சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்
திருச்சி, மே 5: சென்னை, பெங்களூர் உள்பட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே. சின்கா.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
கடும் போட்டிகளிடையே இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் முன்பிருந்த அரசுத்துறை என்பதை மாற்றி ஒரு கம்பெனி நிர்வாகம் என்ற போக்கில் ஊழியர்களும், அலுவலர்களும் தங்களது மனப்பாங்கை மாற்ற வேண்டும்.
2010-ம் ஆண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 90 ஆயிரம் கோடி நிகர வருமானத்தை ஈட்டுமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பணித்துள்ளது.
2000-1 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டபோது நிகர வருமானம் ரூ. 22 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே தற்போது ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த பெருக்கம் இன்னும் ஊக்கவிக்கப்பட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எளிதில் அடைந்துவிடலாம்.
சமீபத்தில் புணே நகரில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த சேவைக்கு கிடைக்கும் பங்குதாரர்களை வைத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஏ.கே. சின்கா.