பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு
பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.
பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.
பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.
பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.