ஆண்களுக்கு சங்கம் தேவையா?
உ . நிர்மலா ராணி
பெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திருமணம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.
1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.
சில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
பதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.
பெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று மாதர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.
ஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.
உலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல! அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.
ஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க! வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க! குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)