நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறையும்
ப. முத்தையன்
அரசு மற்றும் தனியார் வங்கிகள் தனி நபருக்கோ அல்லது கூட்டாகவோ, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குகின்றன.
வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என்று இவற்றை அவை வகைப்படுத்தி வழங்குகின்றன.
பொதுவாக மனுதாரரின் மாத வருவாய் அல்லது மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வரவு-செலவுக் கணக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு, ஜாமீன்தாரர்களின் வருமான விவரம், வயது, பணிக்காலம் இவற்றைப் பொருத்து கடன்கள் வழங்கப்படுகின்றன.
ஈட்டுக் கடன் பத்திரமும் பதிவு செய்யப்படுகிறது. மனுதாரர் மற்றும் கூட்டு மனுதாரர் என்று வகைப்படுத்தி ஒருவரது அல்லது இருவரது சொத்து மதிப்பும், வருமானமும் சான்றிதழ்களுடன் பெறப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. பொதுவாக கணவன் மனைவி அல்லது மனைவி கணவன் இருவரும் மனுதாரர், கூட்டு மனுதாரர் என்று அதாவது ஆங்கிலத்தில் “அப்ளிகண்ட்’, “கோ அப்ளிகண்ட்’ என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
கடன் வழங்கும்போது மாறா வட்டி, மாறும் வட்டி என்று இரு வகைகளில் பிரிக்கப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் வழங்கும் மனுக்களில் பல நிபந்தனைகள் அச்சடிக்கப்பட்டு கையெழுத்தும் பெறப்படுகின்றன. என்ன நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியாமலேயே பலரும் கையொப்பம் இட்டு கடன் கிடைத்தால் போதுமென்று “தலையை’ அடகு வைத்து விடுகின்றனர். நமக்குத் தெரியாமலேயே நாம் வங்கிகளின் கைகளில் அகப்பட்டுக் கொள்கிறோம்.
கடன் வழங்கும்போது ஐந்து ஆண்டு, பத்து ஆண்டு, பதினைந்து ஆண்டு, இருபது ஆண்டு என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு வட்டி விகிதம் உறுதி செய்யப்படுகிறது. தவறும்பட்சத்தில் தவறும் வட்டிவிகிதம் எவ்வளவு என்றும் “சர்சார்ஜ்’ எவ்வளவு என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது சொத்தைக் கையகப்படுத்தி ஏலம் மூலம் விற்பனை செய்து கடன் தொகையை வட்டி, அபராதவட்டி, சேவை வரியுடன் பிடித்தம் செய்து கொள்ளவும் சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
“கடன் பட்டார்நெஞ்சம் கலங்கினார்’ என்பதுபோல் ஆபத்தில் மாட்டும்போது தான் யார் நாணயம் தவறியவர், தவறுபவர் என்பது நமக்குப் புரிகிறது. புரிகிறபோது தலைக்கு மேல் வெள்ளம் போயிருக்கும்.
மாறா வட்டி, மாறும் வட்டி என்று நிர்ணயம் செய்து கடன் வழங்கினாலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது இதர வங்கிகளும் வட்டி விகிதத்தை ஓசைப் படாமல் உயர்த்தி விடுகின்றன. மாறா வட்டி என்றால் அவர்கள் “மொழியில்’ வட்டி மாறும் என்பதுதான். ஆனால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது மாறா வட்டி என்பது அவர்கள் “மொழியில்’ வட்டி மாறாது என்பதுதான். குறைக்கும்போது மாறாது; ஆனால் உயர்த்தும்போது மாறும். எனவே மாறா வட்டி என்பது ஒரு சிறு கண் துடைப்பே.
பொதுவாக காலக்கெடுவை நிர்ணயம் செய்து கடன் வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மிகவும் தந்திரமாக ஏமாற்றப்படுகின்றனர். உதாரணத்திற்கு மாதத் தவணை ரூபாய் ஐந்தாயிரம் என்றும் 24 மொத்த தவணை என்று கொண்டால் ஒருவர் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். காசோலை கொடுக்கும்பட்சத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாதத் தவணை தவறும்போது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு மேல் அபராத வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு வழியில் நமக்கு உபரியாகப் பணம் வந்தால் நம் கடனை பாதியிலேயே முழுமையாக அடைத்து விடத் தோன்றும். அப்போது வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் நடக்கும் கூத்து கேலிக்கூத்தே!
முன்கூட்டியே கடனை அடைத்தாலும் வங்கிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மிகுதியாகத் தொகையை நாம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 24 மாதத் தவணையை 12 மாதங்களிலேயே முடித்துக் கணக்கை முடிக்க நினைத்தாலும் மீதமுள்ள 12 மாதத் தவணைத் தொகை அதாவது ரூ. 12 ல 5 ஆயிரம் – ரூ. 60 ஆயிரத்துக்கு 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வங்கிகளுக்கு உபரியாகச் செலுத்த வேண்டும். அப்போதுதான் கணக்கை வங்கிகள் முடிக்கும். காரணம் கேட்டால் ரிசர்வ் வங்கியைக் கைகாட்டுகிறார்கள். என்ன விதியோ என்ன முன்னுதாரணமோ தெரியவில்லை.
