய மீனைப் பிடிப்பது போதாமல், ஆகக் குறுகிய வலை நெய்து சின்னச் சின்ன, வயதுக்கு வராத மீனை எல்லாம் வாரி எடுப்பது தொடர்ந்தது. சட்டம் போட்டு வலை சைஸ் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இப்போது தேம்ஸில் மீனே கிடைப்பதில்லை. ஆனால் அன்னப்பறவை அவ்வப்போது தட்டுப்படும். அதை வேட்டையாடத் தடை உத்தரவு அமலில் உள்ளது. அன்னப்பறவை மாமிசம் சாப்பிட இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. எலிசபெத் ராணியின் அம்மா மகாராணி இரண்டு வருஷம் முன்னால் அன்னம் ரோஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் கடைசி மூச்சை விட்டார்” நண்பர் தேம்ஸ் கதையைத் தொடர்கிறார். அந்த அன்னத்துக்குப் பதிலாக சுடச்சுட சீரகச் சம்பா அன்னம், சாம்பார், கீரை மசியல் சாப்பிட்டிருந்தால் ராணிப்பாட்டி இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

“”சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?” மதுக்கடை வினாடிவினா நடத்துனர் நிறுத்தி நிதானமாகக் கேட்கிறார். சாயந்திரம் பத்திரிகை படிக்காமல் போனது நினைவு வர, பதறுகிறேன்.

“”1812-ம் வருடம் மே பதினொன்றாம் தேதி நாடாளுமன்ற வராந்தாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்பென்சர் பெர்சிவல்” விக்கலுக்கு நடுவே ஒரு குடிமகன் பியர் கோப்பையை உயர்த்திச் சொல்லிய விடை சரியானதாக அறிவிக்கப்படுவதைக் கேட்டபடி வெளியே வருகிறேன்.

Posted in Books, Buffs, Coovum, England, Era Murugan, Era Murukan, Films, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Literature, London Diary, Pub, River, Riverbanks, Riverside, Thames, UK | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »

London Diary – Counting the Crows by Cutting the Feathers to maintain Freedom

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

லண்டன் டைரி: ராஜவம்சம்போல காக்கா வம்சம்!

இரா. முருகன்

“”லண்டன் டவர் வளாகத்தில் நாங்க என்ன வளக்கறோம் தெரியுமா?” யோமன் காவல்காரர் கேட்கிறார். அங்கே தங்கியிருந்து தாடி வளர்க்கிறார் என்பது தவிர வேறே எதுவும் எனக்குப் புலப்படவில்லை. “”இதெல்லாம் நாங்க வளக்கறதுதான்” என்று பக்கத்தில் கைகாட்டுகிறார் அவர். அங்கே இரண்டு அண்டங்காக்கைகள்.

“”இங்கிலாந்து ராஜவம்சம் போல, இங்கே டவர்லே காக்கா வம்சம் ஐநூறு அறுநூறு வருஷமாத் தொடர்ந்து இருக்கு. இப்போ மொத்தம் எட்டுக் காக்கா. இதுங்க எல்லாம் எப்போ லண்டன் டவரை விட்டுப் பறந்து போகுதோ அன்னிக்கு இங்கிலாந்து சாம்ராஜ்யத்துக்கு அழிவு

காலம் ஆரம்பமாயிடும்னு நம்பிக்கை. இப்படித்தான் பாருங்க, ரெண்டாம் உலகப்போர் சமயத்துலே நாலுநாள் காக்கா உஷ். எல்லாம் காணாமப் போச்சு. சொன்னா நம்பமாட்டீங்க, அப்போ நிஜமாகவே இங்கிலாந்து யுத்தத்திலே தோத்துப் போகிற சூழ்நிலை. நல்லவேளை. சீக்கிரமே காக்காயெல்லாம் திரும்பிவர வெற்றி எங்களுக்குத்தான்” காவலர் அன்போடு காக்கைகளைச் சீட்டி அடித்துக் கூப்பிடுகிறார். டூரிஸ்ட்டுகள் எடுக்கும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில்லை என்று சங்கம் வைத்துத் தீர்மானித்த மாதிரி அவை விருட்டென்று பறந்து போகின்றன. “”ஐயய்யோ, டவரை விட்டு வெளியே பறந்துடப்போறது.” கூட வந்த அமெரிக்க அம்மா பதறுகிறார். இன்னும் அரைமணி நேரத்தில் இங்கிலாந்து சாம்ராஜ்யம் அழிந்தால் அவர் எப்படி ஏர்போட்டுக்குப் போய் அமெரிக்காவுக்கு விமானம் ஏறமுடியும் என்ற பயம் முகத்தில் தெரிகிறது. “”அதெப்படி வெளியே போகுமாம்? ரொம்பப் பறக்க முடியாதபடி இறக்கையை அப்பப்போ வெட்டிவிடறோமில்லே” காவல்காரர் பரம ரகசியமாகச் சொல்கிறார். காக்காப் பிடித்து கத்திரிக்கோலால் இறகு வெட்டிப் பராமரிக்கிற அவருடைய சேவைக்கு சல்யூட் அடிக்கிறேன்.

“”இதுபோல வேறென்ன நம்பிக்கையெல்லாம் இருக்கு?” காவலரைக் கேட்கிறேன்.

“”ஆன்போலின் மகாராணியைத்தான் கேட்டுச் சொல்லணும். வெட்டி விழுந்த அவங்க தலையைக் கையிலே தூக்கிக்கிட்டு நடுராத்திரிக்கு இங்கே ஆவியா நடந்து வர்றாங்க.”

சிங்கவாசலில் நிற்கிறோம். வாசல் மட்டும்தான். சிங்கக் கோபுரம் என்ன ஆச்சு? நான் விசாரிக்க வருவேன் என்று தெரியாமல் இருநூறு வருடங்களுக்கு முன்னாலேயே இடித்துவிட்டார்களாம். அந்தக் கோபுரத்தில் மிருகக் காட்சிசாலை இருந்ததாகத் தகவல். 1235-ம் வருஷத்தில் மூன்றாம் ஹென்றி மன்னனுக்குத் திருமணப் பரிசாக அப்போதைய ரோமானியப் பேரரசு மூன்று சிங்கங்களை அனுப்பி வைத்தது.(கல்யாணப் பரிசாகக் கொடுக்க அந்தக் காலத்தில் மில்க் குக்கர் இல்லை என்பதை நினைவில் வைக்கவேண்டும்). வந்த சிங்கத்தை வைத்து, சீட்டுக் கிழித்து, காசு வாங்கிப்போட்டு கண்காட்சி நடத்த ஆரம்பித்த பிரிட்டீஷ் அரச வம்சம் இதில் வரும் வருமானம் கணிசமாக இருந்ததாலோ என்னமோ, இன்னும் நிறைய மிருகங்களை இங்கே அடைத்துவைத்து 1835-ம் வருடம் வரை அதைத் தொடர்ந்திருக்கிறது.

பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் “புலி’ என்ற தலைப்பில் எழுதிய “கண் சிவந்து ஒளிரும் புலி’ பற்றிய பிரபலமான கவிதையை நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உருப்போட வேண்டியிருந்தது. அதைப் பற்றி “”காட்டில் திரியும் புலியை நேருக்கு நேர் கண்ட கவிஞனின் பிரமிக்கத்தக்க உணர்ச்சி வெளிப்பாடு” என்று நாகராஜன் சார் சொல்லிக்கொடுத்தபடி பதினைந்து வரிக்கு மேற்படாமல் பரீட்சைப் பேப்பரில் மாய்ந்து மாய்ந்து எழுதி மார்க் வாங்கியதும் மறக்கவில்லை. இந்தக் கண்காட்சி சாலைக்கு வந்து போனதுக்கு அப்புறம்தான் வில்லியம் பிளேக் புலிக்கவிதை எழுதினாராம். காகிதப் புலியான இந்தக் கவிதைப் புலியை நாங்களும், எங்க வாத்தியாரும் மாத்திரமில்லை, எழுதிய கவிஞரும்கூட காட்டுக்கெல்லாம் போகாமல், பத்திரமாகக் கூண்டுக்கு அந்தப் பக்கம் இருந்து பார்த்தவர்தான் என்று கேட்கும்போது இனம்புரியாத நிம்மதி.

