Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘ICRC’ Category

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Sri Lanka faulted for public use of International Committee of the Red Cross (ICRC)’s confidential findings

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008


கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

 


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெஸ்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.

எதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

 


ரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி

 

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.

சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

தமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 

Posted in Eelam, Eezham, HR, ICRC, IDP, LTTE, missing, Red Cross, rights, Secrets, Sri lanka, Srilanka | Leave a Comment »

Nepal: ICRC seeks to clarify the fate of more than 800 missing persons

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.

மேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Posted in armed conflict, Clan, Communism, Communist, Democracy, Dictatorship, Government, ICRC, Insurgency, King Gyanendra, Lockup deaths, Maoists, missing persons, Monarchy, Nepal, political disappearances, Rebels, Red Cross, RTI, security forces | Leave a Comment »