போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு
புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேசம்,
- பிகார்,
- தில்லி,
- ஹரியாணா,
- பஞ்சாப்,
- குஜராத்,
- ராஜஸ்தான்,
- ஆந்திர பிரதேசம்,
- மகாராஷ்டிரம் மற்றும்
- மத்திய பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில்
- உ.பி.யில் 36 பேரும்,
- பிகாரில் 16 பேரும்,
- உத்தரகண்டில் 3 பேரும்,
- ஆந்திரத்தில் 2 பேரும்,
- ஹரியாணா,
- குஜராத்,
- மகாராஷ்டிரம்,
- ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.
செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.