டவர் வளாகம் வாட்டர்லூ பார்க்ஸ் பகுதியில் “ஜுவல் ஹவுஸ்’ உள்ளே நுழைகிறேன். பிரிட்டீஷ் அரச வம்சம் காலாகாலமாகச் சேமித்து வைத்த நகைகள், விலையுயர்ந்த வைரங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். இதில், அரச வம்சம் காசு கொடுத்து வாங்கியது சொற்பம். மற்றதெல்லாம் சூரியன் மறையாத அந்தக்கால பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அடிமை நாடுகளிலிருந்து கிட்டிய கட்டாய அன்பளிப்பு. இந்தியாவிலிருந்து வந்த கோஹினூர் வைரம் இங்கேதான் இருக்கிறது. எடுத்துக்கொண்டு போகும்போது மறக்காமல் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். பிரிட்டீஷ் நாகரீகம் மரியாதைக்குப் பெயர்போனதாக்கும்.

நகை இல்லத்தில் நடக்கவேண்டியதே இல்லை. நகரும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி நின்றால் ஒரு பிரதட்சணம் செய்து பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம். நகைநட்டைப் பார்த்து மெய்மறந்து அங்கேயே நின்று எத்தனை சவரன் தேறும் என்று சந்தோஷமாக சர்ச்சை செய்யும் அம்மணிகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம்தான்.

பிரிட்டீஷ் அரசவம்ச நகைகளை 1303-ம் வருடம் முதல் இங்கே டவரில் தான் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் வைத்திருந்தபோது அத்தனையும் கொள்ளை போய்விட்டதாம். கிட்டத்தட்ட அதையெல்லாம் மீட்டு (சொச்சத்தை வேறே இடங்களில் அன்பளிப்பாக வாங்கி) இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்தபடி நகைகளைக் கவனித்துப் பார்க்கிறேன். மணிமகுடம். வைரம் பதித்த அரச வாள். அரசச் சின்னமான செங்கோலில் பதித்த உலகிலேயே பெரிய வைரமான குல்லியன் என்று கண்ணைப் பறிக்கிறது. நகை இல்லச் சுவரில் பெரிய திரைகளில் கேவா கலர் படமாக, ஐம்பது வருடம் முன்னால் எலிசபெத் மகாராணியார் முடிசூடிய காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் முகத்தில் இனம் புரியாத சங்கடம். மகுடம், செங்கோல், காசுமாலை என்று கிலோக் கணக்கில் சுமந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருகிற சங்கடம் அது என்று தோன்றுகிறது.

கன்வேயர் பெல்ட் கோஹினூர் வைரம் வைத்த பெட்டிப்பக்கம் வருகிறது. என் நாடித்துடிப்பு அதிகமாகிறது. மனதில் கட்டபொம்மன் சிவாஜி மீசை துடிக்க “”வரி, வட்டி, வைரம்…எதற்காகக் கவர்ந்து போனாய்?” என்று சிம்மக்குரலில் கர்ஜிக்கிறார். “”கொடுத்திடுங்க, ப்ளீஸ், அது எங்களோடது. கொடுத்தீங்கன்னா, ரசீது தருவேன். பத்திரமா எடுத்துப்போய் அப்துல் கலாம் சார்கிட்டே கொடுத்து தில்லி ராஷ்ட்ரபதி பவன்லே வச்சுடச் சொல்றேன். நீங்க எப்போ வேணும்னாலும் உங்க செலவிலே டில்லிக்கு விசிட் அடிச்சுப் பார்த்துட்டு வரலாம். கொடுத்திடுங்க.” வாய்க்குள் என் குரல் கரைய கன்வேயர் பெல்ட் அறைக்கு வெளியே என்னை நகர்த்துகிறது.

டவரிலிருந்து வெளியே வரும்போது இதமான சாயங்கால வெயில். நடுக்கோபுரப் பக்க மேடையில் ஒற்றைக் காக்கை “என்னைப் படம் எடு’ என்று சாவதானமாக உட்கார்ந்திருக்கிறது. பக்கத்துச் சுவரை ஒட்டிச் சிரிப்புச் சத்தம். ஆன்போலின் அரசி. பிரஞ்சுக் கொலைக்காரன். ஓரமாக சிகரெட் பற்றவைத்தபடி அரசன், மதகுரு அடுத்த தலைவெட்டுக் காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கொலைக்காரன் ஆன்போலின் இடுப்பை இறுக்கமாக அணைத்துக் காதில் ஏதோ சொல்ல அவள் சிரித்துவிட்டு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொள்கிறாள். அரசியின் தலை அவள் கழுத்துக்கு மேல் பத்திரமாக இருக்கிறது.

Posted in Cutting Crows, England, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Jewel House, Jewels, Kohinoor, Literary, London Diary, Museum, UK | Leave a Comment »

London Diary in Dinamani Kathir by Iraa Murugan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

லண்டன் டைரி: லண்டன் டவர் ஒற்றைக் கட்டடமில்லை!

இரா. முருகன்

கி.மு முன்னூற்றுச் சொச்சம், கி.பி. எண்ணூற்று முப்பத்தேழு என்று யாராவது மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு வரலாற்றுப் பாடம் ஆரம்பித்தால் உடனடியாக ஜகா வாங்கி தலை தெறிக்க ஓடுகிறவரா நீங்கள்? உங்களோடு கூட, அல்லது பத்து அடி இன்னும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறவன் என்ற தகுதியோடு சொல்கிறேன் -லண்டன் கோபுரத்துக்குள் நுழைவதாக இருந்தால் கொஞ்சம் யோசித்துவிட்டுக் காலை எடுத்து வையுங்கள், மீறிப் போனால், “”வேண்டாம், வேண்டாம்” என்று நீங்கள் கையைக் காலை உதைத்து அடம் பிடித்தாலும் கிடத்திப் போட்டுச் சரித்திரத்தைக் கரைத்துப் புகட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

பிரிட்டீஷ் அரசாங்கமே இதற்காக மெனக்கெட்டு செலவு செய்து யோமன் காவல்காரர்கள் என்று மாஜி ராணுவ வீரர்களின் ஒரு படையையே வேலைக்கு அமர்த்தி இருக்கிறது. பீஃப் ஈட்டர்ஸ், அதாவது, “மாட்டு மாமிசம் சாப்பிடுகிறவர்கள்’ என்று இவர்களுக்குச் செல்லப் பெயர்.

டவர் ஹில் பாதாள ரயில் ஸ்டேஷனில் இறங்கி, கையில் பிடித்த காமிரா, பாப் கார்ன் பொட்டலம், புஷ்டியான கேர்ள் ப்ரண்ட் என்று சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிற கூட்டத்தில் கலக்கிறேன். முன்னால் ஏழெட்டு பிரம்மாண்டமான அலுமினிய டிபன் காரியரை அடுத்தடுத்து நிறுத்திய மாதிரி கோட்டை, கொத்தளம். தூர்ந்து போன அகழி என்று தேம்ஸ் நதிக்கரையில் லண்டன் கோபுர வளாகம் கம்பீரமாக நிற்கிறது. “தனிக்கட்டை ஆசாமிகளுக்கு பதினைந்து பவுன் டிக்கெட். குடும்பமாக வந்தால் நாற்பத்தைந்து பவுன் மட்டும்தான்’ என்று அறிவிப்புப் பலகை கண்டிப்பாகச் சொல்கிறது… ரொம்ப வயதான ஒரு கொரிய தம்பதி, ரொம்ப ரொம்ப வயதான ஜெர்மானிய ஜோடி. வால்தனமான நாலு குழந்தைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு ஓர் அமெரிக்க அம்மா -அப்பா, நிமிடத்துக்கு நாற்பத்தேழு தடவை கிச்சுக்கிச்சு மூட்டியது மாதிரி சிரிக்கிற சீன நர்சுகளின் கூட்டம் ஒன்று. கூட நிற்கிற இவர்களில் யாரையும் சத்தியப் பிரமாணம் செய்து “என்னோட குடும்பம்’ என்று கூடவே அழைத்துப் போய் குடும்ப டிக்கெட் எடுத்துக் காசை மிச்சப்படுத்த முடியாது என்று நிச்சயமாகத் தெரிய, மனசே இல்லாமல் பதினைந்து பவுனை அழுது ஒரு டிக்கெட் வாங்குகிறேன்.