தவணை தவறிக் கடனை அடைத்தாலும் அபராதம். தவணைக்கு முன்னரே கடனை அடைத்தாலும் அபராதம். நாணயம் தவறிய நாணயதாரர்கள் யார்? நாமா அல்லது வங்கியா?
மூலப் பத்திரங்களையும் மற்ற ஆவணங்களையும் கடன் பெறும் போது மனுதாரர்கள் வங்கிகளில் செலுத்த வேண்டும். கடன் மனுக்களில் மனுதாரர்களும் ஜாமீன்தாரர்களும் அதாவது அப்ளிகண்டும், கோ – அப்ளிகண்ட்களும் கையெழுத்திட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன் சிலசமயம் வங்கிகள் ஓசைப்படாமல் மூலதாரப் பத்திரங்களை ஜாமீன்தாரர்களிடம் கொடுத்து விடுவர். கேட்டால் நெருங்கிய உறவுதானே, மேலும் நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லையே என்று நொண்டி சாக்கு.
பணம் செலுத்துவதற்கு மட்டும் மனுதாரர்கள், பத்திரம் வாங்குவதற்கு ஜாமீன்தாரர்கள். கடன் வாங்கும்போது உள்ள உறவு, இடைப்பட்ட காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் அல்லவா? அதனால் மூலதாரப் பத்திரங்களை மனுதாரர்களிடம் ஒப்படைப்பதே நியாயமும் நேர்மையும்கூட.
பல திருமணங்களில் மகளின் நலன் கருதி பெற்றோர் ஒரு சொத்தை மகள், மருமகன் பெயரில் பத்திரம் பதிவு செய்ய நேரிடுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் மகளும் மருமகனும் பிரிய நேரிட்டால் மகளின் சொத்து பறிபோய்விடும்.
அதேபோல் தவணை செலுத்த முடியாதபோது சொத்தைக் கையகப்படுத்தி ஏலம் மூலம் தொகையை வசூல் செய்யும்போது பல மனுதாரர்கள் அவதிக்குள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும் பரிசீலனைக் கட்டணம் என்று ஒரு சுமை. கடன்கோரும் விண்ணப்பத்தைப் படிப்பதற்கு ஒரு கட்டணமா? அதை இலவச சேவையாகச் செய்தால் என்ன? பரிசீலனைக் கட்டணம் ஒழிக்கப்பட வேண்டும். மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வட்டியே போதுமானது. மாறா வட்டி என்றால் மாறாமலேயே இருக்க வேண்டும். மாறும் வட்டி என்றால் ஏற்றம், இறக்கத்திற்கு ஒரே அளவுகோல் இருக்க வேண்டும். வட்டி குறைக்கப்படும்போது இறக்கம் இருக்க வேண்டும்.
முன்கூட்டியே கடனே முழுமையாக அடைத்துக் கணக்கை முடிக்கும்போது உபரியாக எந்தத் தொகையும் வசூலிக்கக் கூடாது.
கடன் முழுமையாக தீரும்போது மூலப் பத்திரங்களையும் ஆதரவு ஆவணங்களையும் மனுதாரரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்; அல்லது அவர்கள் அங்கீகாரம் பெற்றவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
ஏதோ சில காரணங்களுக்காக தவணை கடந்து சொத்தை கையகப்படுத்தி ஏலம் விடப்படும் போது மனிதாபிமான அடிப்படையில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
எக்காலத்திலும் அபராத வட்டி சுமையாக இருக்கக் கூடாது. அதேபோல் சேவை வரி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சேவைக்காகத் தான் வட்டி பெறப்படும்போது எதற்கு சேவைக்கு வரி?
கடன் பத்திரங்களின் நிபந்தனைகள் அனைத்தும் தெளிவாகப் புரியும்படி தாய்மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்மூலம் அவற்றைப் படித்து தெளிவடைய வாய்ப்பு உண்டு. மேற்கூறிய நிபந்தனைகளை வங்கிகள் மீறும்போது அவற்றின் மீது சட்டப்படி வழக்கை எடுக்க நமக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். எப்படி வங்கிக்கு சட்ட அதிகாரம் உள்ளதோ அதேபோல் நமக்கும் வழங்கினால்தான் நேர்மையும் உதிமையும் காப்பாற்றப்படும். எளிமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் துணை புரியும்.
எனவே கனவு இல்லம் நனவாகும்போது இனிக்க வேண்டுமே அல்லாது கசக்கக்கூடாது. மக்கள் பணமே மக்களுக்காகப் பயன்படும்போது முறைகேடுகள் நடக்கலாமா? கூடாது!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை).