Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Innovation’ Category

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

World Intellectual Property Day – Copyright Protections and Impact on Commerce

Posted by Snapjudge மேல் மே 5, 2007

அறிவுசார் பொருளாதார வளர்ச்சி

பி.கே. மனோகரன்

சர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.

அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.

அறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.

அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

வேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.

உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

அறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.

 • 1. காப்புரிமை,
 • 2. பதிப்புரிமை,
 • 3. வர்த்தக சின்னங்கள்,
 • 4. பூகோள அடையாளங்கள்,
 • 5. தொழிலியல் வடிவமைப்புகள்,
 • 6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்
 • 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.

காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.

காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக

 • வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,
 • மேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.
 • ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
 • மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
 • ஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.
 • மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.

இந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.

அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)

Posted in Biotech, Commerce, Competition, Copyright, Court, Design, Economy, Expenses, Finance, Infringement, Innovation, Intellectual, Intellectual Property, Intelligence, Invent, Invention, Inventor, IP, Juice, Law, Lawsuit, Medicine, Order, Pomegranate, Property, Protection, Research, Secrets, service, Servicemarks, Sesame, SM, Stifle, Technology, TM, Trade, Trademarks, Turmeric | 1 Comment »

Nobel prize for Yunus hailed as anti-poverty boost

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

சுய உதவிக் குழுக்களின் தந்தை

இரா.நாறும்பூநாதன்

கடைசியில், சகலவிதத்திலும் தகுதி பெற்ற இந்த மனிதருக்கு உலகின் உயரிய விருது அளிக்கப்பட்டிருப்பதை எண்ணி இந்தியர்களாகிய நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “சுய உதவிக் குழுக்களின் தந்தை’யாகக் கருதப்படக்கூடிய முகம்மது யூனுஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை இந்தியாவின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பரவசத்துடன் வரவேற்பதைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதே சரியாக இருக்க முடியும்.

1976-ல் பங்களாதேஷில் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் 1986-களுக்குப் பின்பாக இந்தியாவில் படிப்படியாகத் துவங்கி உலகிலேயே அதிக சுய உதவிக் குழுக்களைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்தப் பொருளாதார நிபுணரின் தொலைநோக்குப் பார்வை நுட்பமாகவும், சரியானதாகவும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முகம்மது யூனுஸுக்கு 1974-ல் ஏற்பட்ட வங்கப்பஞ்சம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்களின் அவல நிலை, கந்துவட்டிக் கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் நிலையை நேரில் பார்த்தார். மருந்தின்றி நோயில் அவஸ்தைப்படும் ஒரு வயதான மூதாட்டியைக் காப்பாற்றக்கூட அருகில் உள்ளவர்கள் முயலாத இயலா நிலையைப் பார்க்க நேரிட்டது.

அந்தத் தெருவில் வசித்த பெண்களிடம் மிகச் சொற்பமான தொகையை வசூல் செய்து, அந்த மூதாட்டியை உயிர் பிழைக்க வைத்து அந்தப் பெண்கள் சுயமாகத் தொழில் துவங்க சிறிய தொகையைக் கடனாகக் கொடுத்தார் யூனுஸ். தங்களின் சிறிய பங்களிப்பில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்ததையும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய பொருளாதார உதவியைப் பற்றிக் கொண்டு அந்தக் கடனை சிறிது சிறிதாக அடைக்க இயலும் என்ற நம்பிக்கையையும் இந்தச் சிறிய நிகழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ரொம்ப நேர்மையாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய விதம் யூனுஸுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசு வங்கிகள் மறுத்த நிலையில், 1976-ல் கிராமிய வங்கியை பெண்களுக்காகவே துவக்கினார். பெண்களின் சுய உதவிக் குழுக்களை நிறுவி, அவர்களது வாராந்திர சேமிப்பை வங்கியில் செலுத்தச் செய்து, அதன் அடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். பங்களாதேஷ் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட்ட பின்னணியில், யுனெஸ்கோ மூலம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய மதிப்பீடு உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இவை செயல்படும் என்பதைக் கண்டறிந்து ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த சிந்தனை பரவியது.

1986களுக்குப் பின்பு இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இதன் அபரிதமான வளர்ச்சி, பெண்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஒரே மாதிரியாக சீருடையில் 20 பேர், 30 பேர் உள்ளூர் பிரச்சினைகளை, நகராட்சிகளில், மாநகராட்சிகளில் மொத்தமாக முறையிட்டபோது, அவசர அவசரமாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். கடைசியாக, சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்தார்கள் என்ற போட்டி தமிழகத்தில் முக்கிய இரு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டதில் போய் முடிந்தது. எது எப்படி என்றாலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், சுய உதவிக் குழுக்களை ஆதரித்தன. இந்தியாவில் இன்றைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்றால் அவற்றில் உத்தேசமாக 5 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் வங்கிகளில் கடனை வாங்கி மிகவும் நேர்மையாகத் திருப்பிச் செலுத்துவதை அறிந்து, பெரும்பாலான வங்கிகள் இவர்களுக்கு கடன் தருவதையே விரும்புகின்றன. “வாராக் கடன்கள்’ பட்டியலில் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இல்லையென்றே கூறலாம்.

மனித சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண எத்தனையோ தத்துவங்களும், மதங்களும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கின்றன. ஆனாலும் மனித வாழ்வு நைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆயினும் ஓரளவு சாத்தியப்பாடுடன் கூடிய ஓர் அமைதியான இயக்கத்தை – பெண்களின் விழிப்புணர்வை, நம்பிக்கையைப் பெறுவதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் முகம்மது யூனுஸ் என்றே கூறலாம்.

சுயதொழில் மூலம் சம்பாத்தியம் செய்யும் இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பெண்கள் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். “நம்ம ஆளுக்குத்தான் நோபல் பிரைஸ் கொடுத்திருக்காகளாம்…’ என்று மகிழ்ச்சியுடன் சில பெண்கள், பத்திரிகை படித்துச் சொல்லும்போது, ஓரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரைப் பற்றி ஒரு நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் நினைவு கூர்வதுகூட இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Posted in Bangladesh, Banks, Commerce, Economics, Grameen, India, Innovation, Loans, Micro-credit, Mohammad Younus, Nobel, Peace, Poverty, Prize, South Asia, Yunus | Leave a Comment »