மன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு
![]() |
![]() |
புகழ்பெற்ற மடு மாதா சிலை |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த சிறுவன் பள்ளமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்று சிறப்புமிக்க கத்தோலிக்க தேவாயலமாகிய மடுக்கோவிலிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலேயே இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தையும் பிரிக்கின்ற எல்லைப்புறம் அமைந்துள்ளது என்பதும், இப்பிரதேசத்தில் உள்ள தம்பனை பெரியதம்பனை, பண்டிவிரிச்சான் போன்ற பகுதிகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மைய வாரங்களாக எறிகணை வீச்சு மோதல்களும், நேரடிச் சண்டைகளும் இடம்பெற்று வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எறிகணையானது இலங்கை இராணுவத்தினரால் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதை இராணுவம் மறுத்துள்ளது.
மன்னார், யாழ்குடா பகுதிகளில் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றிருப்பதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் உயிலங்குளத்தை அண்டிய இராணுவ முன்னரங்க நிலைகள் மற்றும் அடம்பனை அண்டிய பிரதேசம், சிறுநாவற்குளம் உள்ளிட்ட சுமார் 5 இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
யாழ் குடாநாட்டில் முகமாலை மற்றும் நாகர்கோவில் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த மோதல்கள் மற்றும் சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
திருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல்
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது.
கொல்லப்பட்வர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.