அழுத்தமான கறுப்பில் சிவப்புக் கோடு இழுத்த நர்சரி பள்ளிக்கூட பின்-அப்-பார்ம் சீருடை அணிந்து கொண்டு தாடி வைத்த வயதான ஒரு பீஃப் ஈட்டர் எனக்காகக் காத்திருக்கிறார். எதிரில் முன்னால் சொல்லப்பட்ட சுற்றமும் நட்பும்.

“”வெள்ளைக் கோபுரத்தோடு பயணத்தைத் தொடங்கலாமா… எனக்கு நீங்கள் காசு பணம்னு எதுவும் தரத் தேவையில்லை. ராணுவ பென்ஷன். இந்தக் காவல் உத்தியோகத்துக்குக் காசு, தங்கியிருக்க கோட்டைக்குள்ளேயே வீடு இப்படி அரசாங்கமே எல்லாம் கொடுக்குது.”

“சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி எல்லாம் ரொம்பத் திருப்திகரமா இருக்கு’ என்று கூட்டம் கூட்டிச் சொல்கிற சர்க்கார் ஊழியரை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்த்த ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப் பார்த்தால், சீன நர்சுகள் கெக்கெக் என்று சிரிக்கிறார்கள். அவர்கள் நாட்டில் எல்லோருமே எப்போதுமே சந்தோஷமாக இருப்பார்கள். இல்லாத பட்சத்தில் நாலு மாசம் ஜெயிலில் தள்ளிச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

“”லண்டன் டவர்னு சொல்றது ஒத்தைக் கட்டடம் இல்லை. சின்னதும் பெரிசுமா இருபது கோட்டைகள், கோபுரம், அகழி எல்லாம் சேர்ந்த இந்த இடம் முழுக்கவே லண்டன் டவர்தான். வெள்ளைக் கோபுரம், செங்கல் கோபுரம், மணிக் கோபுரம், ரத்தக் கோபுரம். தொட்டில் கோபுரம், நடுக் கோபுரம், உப்புக் கோபுரம், கிணற்றுக் கோபுரம் இப்படி இருபது கோட்டைகள். முதன்முதலாக் கட்டினது வெள்ளைக் கோபுரம். அது கி.பி 1078ல்.” அவர் பின்னால் விரிந்து கிடக்கிற கட்டடங்களை இரண்டு கையையும் விரித்துச் சுழற்றிக் காட்டியபடி தொடர்கிறார். பழைய ஜேம்ஸ்பாண்ட் சினிமா ஹீரோ ஷான் கானரி போல கம்பீரமான குரல்.

“”ஆயிரத்து எழுபத்தெட்டிலா?” நம்ப முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் ஜெர்மானியப் பெருந்தாத்தா தலையாட்டி, பாட்டி காதில் ஏதோ சொல்கிறார். “”நமக்குக் கல்யாணம் ஆனதுக்கு அடுத்த வருஷம்” என்று நான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்தை ஆயிரம் வருடம் முன்னால் ஆக்கிரமித்த வில்லியம் மன்னன் வெள்ளைக் கோபுரத்தைக் கட்டியதற்கு முக்கியக் காரணம் பயம்தான் என்று தெரிகிறது. பகை அரசர்களின் படையெடுப்பிலிருந்து தற்காப்பு நடவடிக்கை என்று வெளியே சொன்னாலும், லண்டன் பட்டணத்து ஜனங்களிடமிருந்து ஜாக்கிரதையாகத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளத்தான் மேற்படி வில்லியம் இதைக் கட்டியிருக்கிறான். கருங்கல், சுண்ணாம்பு, ஜல்லி வகையறாக்களுக்குக் கூட லண்டன்காரர்களை நம்பாமல், ஒரு கல் விடாமல் பிரான்சிலிருந்து வரவழைத்திருக்கிறான் இந்தப் பேர்வழி.

வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைகிறேன். சரித்திரத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் காவலாளி. “”வில்லியம் ராஜாவிலே தொடங்கி அப்புறம் வந்த ராஜாக்களும் ராணிகளும் இங்கே அடுத்தடுத்து கட்டடம் கட்டியிருக்காங்க. இல்லேன்னா அவங்க கழுத்தை அறுத்துக் கொன்று போட்டு மத்தவங்க அழகான சமாதி கட்டியிருக்காங்க. அதுக்கு முன்னாடி அவங்களை அடைச்சு வைக்க ஏற்கனவே இருந்த கோபுரங்களைச் சித்திரவதைச் சாலை, சிறைக்கூடம்னு மாற்றி அமைச்சிருக்காங்க. ஆக, கட்டட கான்ட்ராக்டர்களுக்கு எப்போவும் எக்கச்சக்க டிமான்ட்.”

அமெரிக்க அம்மையார் சரித்திரத்தில் பொறுமையில்லாமல் நாலு குட்டிக் குழந்தைகளையும் பீஃப் ஈட்டருக்கு முன்னால் தள்ளிவிட்டு அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் காமிராவில் கோணம் சரிபார்க்கிறார். மேலிட அனுமதி வாங்கிவிட்டு, வீட்டுக்காரரும் ஃபோட்டோவில் இடம்பெற ஓடுகிறார். “”கோபுரத்தை மறைக்கறீங்களே தரையிலே உட்காருங்க”. வீட்டம்மா கட்டளைப்படி காவல்காரரின் காலடியில் சமர்த்தாக மண்டிபோட்டு உட்கார்ந்து அட்டகாசமாக போஸ் கொடுக்கிறார். சீன நர்சுகளின் சிரிப்பை எதிர்பார்க்கிறேன். அவர்கள் பாப்கார்ன் மென்றுகொண்டு மொபைல் தொலைபேசிகளை தோள்பட்டையில் உரசித் துடைத்தபடி அதில் இருக்கும் காமிராவால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த விநாடி, பெய்ஜிங்கில் அவர்கள் வீடுகளில் மொபைல் தொலைபேசி ஒலிக்க, வெள்ளைக் கோபுரமும், தாடி வைத்த காவல்காரரும், இந்த நர்சுகளும், ஒரு நறுக்கு இங்கிலாந்து சரித்திரம் உடனடி ஏற்றுமதியாக அங்கே ஒளிபரப்பாகும். “”லண்டன்லே இருந்து எங்க யுங் யான் அனுப்பியிருக்கா. அங்கே அரண்மனை வாசல். அந்தத் தாடிக்காரக் கிழவன் யார்னு தெரியலை. சே, சே பாய் பிரண்ட் எல்லாம் இல்லை” பந்துமித்திரர்களோடு இன்னும் ஒருவாரம் தகவல் பகிர்ந்துகொள்ளப்படும்.

“”கி.பி 1536லே ஆன்போலின் அரசியை, அவங்க புருஷன் எட்டாம் எட்வர்ட் சிரச்சேதம் செய்த இடம் இது”. எனக்கு முன்னால் பச்சை விரிந்து கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். “”பட்டப்பகலில் படுகொலை. ராணி ஸ்தலத்திலேயே மரணம்” மனதுக்குள் யாரோ தலைப்புச் செய்தி படிக்கிறார்கள்.

Posted in Diary, Dinamani, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, Tamil, UK | Leave a Comment »

London Diary: Ira Murugan – Indian Food, Desis in UK

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

லண்டன் டைரி: ஈஸ்ட் ஹாம் கடைவீதியும்… மாம்பலம் ரங்கநாதன் தெருவும்!

