ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சளி பிடிக்காமல் இருக்க வழி!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் தருணத்தில் நீர்கோர்த்தல், தும்மல், மூக்கடைப்பு, மார்புச் சளி என்று வந்து படிப்படியாக இறுதியில் இருமலால் பாதிக்கப்படுகிறேன். எனக்கு வயது 80. இந்நோய் வருமுன் காக்க, ஆயுர் வேத மருத்துவம் கூறவும்.
வை.கார்த்திகேயன், புதுச்சேரி.
கோடைக்காலத்தில் சூரியனின் உஷ்ணத்தால் சூழ நிற்கும் காற்றுமண்டலமும் கொதிப்படையும். பூமியிலுள்ள தண்ணீர் வற்றும். நீர் வறட்சியால் காய்ந்த உணவுப் பொருள்களில் இனிமை குறைந்து கசப்பும் துவர்ப்பும் காரமும் மிகுந்து காணப்படும். இவற்றைச் சாப்பிடுவதால் மனித உடல் வறட்சியும் சூடும் மிகுந்து இளைத்துவிடும். கோடையில் ஏற்படும் நாவறட்சியைப் போக்க அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பதும், குளிர்பானங்களைக் குடிப்பதாலும் அளவுக்கு மிஞ்சி வயிற்றில் தண்ணீர் சேரும். இதனால் உணவை ஜீரணம் செய்வதற்காக குடலிலும், இரைப்பையிலும் சுரந்துள்ள புளித்த திரவங்கள் நீர்த்து சக்தியற்றுவிடும். உண்ட உணவின் ஜீரணம் தடைபடுவதுடன் குடித்த குளிர்ந்த நீரும் ஜீரணமாகாமல் ஸ்தம்பித்து வயிற்றிலேயே நின்று வயிறு உப்பக் காரணமாகும். வயிற்றில் இதுபோன்ற நிலையில் தங்கும் தண்ணீர் உடலைக் கனக்கச் செய்து அசதி, தலையில் நீர்க்குத்தல், மார்புச் சளி, இருமல் முதலியவற்றை உண்டாக்கும்.
இந்த ஜல அஜீரணத்தை வளரவிட்டால் அது ஏற்படுத்தும் உபாதை அடுத்த பருவ காலங்களிலும் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளால் தொல்லையைத் தரும்.
கடும் கோடையில் அதிகமாகத் தண்ணீரைக் குடிக்காமல் வாய் வறட்சி நீங்க குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளிப்பது, முகம், கை, கால்களைக் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்வது நல்லது. நீர்க்கோர்வை, மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவற்றைத் தவிர்க்க,
*சுக்கு, கொத்தமல்லி விதை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பது,
*சூடான பாலுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது,
*மோரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்லது.
நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்பட மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். அவை வருமாறு:
*தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது. அண்ழ் ஸ்ரீர்ர்ப்ங்ழ் காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல்.
*நல்ல காற்றடக்கமுள்ள சூடான அறையில் வென்னீரில் குளித்துவிட்டு, உடனே குளிர்ந்த காற்றுள்ள அறையில் வந்து நிற்பது.
*உடலில் நல்ல வியர்வை இருக்கும் போது அது அடங்கும் முன்னரே குளிர்ந்த பானத்தைப் பருகுவது.
*குளித்த பிறகு ஈரமுள்ள தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளுதல்.
நீங்கள் சீதோஷ்ண சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீர்க்கோர்வை வராமல் பார்த்துக் கொள்ளலாம். கோடையின் இறுதியில் ஆயுர் வேத மூலிகைத் தைலங்களாகிய அஸனபில்வாதி தைலம், அஸன மஞ்சிஷ்டாதி தைலம், அஸன ஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வாரமிருமுறையோ அல்லது தினமுமோ தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு கொதித்து ஆறிய தண்ணீரில் குளிக்கவும். அதன்பிறகு ராஸ்னாதி சூரணத்தை உச்சந் தலையிலும், பிடரியிலும் தேய்த்துவிட்டுக் கொள்ளவும். ஜலதோஷம் ஏற்படாமலிருக்க இந்தச் சூரணம் உதவி செய்யும்.
உங்களுக்கு வயது 80-ஐ நெருங்கிவிட்டதால் உடலின் சகிப்புத் தன்மைக் குறைவால் ஏற்படும் இந்த உபாதையைத் தடுக்கவும் உடலுக்குப் பலம் தரக் கூடிய மருந்துகளையும் சாப்பிட வேண்டும். தாளீசபத்ராதி சூரணம் 5 கிராம், மஹாலக்ஷ்மி விலாஸரஸம் மாத்திரை, கற்பூராதிசூரணம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.