வழக்குகள் இழுத்தடிப்பில் இந்தியாவுக்கு 206வது இடம்
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சிறை தண்டனை அனுபவிப்போர் குறைவாக உள்ளனர். 213 நாடுகளில், இந்தியா 206வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் புலன் விசாரணை இழுபறி, வழக்கு விசாரணை இழுபறி, அப்பீல் செய்வது போன்றவற்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை தண்டனையை அனுபவிப்பது இழுத்தடிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இறுதியாக தண்டனை விதிக்கப்படும் போது, அவர் இயற்கையாகவே மரணமடைந்திருக்கும் வழக்குகள் கூட உள்ளன.
போலீசார் பதிவு செய்யும் ஒரு லட்சம் வழக்குகளில், 30 வழக்குகளில் மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெறுகிறார். இது தொடர்பாக 213 நாடுகளில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குழு நடத்திய ஆய்வில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 206.
இந்தியாவை விட மோசமான நிலையில் இருக்கும் நாடுகள் ஏழு மட்டுமே.அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், நேபாளத்தை விட மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, முன்னிலையில் உள்ளன. உலகின் அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த நாடுகளின் அரசியல் முறை, மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், எந்த நாடும் இந்தியாவைப் போல மோசமான நிலையில் இல்லை.
இந்த விஷயத்தில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான். இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில், 737 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை அனுபவிக்கிறார். ரஷ்யாவில், இது 613 ஆக உள்ளது.