கண்டுபிடிப்பு: அய்யோ திருடன்..!
பள்ளி வாசல், சினிமா தியேட்டர், மருத்துவமனை, மார்க்கெட், பஸ் நிறுத்தத்தின் டூ வீலர் பார்க்கிங்… இப்படி எல்லா இடத்திற்கும் ஒரு விஷயத்தில் ஓர் ஒற்றுமை உண்டு. மேற்சொன்ன எல்லா இடங்களிலுமே டூ வீலர் அதிகம் திருடு போகின்றன என்பதுதான் அந்த ஒற்றுமை!
சென்னையில் மட்டுமல்ல, இப்படி எந்த மூலையில் டூ வீலர் திருடப்பட்டாலும், அதை ராத்திரியோடு ராத்திரியாக பார்ட் பார்ட்டாக கழற்றி பல ஊர்களுக்கும் பார்சல் ஆக்கிவிடும் பொல்லாதவர்கள், நகரம்தான் என்றில்லை… கிராமங்கள் தோறும்தான் இருக்கிறார்கள். தங்களின் டூ வீலருக்கு எத்தகைய பூட்டு போட்டாலும் அதைத் திறந்துவிடும் இந்த திருடர்களிடமிருந்து தங்களின் வண்டியைக் காப்பாற்றுவதற்கு படாத பாடு படுபவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களின் கண்ணீரைத் துடைக்க வந்துவிட்டது ஒரு கண்டுபிடிப்பு!
திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் பலே திருடர்களின் கைவரிசை இனி செல்லாது. திருடும்போதே எச்சரிக்கை செய்யும் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.
கண்டுபிடிப்புக் குழுவில் இடம்பெற்ற ஒன்பது மாணவர்கள்: சந்தோஷ் குமார், அருள்பாலாஜி, குகன், முகம்மது இஸ்மாயில், ஸ்ரீநாத், பிரவீன்குமார், ராம்குமார், மணிகண்டன், வெங்கடேஷ். மாணவர்களின் நவரசப் பேச்சு இதோ!:
“”அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக எங்கள் அறிவியல் ஆசிரியைப் புதிதாக எதையாவது கண்டுபிடியுங்கள் என்று சொன்னார். அப்போது நாங்கள் யோசித்து ஆறு மாதம் முயற்சித்து உருவாக்கியதுதான் இந்தக் கருவி.
எங்களின் முயற்சிகளை முறையாக வகைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, எங்களின் இந்தக் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எங்களின் ஆசிரியர்கள்தான். அதிலும் எங்களின் அறிவியல் ஆசிரியர்களான நீலா, ரமேஷ்குமார், சேகர், லோகநாதன் ஆகியோருக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உதவித் தலைமை ஆசிரியர் பாண்டியராஜனும், தலைமையாசிரியர் கல்யாணராமனும், எங்களுடன் படிக்கும் சக மாணவர்களும், எங்களின் பெற்றோர்களும் எங்களுக்கு அளித்த உற்சாகத்துக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை. அவர்களின் ஊக்குவிப்பால்தான் இதை எங்களால் செய்யமுடிந்திருக்கின்றது என்போம்.
இந்தக் கருவியில் சிறிய பாட்டில் ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மேல் மட்டத்தில் மூன்று மின் கம்பிகள் நீரின் மீது பட்டும் படாமலும் இருக்கும். திருட முயல்பவன் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது தண்ணீர் தானாக ஆடி மூன்று கம்பிகளையும் தொடும். ஒரு கம்பியில் உள்ள மின்சாரம் நீர் பட்டவுடன் மற்ற இரண்டு கம்பிகளிலும் பாயும். மின்கலத்திலிருந்து வெளியேறும் மின்சாரம் ஒலிப்பானை ஒலிக்கவைக்கும். சிறியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி “அய்யோ திருடன் -அய்யோ திருடன்’ என்று அலறி எச்சரிக்கும். விட்டால் போதுமென திருடன் ஓடிவிடுவான்.
“உரிமையாளர் வண்டியை எடுக்கும்போதும் இதுபோல சத்தம் வருமோ?’ என்று சிலருக்குப் பயம் இருக்கலாம். அப்படி சத்தம் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரகசியமாக வண்டியிலேயே சுவிட்ச் ஒன்றையும் பொருத்தி வைக்கிறோம். உரிமையாளர் வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு போகிறபோது, சுவிட்சை ஆன் செய்விட்டு வண்டியை “ஃபோர்க் லாக்’ செய்துவிட்டால் போதும். உரிமையாளர் எடுக்கிறபோது சத்தம் வராது.
இக் கருவியைத் தயாரித்து வாகனத்தில் பொருத்த இரண்டாயிரம் ரூபாய் செலவாகும். எங்களின் முயற்சியைத் தெரிந்துகொண்டு இரு சக்கர வாகன முகவர் ஒருவர் இக்கருவிகளை பெரிய அளவில் தயாரிக்க உதவி செய்வதாகச் சொல்லி உள்ளார். இதற்கடுத்து செல்போன் திருட்டைத் தடுக்கும் கருவி ஒன்றையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்கின்றனர்.
-கூடி யோசித்தால்… கோடி புதிய கருவிகள்!