“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை
கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.
கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:
பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.
பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.