பட்ஜெட் பற்றிய குறிப்புகள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.
நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.
நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.
இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.
இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.
நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.
வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.
இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.
வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.
“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.
“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.
“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.
நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.
பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.
பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.
தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.
எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.
நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.
இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).