புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி
![]() |
![]() |
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி |
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா
இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.
மன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.
மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
வவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா
இலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.
சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.
அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு
ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெஸ்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.
இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.
எதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி
![]() |
![]() |
இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.
சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
தமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.