இரா. முருகன்

சுரங்கப்பாதை கும்மிருட்டு வழியாக இரண்டு ஸ்டேஷன், அப்புறம் மேலே தரைக்கு வந்து, வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிற அடுத்த ஸ்டேஷன், திரும்ப சுரங்கம் என்று குஷியாகக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு லண்டன் டிஸ்ட்ரிக்ட் லைனில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில் பெட்டியில் நான். மற்றும், போன ஸ்டேஷனில் குழந்தையோடு ஏறிய ஒரு பெண்.

குழந்தையைத் தோளில் சார்த்தியபடி, அந்தப் பெண் கையில் காகிதக் காப்பிக் கோப்பையோடு என்னை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வருகிறாள். பக்கத்தில் வந்து கோப்பையைக் குலுக்கியபடி, “”சில்லறை இருந்தா போடு, ப்ளீஸ்” என்கிறாள். போலந்து தேசத்திலிருந்து வந்திருக்கிறாளாம். சிநேகிதன் கைவிட்டுவிட்டு ஒரு சீனப் பெண்ணோடு போய்விட்டானாம். தடுமாறும் ஆங்கிலத்தில் அவள் சொல்லும்போது குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது. நான் சட்டைப் பையில் தேடிப் பார்த்து ஒரு பவுண்ட் நாணயத்தைக் குவளையில் போடுகிறேன். அடுத்த ஸ்டேஷன் வரும்போது குவளை கைப்பையில் மறைய, குழந்தையைச் சமாதானம் செய்தபடி அவள் இறங்குகிறாள்.

ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்துக்கு வெளியே வருகிறேன். லண்டனின் புறநகர்ப் பகுதி இது. ஐம்பது அறுபது வருடம் முன்னால் கிட்டத்தட்ட கிராமம் தான். அப்போது வெறும் ஆறாயிரம் பேர்தான் மொத்த ஜனத்தொகையே. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜெர்மன்காரர்கள் வெறியோடு இங்கே குண்டு வீசித் தாக்கி விளைவித்த சேதம் கணிசமானது. ஆனாலும் இப்போதைய ஈஸ்ட் ஹாமில் ஜனத்தொகை பழையதைவிடக் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். இதில் பெரும்பகுதி சுறுசுறுப்பான தமிழர்கள்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி கொஞ்சம் விஸ்தாரமான, அதிகம் கூட்டமில்லாத மாம்பலம் ரங்கநாதன் தெரு போல் விரிந்து கிடக்கிறது. தமிழில் பெயர் எழுதிய ஜவுளிக் கடை வாசல் கண்ணாடிக் கூண்டில் சிக்கென்று புடவை கட்டிய விளம்பரப் பொம்மைப் பெண் கை கூப்பித் திரும்பத் திரும்ப வணங்குகிறாள். அசல் தங்க நகை (சேதாரம், செய்கூலி என்ன ஆச்சு?) விற்கிற கடை. சீடை முறுக்கு, சாம்பார்ப்பொடி, ரசப்பொடிக் கடை. தெருவிலிருந்து கொஞ்சம் விலகி மகாலட்சுமி அம்மன் கோயில். அங்கே இன்றைக்கு ராத்திரி “ருக்மிணி கல்யாணம்’ பக்திப் பேருரை என்று அறிவிக்கும் நோட்டீசு ஒட்டிய சுவரில் பக்கத்திலேயே பாப் மியூசிக் நிகழ்ச்சிக்கான சுவரொட்டி.

வீடியோ, ஆடியோ காசெட் விற்கிற கடையில் “அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் ஓட்டல் அல்வா’ என்று என்னத்துக்காகவோ ஆக்ரோஷமும் அவசரமுமாக ஒலிக்கிற சினிமாப் பாட்டின் அடுத்த வரியை எதிர்பார்த்தபடி பத்திரிகைக் கடையில் நுழைகிறேன். கொஞ்சம் ஆறிப்போன சரக்குகள். அதாவது போன வாரத்திய தமிழ் வாரப் பத்திரிகைகள், முந்தா நாளைய சென்னைப் பதிப்பு, தினசரிகள். ஆச்சரியகரமாக, இலக்கியச் சிற்றிதழ் ஒன்று. “”மூணு பவுண்ட் சார்”. கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ரூபாய். சென்னையில் இருக்கும்போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் “ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்க நூற்றிருபது ரூபாய் அனுப்பவும்’ என்று அவ்வப்போது அனுப்பிய தபால் அட்டைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றத்துக்குத் தண்டனையாக மூன்று பவுண்ட் கொடுத்து, ஓரத்தில் பழுப்பேறிய ஒரு பிரதியை வாங்குகிறேன். “”பஞ்சாங்கம் வேணுமா சார்?”. எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன். லண்டன் அட்சரேகை தீர்க்கரேகைக்குப் பிரத்தியேகமான திருக்கணிதப் பஞ்சாங்கம். இலங்கை மட்டுவில் பகுதியில் கணித்து வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரங்கநாதன் தெரு பிரமையை இன்னும் கொஞ்சம் அசலாக்குகிறதுபோல, பக்கத்திலேயே “சரவண பவன்’ ஓட்டல். லண்டன் கிளை. ஜவுளிக் கடையில் ஷிபான் சாரி. மேட்சிங் பிளவுஸ் பீஸ், மல்வேட்டி வாங்கிவிட்டு, நகைக்கடையில் அட்டிகை விலை விசாரித்துவிட்டு, பாத்திரச் சீட்டுக் கட்டிய பிறகு, சரவண பவனில் படியேறி மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிற ஒரு கூட்டம் உள்ளே நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம். அங்கே மட்டுமில்லாமல், கொஞ்ச தூரத்தில் “சென்னை தோசா’, இன்னும் தெருவோடு நடந்தால் இரண்டு சாப்பாட்டுக் கடைகள் என்று ஈஸ்ட் ஹாம் முழுக்க சாம்பார் வாடை கமகமக்கிறது.

லண்டனில் இந்தியச் சாப்பாடுக்கு நிறைய வரவேற்பு. “டாமரிண்ட்’, “இம்லி’ என்று பெயரிலேயே புளி அடைத்த இந்திய ஓட்டல்கள் மதிய நேரங்களில் லண்டன் அலுவலகங்களுக்குச் சுடச்சுட டிபன் பாக்ஸில் சாப்பாடு அனுப்பி வைக்கிற பிசினஸ் சக்கைப்போடு போடுகிறதாம். இன்டர்நெட்டில் தோசை ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்து டெலிவரி செய்ய தோசைக்கடைக்காரர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி.

இனிப்பு, இரண்டு இட்லி, பொங்கல், தோசை, வடை, காப்பி எல்லாம் சேர்த்து காலைச் சாப்பாடு ஐந்து பவுண்ட் மட்டும் என்று தகவல் தரும் ஓட்டலில் நுழைகிறேன். கேபிள் டிவி தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் மாறிமாறி விவேக்கும் வடிவேலுவும். நடுவில் ஐந்து நிமிடத்துக்கு பழைய படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்கிவிட்டு ஓடுகிறார். “கேபிள் டிவி சந்தாவைப் புதுப்பித்தால் எம்.பி த்ரீ பிளேயர் இலவசம்’ என்ற அறிவிப்பு திரையின் கீழே ஓடியபடி இருக்கிறது. ஓட்டல் கல்லாவில் விநாயகர் படம், லட்சுமி படம். தமிழ் நாட்காட்டி, ஊதுபத்திப் புகை. சாப்பிட்டவர்கள் பணத்தோடு கொடுத்துவிட்டுப் போகிற பில்லைக் குத்தி வைக்கிற கழுமரம் மாதிரியான இரும்புக் கம்பி ஒன்று இருந்தால் அபாரமாக இருக்கும் எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

“”டாடி, எதுக்கு இங்கே வந்து சாப்பிடணும்னு அடம் பிடிக்கறே? வீட்டிலே இருந்து ஃபோன் செஞ்சா, கொண்டு வந்து கொடுத்திட மாட்டாங்களா?” மேசை மேசையாகக் கையில் எடுத்துச் சாப்பிட்டபடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்தபடி லேசான முகச் சுளிப்போடு அடுத்த டேபிளில் ஒரு சிறுமி முனகுகிறாள். தோசையைக் கத்தியால் குத்தி முள் கரண்டியால் பிய்த்து சாம்பாரில் தோய்க்க முயன்று தோற்றுப் போனவள், அப்பா வற்புறுத்தியபடிக்கு அப்புறம் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

