ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் இரு நாடுகள்
![]() |
![]() |
இணைவதற்கு இருநாடுகளுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது |
ரொமானியா மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் என்று ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இவை முன்னர் சேர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விட, மேலும் கடுமையான நிபந்தனைகளுடன் ஒன்றியத்தில் சேரும் என்று அது கூறியிருக்கிறது.
இந்த இரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்குத் தகுதி உள்ளவைதான் என்று காட்டும் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்த வழிமுறையை நிறைவேற்றியிருப்பதாக, ஆணையத்தின் தலைவர், ஜோஸ் மானுவல் பரோசோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூறினார்.
ஆனால் நீதித்துறை சீர்திருத்தம், ஊழல், மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பதில் மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
புதிய உறுப்பு நாடுகள் பெற உள்ள நிதி உதவிக்குச் சரியான கணக்கு-வழக்கு அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், அவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகள் கூட நிறுத்திவைக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தான் எதிராக இருப்பதாக பரொசோ மீண்டும் வலியுறுத்தினார்.