பகல் கனவாகும் வேலை வாய்ப்பு
ப.செ. சங்கரநாராயணன்
ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.
1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)
இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.
தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.
33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.
உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.
இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).
இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.
குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.
சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.
பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.