“”ரேபு சிரஞ்சீவி பிலிம். வெங்கடராவ் டிவிடி இச்சாரு”. எதிர் டேபிள் ஆந்திர இளைஞர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி. அது இட்லியைத் தொட்டுக்கொண்டு கார சட்னி சாப்பிடுகிற சந்தோஷமா, ரகசியமா டிவிடி கிடைத்து லேடஸ்ட் தெலுங்குப் படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

“”எதுக்குய்யா பாங்குலே போய்ப் பணம் அனுப்பறே. நான் சொல்ற இடத்துலே கட்டு. கம்மி சார்ஜ். உத்தரவாதமா, நாளைக்கு சாயந்திரம் மண்ணடியிலேருந்து உங்க வீட்டுக்குப் போய்ச் சேந்திடும்.” அடுத்த மேஜையில் டிபன் சாப்பிட்டபடி ஒருத்தர் சிநேகிதரிடம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ஹவாலா வேணாம்’ என்று சர்வர் கொண்டு வந்த ஹல்வாவை ஒதுக்கிவிட்டு இட்லியோடு யுத்தம் புரிய ஆரம்பிக்கிறேன்.

Posted in Dinamani, England, Era Murugan, Era Murukan, Experiences, Ira Murugan, Ira Murukan, Kathir, London Diary, UK | Leave a Comment »

Ira Murukan – Kensington Gardens, Indian Kidnappers, Sangitha Kalanidhy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!

இரா. முருகன்

ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.

லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.

கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.

ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.

நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.

இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.

“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.

Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »

Iraa Murugan: Ironing Pants, Kensington, London Idly kadai

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

லண்டன் டைரி: எங்குமேயில்லாத ஒரு டுபாக்கூர் மிஷின்!

இரா. முருகன்

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கிற பிரதேசம் போல் லண்டன் கென்சிங்டன் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலின் அரண்மனை போன்ற பங்களாவில் தொடங்கி, தனிக்குடித்தனமாக எலிசபெத் அரசியாரின் மகன் சார்லஸ் இளவரசரும் இப்போதைய மனைவி கமீலா பார்க்கர் அம்மையாரும் வசிக்கிற அரதப் பழசு கென்சிங்டன் அரண்மனை வரை, இங்கிலாந்தின் பெரும் பணக்காரச் சீமான்கள் மாடி மேலே மாடி கட்டி வசதியாகக் குடியிருக்கிற பகுதி இந்தக் கென்சிங்டன். கூப்பிடு தூரத்திலேயே தினசரி முப்பது பவுண்ட் வாடகைக்கு சாமானியர்களுக்கான லாட்ஜ்களும் உண்டு.

அந்த மாதிரிப்பட்ட லாட்ஜில் ஒரு கீகடமான அறையில் ஓட்டை டெலிவிஷன் பெட்டியில் பி.பி.சி. சானலைப் பிடிக்க அரைமணி நேரம் முயற்சி செய்கிறேன். எந்தச் சானலைத் திருப்பினாலும், ரோமானியப் பேரரசு காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டார்களா என்பதுபோல் எதோ தலைபோகிற விஷயத்தை விவாதித்தபடி டை கட்டிய வயதான கும்பல் ஒன்று கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

டிரவுசர் பிரஸ் யந்திரத்தில் செருகியிருந்த நீல ஜீன்ûஸ எடுக்கிறேன். பிரிட்டீஷ்காரர்களின் தொழில் நுட்பத் திறமையை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த விநோத மிஷினை உலகில் வேறே எங்கேயுமே பார்த்ததாக ஞாபகம் இல்லை. சுவரில் நீளவாட்டில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு மரப் பலகை. இரண்டுக்கும் நடுவில் பேண்டைச் செருகிவிட்டு சுவிட்சைப் போட்டால். கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு பலகைக்கும் நடுவே இடைவெளி குறைந்து, ஸ்லோ மோஷனில் இறுக்கம் அதிகரிக்கும். பத்து நிமிடம் கழித்து சுவிட்சை அணைத்து விட்டு வெளியே எடுத்தால், முன்விரோதமுள்ள சலவைக்காரர் அல்லது மாமனார் அயர்ன் செய்து கொடுத்ததுபோல் கீழிருந்து மேலே முக்கால் பாகம் வரை ஏதோ பெயருக்கு உடுப்பு சீராகி இருக்கும். அதுக்கு மேலே இருக்கும் பகுதி போட்டது போட்ட மாதிரி சுருக்கத்தோடு இருந்தாலும், சட்டை, கோட், பிளேசர் என்று மாட்டி மறைத்துக் கொண்டு வெளியே திரியும்போது மடிப்புக் கலையாத பேண்ட் போல் பாவ்லா காட்டிவிடலாம்.

நீல ஜீன்ஸில் புகுந்து கொள்கிறேன். ஒரு மடிப்பு இருக்க வேண்டிய இடத்தில் நாலு மடிப்பும், காலைச் சுற்றி சதுரமாகச் சுருட்டியும் சந்திரமண்டல சஞ்சாரிகளின் உடை போல் டிரவுசர் பிரஸ் புண்ணியத்தில் நீல ஜீன்ஸ் உருமாறி இருக்கிறது. இந்த மாதிரி ஒரு டுபாக்கூர் மிஷினை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், இங்கிலாந்து முழுவதும் இருக்கப்பட்ட லாட்ஜ்களில் அறைக்கு அறை நிறுவ வைத்துக் கோடீஸ்வரரான ஆசாமியும் இந்தக் கென்சிங்டனில்தான் ஏதோ பங்களாவில் குடியிருப்பான் என்று மனதில் பட்சி சொல்கிறது. அந்த ஆள் மட்டும் கையில் மாட்டினால் டிரவுசர் பிரஸ்ஸில் நடுவிலே நிற்க வைத்து சுவிட்சைத் தட்டிவிட நான் ரெடி.

ஒரு கோப்பை காப்பி வயிற்றில் இறங்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் மாட மாளிகையும் கூடகோபுரமுமாக ஹாலிவுட் படத்துக்குப் போட்ட நிஜ செட் போல் கென்சிங்டன் அமைதியில் உறைந்து நிற்க, கிராம்வெல் வீதியில் மெல்ல நடக்கிறேன். பத்து அடி நடந்ததும் பிளாட்பாரத்தில் டெலிஃபோன் பூத் திறந்து கிடக்கிறது. பிறந்த குழந்தை “ங்கா’ என்று பேச ஆரம்பித்ததுமே கையில் மொபைல் தொலைபேசியைத் திணிக்கிற இந்தக் காலத்தில் தெருமுனையில் காசுபோட்டுத் தொலைபேசி உபயோகிக்கிறவர்கள் யார்? அதுவும் இங்கிலாந்தில்? என்று யோசித்தபடி கதவைத் திறந்து அந்தச் சிவப்புக் கூண்டுக்குள் நுழைகிறேன். காலி பியர் பாட்டில், மொட்டைத் தலை பாப் பாடகர்களின் நிகழ்ச்சிக்கு அழைக்கும் பிட் நோட்டீசுகள் என்று தரையில் இரைந்து கிடக்கின்றன. தொலைபேசியைச் சுற்றிலும் கண்ணாடிச் சுவரில் பெயர், விலாசம், படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கின்றன. ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொலம்பியா, பல்கேரியா, உக்ரைன் என்று எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பெண்கள் அந்தப் படங்களில் பரிதாபமாகச் சிரிக்கிறார்கள். “திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்’ என்று ஒரு விளம்பரம் அறிவிக்கிறது. ஒரு மூலையில்”யேசு வருகிறார்‘ என்று அறிவிக்கும் விளம்பரம்.

