பொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்
புது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.
குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.
அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
நாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.
கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு
திருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
எம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.
பொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.
பொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
சென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.
ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
மாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.