“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி?
டி. அய்யாபிள்ளை, நாகர்கோவில்.
நான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.
சிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.
உங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.
நீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.
இந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.
நுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்?
பாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.
“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in
இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.