ரயில் நிலையத்துக்கு எதிரே தாட்டியான நான்கைந்து நடுத்தர வயது குஜராத்தி பெண்மணிகள் டிராக் சூட் அணிந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது கொஞ்சம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். “”பிங்கி பள்ளிக்கூடத்திலே கூடப் படிக்கிற வெள்ளைக்காரப் பையன் தினசரி சாயந்திரமாச்சுன்னா வீட்டுக்கு வந்து கும்மாளம் போட்டுட்டிருக்கான். சாரதாபெஹன் கண்டுக்கறதே இல்லே”. காதில் குண்டலம் அசைந்தாட புறணி பேசியபடி ஓடிவந்த அம்மாள் என்னைப் பார்த்ததும் சட்டென்று நிறுத்திக் கடந்து போகிறாள். பிங்கியின் வெள்ளைக்கார பாய் ஃப்ரண்டின் அம்மா வேறே எங்கேயோ யாரிடமோ இந்த நிமிடத்தில் “”இந்தியாக்காரப் பொண்ணு கூட இந்தப் பொறுப்பில்லாத பயபுள்ளை திரிஞ்சுக்கிட்டிருக்கான்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள். அல்லது தாமதமாக எழுந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சாண்ட்விச் தின்றபடி பேசிக்கொண்டிருப்பார்கள்.

கிளஸ்டர் வீதி பழைய புத்தகக் கடை அடைந்து கிடக்கிறது. லண்டனுக்கு வரும்போதெல்லாம் தவறாமல் படியேறுகிற இடம். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீனின் மருமகப்புள்ளை நடத்தும் கடை. கிரகாம் கிரீனும் நம்மூர் ஆங்கில இலக்கியப் பெரிசு ஆர்.கே.நாராயணும் உற்ற நண்பர்கள் என்பது தெரிந்திருக்கலாம். போன தடவை கடைக்குப் போனபோது ஆர்.கே.நாராயணின் “சுவாமியும் சிநேகிதர்களும்’ புத்தகம் அவருடைய சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணின் கோட்டுச் சித்திரங்களுடன் வந்த பழைய பதிப்பு கிடைத்தால் எடுத்து வைக்கும்படி கடைக்காரரிடம் சொல்லியிருந்தேன். அடைத்த கதவுகளுக்கு உள்ளே அது பத்திரமாக ஞாயிற்றுக்கிழமை உறக்கத்தில் இருக்கக்கூடும்.

கிளஸ்டர் வீதியில் ஒரே ஒரு கடை திறந்திருக்கிறது. காப்பிக்கடை. “”காப்பியோடு இரண்டு க்ராய்சண்ட் பன்னும் இலவசம்” என்று அவசரமாக சாக்குக் கட்டியால் கிறுக்கிய பலகை தெருவைப் பார்த்துத் திரும்பி இருக்கிறது. இந்த ஓட்டல், டீக்கடை வாசல் “சுடச்சுட இட்லி, காப்பி’ ரக போர்ட் விளம்பரம் நம்மிடமிருந்து லண்டன் போனதா அல்லது அங்கே இருந்து மாம்பலம், மந்தவெளி வந்ததா என்று தெரியவில்லை.

ஒரு காப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடி நோட்டம் இடுகிறேன். நேர் முன்னால் அழுக்கு ஓவர்கோட்டும், சர்ச்சில் காலத் தொப்பியும், முகத்தில் நாலுநாள் தாடியுமாக ஒருத்தர் கோப்பையிலிருந்து சத்தமாக உறிஞ்சிக் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு காப்பியும் தட்டில் பன்னும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போகிற சர்வர் பெண்ணை நிறுத்தி, “”பன் எனக்கு வரல்லே” என்று முறையிடுகிறார். “”உங்களுக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு” அந்தப் பெண் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டு நடக்கிறாள். எனக்கு முன்னால் வைத்த தட்டை அவருக்கு நீட்டுகிறேன். “”நான் பிச்சை கேட்கலே” சொல்லியபடி எழுகிறார். காப்பி குடித்து முடித்து கிளஸ்டர் வீதியில் நடக்கும்போது தானியங்கிக் காசு வழங்கும் யந்திரப் பொந்துக்குப் பக்கத்தில் தற்செயலாகப் பார்க்கிறேன். குளிருக்கு அடக்கமாகப் போர்வையைப் போர்த்தியபடி “”சில்லறை இருந்தாப் போடுங்க” என்று கேட்டபடி அவர் தரையில் குந்தி உட்கார்ந்திருக்கிறார்.

Posted in Bookshops, Coffee shop, England, Era Murugan, Free Croissants, Gloucester Bookstore, Graham Greene, Ira Murukan, Iraa Murugan, Iron Board, London Diary, RK Narayan, Sandwich, Trouser Press | 1 Comment »

London Diary – Westminister, Churchill, Dosa Granny, Musicians

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

லண்டன் டைரி: மூச்சுவிட மறந்த விஐபிகளின் விலாசம்!

இரா. முருகன்

வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லாக் கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில்.

கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஓர் இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய இசை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சுவரில் “இங்கே பஸ்கிங்க் அனுமதிக்கப்பட்டுள்ளது‘ என்று எழுதியிருப்பது கண்ணில் படுகிறது. ரயில் நிலையத்தில் இப்படி வாத்தியம் வாசித்து துண்டு விரித்துக் காசு சம்பாதிக்க (இதற்குப் பெயர்தான் “பஸ்கிங்க்’) லண்டன் மாநகராட்சி ஏற்படுத்திய தடை சமீபத்தில் நீங்கியதால், ரயில்வே ஸ்டேஷன்களில் அங்கங்கே இசைமழை. துண்டு விரிப்பில் காசு போட்டுவிட்டு “”என்ன வாசிக்கிறீங்க?” என்கிறேன். ரிச்சர்ட் வாக்னர் எழுதிய இசை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். அடுத்து இடத்தைப் பிடிக்கத் தயாராக ஓர் ஆப்பிரிக்கக் கூட்டம் முரசுகளோடு நிற்கிறது.

ரயில் நிலையக் கழிவறையில் நுழைய ஐம்பது பென்ஸ் கட்டணம். ஒன் பாத்ரூம் போக நாற்பத்தைந்து ரூபாயா? “”பக்கத்திலே செடிகொடி இருக்காமலா போயிடும்?” தோளைக் குலுக்கிக் கொண்டு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள். உள்ளே காசைக் கொடுத்துவிட்டுக் கனவான்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள். “”குப்தாஜி, இஸ் மே ஸரா பானி…” அடைத்த கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டிலை வெளியே நீட்ட, வெளியே நிற்கும் குப்தாஜி காகிதத்தை உபயோகிக்கச் சொல்லி இந்தியில் மன்றாடுகிறார். உள்ளே இருந்து இன்னும் அதிகாரமும் அவசரமுமாக குப்தாஜி மிரட்டப்பட, காலிபாட்டிலோடு தண்ணீர் பிடிக்க ஓடுகிறார் அவர். இனிமேல் இந்த பிராண்ட் மினரல் வாட்டர் வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறேன்.

பாதாள ரயில் பாதையின் இருட்டைப் பார்த்துப் பழகிய கண்ணுக்கு, ஸ்டேஷனுக்கு வெளியே கண்ணைக் குத்தும் காலை வெயில் இதமாக இருக்கிறது. இங்கிலாந்தின் பரபரப்பான சரித்திரம் தொடர்ந்து நிகழ்கிற பெரிய வெட்டவெளி மேடையாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் வாசலில் நூற்றுச் சொச்சம் வயதானவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து ஒரு கடமையை நிறைவேற்றுகிறது போல் நிதானமாகச் சாக்லெட் க்ரீம் வடியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பின்னால், வெஸ்ட்மின்ஸ்டர் கல்லறைகள். மூச்சுவிட மறந்துபோன வி.ஐ.பிகளால் அந்த இடம் நிறைந்து கிடக்கிறது. பெரிய சைஸ் சதுரங்கப் பலகைகளிலிருந்து வாரியெடுத்துக் கிடத்திப் படுக்க வைத்தது மாதிரி ராஜா, ராணி, மந்திரி, மதகுரு என்று ஒரு நட்சத்திரக் கும்பலே அங்கே உண்டு. கூடவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, நாடக நடிகர்கள், அரசியல்வாதிகள். இன்னும் நிறையப் பிரபலங்களை இங்கே புதைக்க இங்கிலாந்து மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களைப் புதைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் சின்னச் சிக்கல்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வாசல். அப்படிச் சொன்னால் ஆட்டோக்காரருக்கு வழி தெரியாது. நாடாளுமன்றம் என்று சொன்னால் சுலபமாகப் புரியும். (குறுக்கு வெட்டாக ஒரு தகவல் -இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன. நம்ம ஊர்த் தயாரிப்புதான். இன்னும் இவை லண்டனுக்கு வராவிட்டாலும் அறிமுகப்படுத்திய இடங்களில் சக்கைப்போடு போட, லண்டன் டாக்ஸி டிரைவர்கள் முஷ்டியை மடக்கிக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.)

