சிறப்பாக செயல்படுவதாக தேர்வு: இந்திய தொலை தொடர்புத்துறைக்கு சர்வதேச விருது
புதுடெல்லி, பிப்.14-
உலக அளவில் இயங்கும் தொலை தொடர்புத்துறைகளில் சிறப்பானவற்றை தேர்ந்து எடுத்து அறிவிக்கும் அமைப்பு, பார்சிலோனாவில் இயங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெறும் அரசு சார்பான தொலை தொடர்புத்துறை எது? என்பதை இந்த சர்வதேச அமைப்பு ஆராய்ந்தது. இதில் 700 தொலை தொடர்பு இயக்கங்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் சிறப்பாக தேர்ந்து எடுக்கப்படும் அரசு தொலை தொடர்புத்துறையாக, இந்தியாவின் தொலை தொடர்புத்துறை தேர்ந்து எடுக்கப்பட்டது.
இதற்கான காரணங்கள் வருமாறு:-
1. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய தொலை தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி.
2. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை புதிய தொலைபேசி சந்தாதார் சேருகிறார்கள்.
3. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், இந்த துறை ஊக்கம் பெற்று இருக்கிறது.
4. இந்த துறை நகர பகுதிகளை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், கிராம பகுதிகளையும் மேன்மை படுத்தி இருக்கிறது.
5. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், தொலை தொடர்புத்துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
6. உள்நாட்டு மற்றும் சர்வதேச தொலை தொடர்பு செயலாக்கத்தில், சிறப்பான நிர்வாகம் காரணமாக பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு விட்டது.
இந்திய தொலை தொடர்புத்துறைக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்த விருதை, சர்வதேச அமைப்பின் தலைவர் ராப் கான்வே வழங்கினார். விருதை மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை மந்திரி தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் தயாநிதி மாறன் பேசியதாவது:-
மிகவும் சிறப்பு மிக்க சர்வதேச விருது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதை நான் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில், அரசு தொலை தொடர்புத்துறை , தானும் வளர்ந்ததோடு அல்லாமல், தனியார் தொலை தொடர்பு இயக்கத்தையும் வளர்ச்சி பெற வைத்து இருக்கிறது.
சில கடினமான முடிவுகளை, மத்திய அரசு தைரியமாக மேற்கொண்டதால்தான், இந்த விருது கிடைத்து இருக்கிறது. மேலும், அரசு மற்றும் தனியார் தொலை தொடர்பு அமைப்புகளின் கூட்டு முயற்சியும், இந்த விருதை இந்தியா பெற காரணமாகி இருக்கிறது.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.