அம்ஷன் குமாரின் ஒருத்தி படம் ஓர் இலக்கியப் படைப்பின் நேர்த்தியான திரை வடிவமாகியிருக்கிறது
– இளமதி்
02-06-2007 அன்று மாலை சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் அம்ஷன் குமாரின் ஒருத்தி படம் திரையிடப்பட்டது. 2003ஆம் ஆண்டே வெளிவந்த படமாக இருந்தாலும் திரைப்பட விழாக்கள் தவிர்த்து மிகச் சில இடங்களிலேயே இப்படம் திரையிடப்பட்டது. அம்ஷன் குமார் சிறந்த திரைப்படத்திற்கான புதுவை அரசு விருதை ஒருத்திக்காகப் பெற்றிருக்கிறார். இந்தப் படம் நியூஜெர்ஸி சிந்தனை வட்டத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
கி. ராஜநாராயணனின் ‘கிடை’ குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம். ஓர் இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்குவது, திரைக்கதைக்கு ஏற்றவாறு அந்தப் படைப்பில் மாற்றங்கள் செய்து திரை ரசனையை மேம்படுத்துவது என்ற இரண்டு விதங்களில் ஒருத்தி இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
பெண்மீதான பாலின அடிப்படையிலான ஒடுக்குதலையும் அவள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்ற ரீதியில் அவள்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் ஒருசேர இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் கரிசல் கிராமம் ஒன்றில் நடைபெறுவதாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆட்டுக் கிடையைப் பராமரிக்கும் பணியாள் சிவனி, தான் வாழும் ஊரின் மீதும் வளர்க்கும் ஆடுகளின் மீதும் கரிசல் மண்ணின் மீதும் அளவில்லாத காதலும் பரிவும் கொண்டவள். சிவனிக்கும் உயர்சாதி இளைஞன் எல்லப்பனுக்கும் காதல் ஏற்பட, தினசரி மந்தை மேய்ப்பில் இவர்களது சந்திப்பும் ஓர் அங்கம் ஆகிறது.
சாதி வேறுபாட்டால் இவர்களின் காதல் திருமணத்தில் முடியப்போவதில்லை என்று சொல்லும் தோழிகளிடம் சிவனி, “எல்லப்ப சாமி சாதியில ரெண்டு பொஞ்சாதி கட்டிக்குவாகளாம். அவுக சாதியில ஒன்னைக் கட்டிக்கிட்டு என்னையும் கட்டிக்குவாகளாம்” என்று வெகுளித்தனமாக பதில் சொல்கிறாள்.
அடுத்தவர் விளைச்சலை மேய்ந்து கெடுத்த அவளது ஆடுகள், இவர்களது காதலை ஊராரிடம் காட்டிக்கொடுக்கின்றன. எல்லப்பன் கிடைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறான்.
இதற்கிடையே, வரி வசூலிக்க வந்த வெள்ளைக்கார துரைக்கு ஜமீன்தாரரின் ஏமாற்றுத்தனத்தையும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிவனி புரியவைக்கிறாள். துரையும் ஜமீன்தாரின் தலையீட்டை ஒழித்து அரசிடம் நியாயமான வரியைச் செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
நன்மை செய்த சிவனிக்கு ஊரார் ஏதேனும் கைம்மாறு செய்ய நினைத்து ஒரு கிடை ஆடுகளைத் தரத் தீர்மானிக்கிறார்கள். ஜமீன்தாரின் தண்டனைக்கு ஆளாகும் சிவனி, தன் காதலை நிறைவேற்றிவைக்கக் கேட்கிறாள். சாதி அவர்களைத் தடுக்க, ஊரார் எல்லப்பனையும் சிவனியையும் ஊரைவிட்டு எங்காவது போய்த் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள்.
தான் நேசித்த மண்ணையும் உயிராக வளர்த்த ஆடுகளையும் தனது சனங்களையும் விட்டுப் போக மறுக்கிறாள் சிவனி. எல்லப்பன் இரண்டு மனைவியரோடு வலம் வருகிறான்.
வெள்ளைக்கார துரை விட்டுச் சென்ற எழுதும் இறகைக் கையில் ஏந்தித் தன்னம்பிக்கையோடு நம்மைப் பார்க்கிறாள் சிவனி. அவள் தன்னம்பிக்கையையும் எழுத்தறிவின் பலத்தையும் பெறப்போவதைச் சொல்லும் கருவியாக அந்த இறகு உதவுகிறது.
கி.ரா.வின் ‘கிடை’யில் வரும் சிவனிக்குப் பேய் பிடித்துவிடும். அம்ஷன் குமாரின் சிவனி, கல்வியோடு நம்பிக்கையைப் பெற யத்தனிக்கிறாள். பெண்ணாக இருப்பதால் எதிர்கொள்ளும் ஆதிக்கச் சவால்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவள் என்பதால் கூடுதலாகின்றன. ஆதிக்க மனோபாவத்தை மீறித் தன் மண்ணையும் ஆடுகளையும் உயிராகப் பாவிக்கும் சிவனியின் நம்பிக்கையும் இயற்கையின் மீது கொண்ட காதலும் ஒருத்திக்கு பலமாக இருப்பதை உணர முடிகிறது. சாதியப் பிரச்சினைகளைப் பேசினாலும் கதை முழுதும் ஒரு பெண்ணின் உணர்வுகள் சார்ந்ததாக இருப்பதைப் பார்க்கலாம்.
கதை நகரும் சூழலும் அந்தச் சூழலின் மனிதர்களும் அவர்களது மொழியும் கரிசல் காட்டுக் கதையொன்றை அப்படியே திரைக்கதைக்குள் வர முடியும் என்பதை அம்ஷன் குமார் காட்டியிருக்கிறார்.