நாடாளுமன்ற வாசல் முன்பாக நின்றபடி முறைத்துப் பார்க்கிற பழைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை, கன்சர்வேடிவ் கட்சி -லிபரல் கட்சி -திரும்ப கன்சர்வேடிவ் கட்சி என்று தாத்தா அந்தக் காலத்திலேயே ஜம்மென்று கட்சித் தாவல் நடத்தினாலும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமராக சக்கைப் போடு போட்டிருக்கிறார். அதிமுக்கியமான நூறு பிரிட்டீஷ்காரர்கள் யார் என்று பி.பி.சி டெலிவிஷன் இரண்டு வருடம் முன்னால் எடுத்த கணக்கெடுப்பில் எலிசபெத் மகாராணி, மறைந்த அவருடைய மருமகள் டயானா எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் இவர். மகாத்மா காந்தியைப் பற்றி, “அந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கையையும் காலையும் கட்டி, டில்லித் தெருவிலே போட்டு யானை மேலே வைஸ்ராய் துரையை உக்கார வச்சு ஓங்கி மிதிச்சுக் கொல்லச் சொல்லணும்’ என்று அழுகல் வாக்கு அருளிய இந்தச் சுருட்டுக்காரக் கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுற்றி வளைந்து போகிற சந்து பொந்துகளில் கால்போன போக்கில் நடக்கிறேன். பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்த இந்தத் தெருக்கள் இன்னும் பழைய கேஸ் விளக்கு அலங்காரத்தோடு காலத்தில் உறைந்துபோய் நிற்கின்றன. நாடாளுமன்றத்தில் ஏதாவது மசோதா மேல் ஓட்டெடுப்பு வந்தால் அங்கே முழங்கும் மணிச்சத்தம் இந்த முடுக்குச் சந்துகளில் சத்தமாகக் கேட்க, சாப்பிட உட்கார்ந்த, தூங்க ஆரம்பித்த, சும்மா வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருக்கிற உறுப்பினர்கள் எல்லாரும் போட்டது போட்டபடி ஓடி வருவார்களாம்.

தற்போது நாட்டை ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் எதிரும் புதிருமாகத் தலைமைச் செயலகம் அமைத்திருந்த தெரு நிசப்தமாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இரண்டு கட்சி ஆபீசிலும் தொண்டர்கள் மாடியில் ஏறி நின்று கட்சித் தாவலுக்காக எதிர்க் கட்டட ஆசாமிகளைத் தூண்டுவார்கள். இதோ வந்தாச்சு என்று யாராவது நிஜமாகவே கட்டடம் விட்டுக் கட்டடம் தாவித் தவறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்களோ என்னவோ தெரியாது. ரெண்டு கட்சிகளும் ஆபீசை வேறுவேறு இடங்களுக்கு மாற்றி விட்டன.

வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கப் பாதையில் மறுபடி புகுந்து நான்காம் வாசல் வழியாகத் தேம்ஸ் நதி தீரத்துக்கு வருகிறேன். போன நூற்றாண்டில் கிட்டத்தட்ட லண்டன் கூவமாகத் கிடந்த தேம்ஸ், சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக மணக்க ஆரம்பித்து வெகு காலம் ஆகிறதை நினைத்துப் பார்க்கிறேன்… கூவம் ஐயோ பாவம் என்று பக்கத்தில் பிக்பென் கடிகாரம் சத்தமாக மணியடித்து அனுதாபப்டுகிறது.

தேம்ஸ் படித்துறையில் பான்கேக் கடை பூட்டியிருக்கிறது. இந்தியக் களையோடு எந்த மூஞ்சியாவது தட்டுப்பட்டால், பான்கேக் வார்க்கிற இரும்புச் சட்டியில் கரண்டியால் டொண்டொண் என்று தட்டி, “தோசை சாப்பிட வாங்க’ என்று அன்போடு கூப்பிடுகிற பிரிட்டீஷ் பாட்டியம்மாளைக் காணோம். பான் கேக்குக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமையை யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். “” ஒரு மாதம் கடையை மூடிட்டு தென்னிந்தியாவிலேயே சுத்தலாம்னு இருக்கேன்” என்று போனமுறை சந்தித்தபோது சொன்னார். மெரினா மிளகாய் பஜ்ஜிக் கடைகள் பக்கம் புதுசாக ஸ்டால் போட்டு, “இங்கிலீஷ் தோசை’ விற்கிற, கத்தரிப்பூ கலர் கவுன் மாட்டிய ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை யாராவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

Posted in Churchill, Diary, Dinamani, Dosa, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, VIP, Westminister | Leave a Comment »

London Diary :: Iraa Murugan

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

லண்டன் டைரி: அடல்ஃபி தியேட்டர்…வில்லியம் ஆவி!

இரா. முருகன்

டிரஃபால்கர் சதுக்கத்திலிருந்து பொடிநடையாக ஸ்ட்ராடுக்குப் போகலாம். பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தால் நம் அதிர்ஷ்டம் நமக்கு முன்னால் ஒரு நாலு டூரிஸ்ட்கள் அன்ன நடை பயின்று கொண்டிருப்பார்கள். அதாவது காலில் வலி வந்த வயசான அன்னம் களிம்பு வாங்கப் புறப்பட்டது போன்ற நடை. என் மிச்ச வாழ் நாளை அவர்களுக்குப் பின்னால் டிரஃபால்கர் சதுக்க நடைபாதையில் ஊர்ந்தபடி கழிக்க உத்தேசம் இல்லாமல் சுற்றுமுற்றும் பார்க்க, சுரங்கப் பாதை வா வா என்கிறது.

சப்-வேயில் இறங்குகிறேன். மெலிசான இருட்டு. போனால் போகிறது என்று ஒரு குழல் விளக்கு கொஞ்சம்போல் சிந்திய வெளிச்சம் இருட்டை அடிக்கோடு இட்டுக் காட்டுகிறது. குப்பென்ற சிறுநீர் வாடை மூக்கைக் குத்தக் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். லண்டன்தான். எங்கிருந்தோ ஒரு கெட்ட வார்த்தை உரக்க ஆரம்பித்துத் தீனமாக முடிகிற சத்தம். சுரங்கப் பாதை சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடிக்கு ஓர் இளவயது வெள்ளைக்காரன். பக்கத்தில் காலி பாட்டில். கூடவே பாதி உடைந்து தரையில் கண்ணாடிச் சில்லு சிதறிய இன்னொன்று…””சில்லறை இருக்கா?” அவன் கேட்கிறான். இல்லை என்று தலையாட்டிவிட்டு, வழியில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததை மிதிக்காமல் ஜாக்கிரதையாக நடக்கிறேன். மறுபடியும் வசவு, அழுகல் வாடையோடு பின்னால் தொடர்கிறது.

சுரங்கப்பாதை படியேறி வெளியே வரும்போது, அழகும் ஆடம்பரமுமாக இன்னொரு லண்டன் சிரிக்கிறது. பரபரப்பான ஸ்ட்ராண்ட் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்னால் நடந்தால், இன்னும் கடைகள், நாடகக் கொட்டகைகள். நடுத்தெருச் சிலைகள். தூரத்தில் பிரதமர் டோனி ப்ளேர் குடியிருக்கும் டவுனிங் தெரு. நாடாளுமன்றம். இரண்டாம் யுத்தகாலத் தலைமைச் செயலகமான போர் அறைகள் என்று நீண்டு வளைந்து போகும் பாதை.

