Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Hurt’ Category

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை

சென்னை, பிப். 6-

நடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.

காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.

அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.

Posted in Accident, Ajeethkumar, Ajith, Ajitkumar, Fight, Greedam, Hurt, Kreedam, Location, Movie Spot, Shooting, Shoulder, Sick, Tamil Actor, Tamil Actress | 4 Comments »