ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆஸ்துமாவுக்கு ஆவிச் சிகிச்சை!
எனக்கு வயது 75. தொடர்ச்சியாக விக்கல் வந்து கொண்டேயிருக்கிறது. தொண்டையில் எரிச்சல் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து கூறவும்.
விக்கலும் மூச்சிரைப்பும் (ஆஸ்துமா) ஒரே வகையைச் சார்ந்தவை என்று சரக ஸம்ஹிம்தை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. இவ்விரு உபாதைகளும் வருவதற்கான 21 காரணங்களை சரகர் கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார்.
1. தூசி, புகை, குளிர்காற்று ஆகியவற்றை அடிக்கடி சுவாசிக்க நேரிடுதல்.
2. வீட்டில் தரை மற்றும் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருத்தல், குளிர்ந்த நீரை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துதல்.
3. உடற்பயிற்சி, உடலுறவு, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தன் உடல் வலிமைக்கு மீறி செய்தல்.
4. வறட்சி தரும் உணவுப் பண்டங்களை அதிகம் உட் கொள்ளுதல்.
5. முன் உண்ட உணவு செரிக்கும் முன்னரே அடுத்த உணவை சிறிய அளவிலோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுதல்.
6. வயிற்றில் மப்பு நிலை- அஜீரண நிலையை உதாசீனப்படுத்துதல்.
7. மலச்சிக்கலும் குடலில் காற்றும் அதிகரித்த நிலை.
8. உடல் வறட்சி;
9. அதிக பட்டினி.
10. உடல் பலஹீனம், மர்ம உறுப்புகளில் அடிபடுதல்.
11. ஒவ்வாமை உணவுகளைச் சேர்த்துச் சாப்பிடுதல். உதாரணமாக இட்லியுடன் பால், தயிர்வடை சாப்பிட்ட பிறகு காப்பி குடித்தல்.
12. பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று எண்ணி அதிக அளவில் மலக்கழிவை ஏற்படுத்தி உடலை பலஹீனமாக்கிக் கொள்ளுதல்.
13. முன்பு ஏற்பட்ட பேதி, காய்ச்சல், வாந்தி, இருமல், காசநோய், ரத்தக் கசிவு நோய், காலரா, ரத்த சோகை, விஷ உபாதை போன்றவற்றின் பின் விளைவால்.
14. உணவில் அடிக்கடி அவரைக்காய், உளுந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல். மாடு சாப்பிடும் புண்ணாக்கைச் சாப்பிடுதல்.
15. மாவுப் பண்டம், குடலில் வாயுவை அதிகப்படுத்தும் கடலை, மொச்சை, கிழங்குகள், குடல் எரிச்சலைத் தூண்டும் கரம் மசாலா, ஊறுகாய், எளிதில் செரிக்காத உணவு வகைகளை அதிகம் சாப்பிடுதல்.
16. நீர் மற்றும் குளிர்ச்சியான நிலத்தைச் சார்ந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.
17. தயிர், பாலைக் கொதிக்க வைக்காமல் சாப்பிடுவது.
18. வெல்லம், கரும்புச்சாறு போன்ற குடலில் பிசுப்பிசுப்பைத் தோற்றுவிக்கும் வகையறாக்களை விரும்பிச் சாப்பிடுதல்.
19. கபத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை ஆகியவற்றை எந்நேரமும் சாப்பிடுதல்.
20. தொண்டை மற்றும் நெஞ்சுக்கூட்டில் அடிபடுதல்.
21. உடல் உட்புற குழாய்களில் ஏற்படும் பல வகையான அடைப்புகள்.
மேற்குறிப்பிட்ட காரணங்களின் விளைவாக நெஞ்சுப் பகுதியிலுள்ள வாயுவின் சீற்றம் மூச்சுக் குழாய்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி கபத்தைச் சீற்றமடையச் செய்கிறது. இந்த வாயு- கபத்தின் சீற்றமே விக்கல் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு மிக நெருங்கிய காரணமாக இருக்கின்றன.
பிராண- உதக- அன்னவஹ ஸ்ரோதஸ் எனப்படும் மூச்சு, நீர், உணவை ஏந்திச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை விக்கலாக உருவாக்கி பெரும் உபாதையைத் தோற்றுவிக்கிறது.
தேகராத தைலம் எனும் மூலிகைத் தைலத்தை முன் கழுத்து, நெஞ்சுக்கூடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எலும்புகளுக்கு நடுவே வெதுவெதுப்பாகத் தடவி, பிரஷர் குக்கரின் உள்ளே ஆமணக்கு, நொச்சி, புங்கை, யூகாலிப்டஸ்,கல்யாண முருங்கை போன்ற இலைகளைப் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். குக்கரின் மேலே உள்ள குழாய் வழியாக வரும் நீராவியை ஒரு ரப்பர் குழாயின் வழியாக, நெஞ்சில் எண்ணெய் தேய்த்துள்ள பகுதிகளில் இதமாகப் படுமாறு செய்ய, நன்கு வியர்வையை உண்டாக்கும். இதன் மூலம் நெஞ்சினுள்ளே கபம் உருகி, வாயுவின் தடை நீங்க உதவிடும். வாயுவின் சீரான செயல்பாடு தங்கு தடையின்றி நடைபெற இந்தச் சிகிச்சை தங்களுக்கு உதவக்கூடும்.
அதன் பிறகு பார்லி அரிசியில் சிறிது நெய் பிசறி தணலில் போட, அதிலிருந்து வரும் புகையை வாய் வழியாக உள்ளே இழுத்து வெளிவிட, மூச்சுக் குழாயின் உட்புறச் சுவர்களில் படிந்துள்ள கபம் வரண்டு விடுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிராணவாயுவின் தடை நீங்கி விக்கல் குணமடைய வாய்ப்புள்ளது.
காலை உணவாக முருங்கை இலையை தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு, வடிகட்டி, கஞ்சிபதத்தில் சிட்டிகை இந்துப்பு கலந்து சாப்பிட நல்லது.
பழைய அரிசி, கோதுமை, பார்லி போன்றவை சாப்பிட நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் தசமூலசட்யாதி எனும் கஷாயம் சாப்பிட உகந்தது. தங்களுக்கு தொண்டை எரிச்சல் மாற நெல்லிக்காய் சூரணம் 5 கிராம் எடுத்து ஒண்ணரை ஸ்பூன் (7.5 மிலி) தாடி மாதி கிருதம் எனும் நெய் மருந்தைக் குழைத்து அதில் 1/2 ஸ்பூன் தேனும் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடவும். ஒரு வாரம் முதல் 21 நாட்கள் வரை சாப்பிடலாம்.
இரவில் படுக்கும் முன் சிட்டிகை வெல்லம் கலந்த சுக்குப் பொடி சாப்பிடவும்.