“தள்ளுபடி விற்பனை’, அடல்ஃபி தியேட்டருக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு பெரிய கடையில் விளம்பரம். கறீஸ் (இன்ழ்ழ்ஹ்ள்) என்ற அந்தப் பெரிய கடையில் டிவி, டிஜிட்டல் காமிரா, பாட்டு கேட்கும் ஐபாட், கம்ப்யூட்டர் என்று சகல எலக்ட்ரானிக் பொருட்களும் சரித்திரம் காணாத மலிவு விலையில், இன்றைக்கு மட்டும். சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்கொண்டு கறீஸ் கடைக் கூட்டத்தில் கலக்கிறேன்.

வாங்கிய பொருளோடு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டையும் கல்லாவில் நீட்டுகிறேன். எலிசபெத் ராணியம்மா படம் இல்லாத அந்த நோட்டைக் கடைக் காசாளர் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்கிறார். நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் தலை போட்ட அந்தப் பணம் நான் வசிக்கிற ஸ்காட்லாந்து பிரதேசத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்த மாநிலத்துக்கு மட்டும் தனி நாடாளுமன்றம், தனி கரன்சி நோட்டு என்று பிரிட்டீஷ் அரசு உரிமை கொடுத்திருக்கிறது.

“”என்ன பங்காளி, உங்க எடின்பரோவிலே பத்து, இருபது பவுண்ட் நோட்டு மட்டும்தான் அடிப்பீங்களா? இந்த வயசாளி படம் போட்ட ஐம்பது பவுண்ட் ஸ்காட்லாந்து நோட்டை நான் பார்த்ததேயில்லையே..”

மீதிச் சில்லறையைக் கொடுத்தபடி, கறுப்பர் இனக் காசாளர் “மேட்’ என்று என்னை சிநேகிதத்தோடு பங்காளியாக அழைத்து விசாரிக்கிறார். சமீபத்தில் யாரோ பஸ் கண்டக்டர் தன்னை “மேட்’ என்று கூப்பிட்டதை ஆட்சேபித்து தினப் பத்திரிகையில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் முழுப்பத்திக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது நானில்லை.

“”போனாப் போகுதுன்னு ராணியம்மாவை ஐம்பது பவுண்ட் நோட்டிலே மட்டும் விட்டு வச்சிருக்கோம். அது சரி, உங்க ஊர்லே ஒரு பவுண்ட் நோட்டு கிடையாது. எங்க கிட்டே உண்டே அது” என்கிறேன். “”நிஜமாவா” அவர் ஆவலோடு கேட்க, பாக்கெட்டிலிருந்து ஸ்காட்லாந்து கரன்சி நோட்டு ஒரு பவுண்ட்டை எடுத்துக் காட்டுகிறேன்.

அடல்ஃபி தியேட்டர் வெறிச்சோடிக் கிடக்கிறது சரியாக இருநூறு வருடத்துக்கு முன்னால் அதாவது 1806-ம் வருடம் கட்டிய நாடகக் கொட்டகை அது. ராயல் தியேட்டர், ராயல் மாடர்ன் அடல்ஃபி தியேட்டர், ராயல் அடல்ஃபி தியேட்டர் என்றெல்லாம் இந்த இருநூறு வருடத்தில் அவ்வப்போது பெயரை மாற்றி, இடித்துக் கட்டி, தற்போது வெறும் அடல்ஃபி தியேட்டராக இயங்குகிறது. இந்தத் “தற்போது’ என்பது 1930-ல் தொடங்குகிற சமாச்சாரம். ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பெத் தொடங்கி, ஈவிதா வரை இருநூறு வருடத்தில் இங்கே மேடையேறாத நாடகமே இல்லை.

இந்தத் தியேட்டரிலும் சுற்றுப் புறத்திலும் ஒரு பேய் உலாவுகிறதாகத் தெரிகிறது. 1897-ம் வருடம் ஒரு டிசம்பர் மாதக் குளிர்கால ராத்திரியில் வேஷம் கட்ட பக்கத்து முட்டுச் சந்து வழியாக அடல்ஃபி தியேட்டருக்கு விரைந்து கொண்டிருந்த வில்லியம் டெரிஸ் என்ற ராஜபார்ட் நடிகரை, சக நடிகர் ஒருத்தர் குத்திக் கொலை செய்துவிட்டாராம். “போய்ட்டு வரேன்’ என்ற கடைசி வாக்கியத்தோடு உயிரை விட்ட வில்லியம் இன்னும் இடத்தை விட்டுப் போகவே இல்லையாம்.

அடல்ஃபி தியேட்டரில் “ஈவிதா’ பகல் காட்சிக்கே இடம் கிடைத்தது. நான் நுழைந்தபோது தனியாகப் பத்து நிமிடம் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். என் ஒருத்தனுக்காக ஒரு பெரிய கோஷ்டியே பாடி நடிக்கப் போகிறது என்ற பெருமை சின்னாபின்னமாக, சீக்கிரமே அவை நிறைந்தது. நாலு மாதமாக ஒவ்வொரு தினமும் ஹவுஸ்ஃபுல்லாக நடக்கிற நாடகமாக்கும் ஈவிதா.

“”ஈவிதாவா நடிக்கிற எலினா ரோஜர், வீட்டுலே விசேஷம்னு அர்ஜெண்டினா போய்ட்டாளாம். இன்னிக்கு இன்னொரு பொண்ணு தான் நடிக்கறா” பக்கத்து சீட் அண்ணாச்சி கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல, அனுதாபத்தோடு தலையாட்டுகிறேன்.

ஐம்பதுகளில் அர்ஜெண்டினா அதிபராக இருந்த மேனுவெல் பெரானின் மனைவி ஈவா பெரான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் இது. சின்னக் கிராமத்தில் பாடகியாக வாழ்க்கையைத் தொடங்கி, அர்ஜெண்டினா தலைநகர் போனஸ் அயர்ஸ் வந்து மானுவல் பெரானின் ஆசை நாயகியாக, அப்புறம் அவருடைய அன்பு மனைவியாக, நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தலைவி ஈவிதாவாக எனப் படிப்படையாக உயர்ந்து, எதிர்பாராத தருணத்தில் நோயில் விழுந்து மரித்த ஈவா பெரானின் வாழ்க்கை பாட்டுக்களுக்கும் நடனத்துக்கும் இடையே பார்வையாளன் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈவா பெரான் சந்தித்தே இருக்காத பொலிவீயா புரட்சிக்காரன் செகுவேரா தான் அந்தப் பார்வையாளன் பாத்திரம்.

“”டோண்ட் க்ரை ஃபார் மீ அர்ஜெண்டினா” (எனக்காக அழாதீர்கள், அர்ஜெண்டினா மக்களே). இறக்கப் போகும் ஈவிதா உருக்கமாகப் பாட அரங்கத்தில் கலங்காத கண் இல்லை. நாடகம் முடிந்து செகுவேரா குரலில் “குட்நைட் அண்ட் கம் எகெய்ன்’ என்று வாய்க்குள் பாடிக்கொண்டு சப்-வே வழியாகத் திரும்புகிறேன்.

“”எப்படி இருந்தது நாடகம்?”- கத்திக்குத்தில் செத்துப்போன ராஜபார்ட் வில்லியம் பக்கத்தில் மிதந்தபடி விசாரிக்கிறார்.

“”பிரமாதம்: ஆமா, நீங்க எப்படி பகல் நேரத்திலே உலாத்தறீங்க?”

“”நானும் மேட்னி ஷோ நடத்துறேன்.” புகைபோல் அந்த ஆவி டிரஃபால்கர் சதுக்கப் பக்கம் எழுந்து போகிறது.

Posted in Adelphi Theater, Diary, Dinamani, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, London, Series, Thinamani Kathir | 1 Comment »