இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி
![]() |
![]() |
மணிப்பூர் |
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிகிழமையன்று மாநில சட்டசபைக்கான இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்த பின்னர், மலைப்பாங்கான மாவட்டம் ஒன்றில் இருந்து தலைநகர் இம்பால் நோக்கி வந்து கொண்டிருந்த துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு மணிப்பூரில் இயங்கி வரும் பல்வேறு பிரிவினைவாத குழுக்களில் யார் பொறுப்பு என்பது தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.
தேர்தல் பணி முடித்து திரும்பிய துணை ராணுவப்படையினர் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல்: 15 பேர் பலி
இம்பால், பிப். 25: மணிப்பூரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கியதில் தேர்தல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த துணை ராணுவப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
இம்மாநிலத்தின் மலை பகுதி மாவட்டங்களான டாமென்லாங், சரன்சான்பூர், சாண்டில், ஜிரிபாம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 3-வது கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. துணை ராணுவத்தின் முதல் மற்றும் மூன்றாவது படையினர் சரன்சான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோஜான்டேக் முகாமில் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். சனிக்கிழமை டாமென்லாங் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு 6 வாகனங்களில் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
டாமென்லாங் மாவட்டத்தில் பழைய கேட்சார் சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது மறைந்திருந்த 20 தீவிரவாதிகள் துணை ராணுவப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் மலைமேல் நின்று கொண்டு சக்தி வாய்ந்த கையெறி குண்டுகளை ராணுவத்தினர் மீது வீசினர்.
ராணுவத்தினரும் துப்பாக்கியால் திருப்பித் தாக்கினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 14 துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் நடந்த இடம் உள்ளார்ந்த பகுதியாக இருப்பதால் வீரர்கள் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.